Monday, May 30, 2022

வாக்கு தேவதை

 ஐந்தாகும் முன் --மூன்றோ நான்கோ வயதினிலெ

உன் முன் வைத்திருந்த

வளைவுகள், சுருள்கள் கொண்ட எழுத்துக்களும்,

உருட்டல்கள், வளைத்தல்களைச் செதுக்கி

நேர்கோடுகளைக் கொண்ட எழுத்துக்களும்—

மலையாளம், தமிழ் எழுத்துக்களைக் கொண்ட

காகித அட்டைகள்……

குருநாதர் மடியிலும், அப்பா மடியிலும்

பட்டு வேட்டி உடுத்தி உட்காரவைத்து,

தன் பிஞ்சு விரல்களைப் பிடித்து,

உன் முன்னால் தாம்பாளத்தில்

பரப்பியிருக்கும் தானியத்திலும்,

கீழே பரப்பியிருக்கும் வெள்ளை மணலிலும்,

ஆனா, ஆவன்னா என்று எழுத்துக்களும்,

1, 2 என்று எண்களும் எழுத வைத்து

பள்ளிக்கிருத்திய

பிஞ்சுநாள் நினைவுகள்

எதோ முன் ஜென்மத்தில் நடந்ததுபோல்…………!

அன்று தொட்டு இன்று இக்கணம் வரையிலும்

என்னை ஆட்டிப் படைக்கும்

வாக் தேவதையே

உனை அடிபணிகிறேன்…..

நீல பத்மநாபன் 15—10—2021 விஜயதசமி

நினைவஞ்சலி :

 மணி நாதம்

நிலைத்துவிட்ட மணி நாதம்…

பார்வதி புரத்தில்—நாகர்கோயில்- பிறந்த

கணீரென்ற குரலின் அதிபதி-- சுப்ரமணியம்

மத்திய அரசில் வேலை பார்த்த அப்பா,

அனந்தை நகருக்கு மாற்றலாகி

வந்தபோது, கூடவே வந்து,

வடக்கு பார்த்து நிற்கும் செந்திட்டைஅம்மன்

சன்னிதியில் கிழக்கு மேற்காய்

சாஷ்டாங்மாய் கிடக்கும் அக்கிரகாரத்தில்,

சீட்டுகெட்டாய், அடுத்தடுத்திருக்கும்

அகங்களொன்றில் நெடுநாள் வாசம்….

பக்கத்தில் காந்தளூர் சாலை-கிள்ளியாற்றின் கரையில்

அமைந்திருக்கும் பழம்பெரும் உயர்நிலைப் பள்ளியில்

இவன் பள்ளித்தோழன்….

பிறகு, வீழ்ந்த காலத்திரை

விலகுவது பல ஆண்டுகளுக்குப்பின்

டில்லியில்…….

இந்திய எழுத்தாளர் சங்க—ஆதேழ்ஸ் கில்ட்-எஜிஐ

கூட்டத்தில் பங்கெடுக்க முதன் முறையாக

டிஸம்பர் குளிரில் வெடவெடக்க இவன்

டில்லி விஜயம்….

’காந்தி பீஸ் பௌண்டேஷனி’ல்

நாலு நாள் வாசத்தில் ஒரு நாள் மாலையில்

காநாசு வீட்டுக்குக் கூட்டிச்செல்ல,

இவன் தங்கியிருந்த இடத்திற்கு

தன் காரில் வந்த மணியுடன் மறு சந்திப்பு

எத்தனையோ ஆண்டுக்களுக்குப்பின்…

இவன் அடைந்த இன்ப அதிர்ச்சி

வாக்குக்களுக்கு அதீதமானது……

”தலைமுறைகள்” காநாசு கைவண்ணத்தில்

ஆங்கிலத்தில் “ஜனறேஷன்ஸ்” ஆனபோது

கொச்சைப் பதங்களை இத்தனைக்கு

பொருளை கோட்டைவிடாது ஆங்கிலத்தில்

ஆக்கியதின் மர்மம் புரிந்தது……!

காநாசுவின் மாப்பிள்ளை--மகள் கணவன் மணி…

பிறகு, அடிக்கடி நாகர்கோயில் போகும் போது

அனந்தைக்கு வரும்போதெல்லாம்

தன்னையும் இன்னொரு பள்ளித்தோழன்

பாபுவையும் வீட்டில் வந்து சந்தித்து

நட்பைப் புதுப்பித்துக்கொண்டிருந்த மணி…

 அடுத்தக் கட்சி சில ஆண்டுக்களுக்குப்பின்

சென்னையில் தனியாய் ஒரு பிளாட்டில்

குடி வந்தபின்னர்……

அடிக்கடி தொலைபேசித் தொடர்ப்பு…..

கோட்டைக்கல்லில் சில நாட்சிகிச்சை…

சென்னைத் திரும்பியப் பின்னர்……

சற்று வினோதமான ஓர் வேண்டுகோள்..

அவரைப்பற்றி வெளியிடவிருக்கும் புத்தகத்திற்கு

ஓர் கட்டுரை கொரி……

தட்டமுடியாமல் அனுப்பி வைத்தான் இவன்…

நல்ல முறையில் வெளியான நூல்…..

ஆண்டு தோறும் ஏப்ரல் இருபத்திஆறுக்கு

அதிகாலையில் பிறந்ததின வாழ்த்துக்கள்

தொலைபேசியில் தெரிவிக்கும் உன் நாதம்

அடுத்த ஆண்டு—2022-ல் இல்லை……

காலம் ஓடோடி, தன்னை முந்திவிட்ட

நண்பா….நானும் பின் தொடர்வேன்

வெகு விரைவில்…….

14—12--2021 நீல பத்மநாபன்

 

 

 

Wednesday, May 25, 2022

இன்று இன்னுமொரு நாளே

இன்று தீபாவளி…

விடிந்தும் விடியாத காலைப்

புலர்கையில், வெளியில்,

அண்டையிலும், அகலத்திலும்

கிடுகிடுக்கவைக்கும்

பட்டாஸ் முழக்கங்கள்….

வானில் மின்னி மறையும்

ஜோதி கோளங்கள்…புஸ்வாணங்கள்……

சின்னாட்களில் பயந்தும் பயத்தை 

வலுக்கட்டாயமாக விரட்டி வெல்ல முயன்றும்

காலைப் பொழுதுகளில், மத்தாப்புக்கள்,

பட்டாஸ்கள் கொளுத்திய நினைவுகளில்

முழுகி, முக்குளியிட்டு

கீழேக் கீழேச் செல்லச் செல்ல

பிரக்ஞை மங்கி மயங்கி……,மழுங்கி,,,,,,,

நீல பத்மநாபன்

27-10-2019   தீபாவளி நாள்

தொடரும்

சுட்டெரிக்கும் நினைவுகள், கனவுகள்…..

கட்டுக்கடஙா உறுப்புக்கள்……

கிட்டெக் கிட்டெ வந்து

கவ்விடாமல்

எட்டயெட்டப்

போய்விடும்

துட்ட நாய்…..

நாய்க்கும் பேய்க்கும் கூட

வேண்டாத

இந்த பாவஜென்மம்இன்னும்

எத்த்னை நாள்

சர்வேசா………?

 

நீல பத்மநாபன் 20—7--2021

 

நானே ராஜா

 நாட்டில் நோய் நொடிகள். பஞ்சமும் பசியுமென்று

பிரஜைகள் அழுது அரற்றிக்கொண்டு,

ராஜாவிடம் வந்து முறையிட்டபோது

வாயிலும் வயிற்றிலும்

அடித்துக்கொண்டு

குய்யோ முறையோ என்று

ஓவென்று ஒப்பாரி வைத்து

அழுது புரளும் ராஜா……….

25—5—2021 நீல பத்மநாபன்

உப்பு

ரத்தத்தில் கலந்திருந்த உப்பெல்லாம்

எங்கே, போய் தொலைந்ததோ? ஏனோ..?

சோடியம் குறைந்து விட்டதென்று,

மூன்று நேர உணவில்

உப்பைச் சேர்த்துக்கொள்ள

தண்டனை விதித்தார்கள் மருத்துவர்கள்--

யூறாளஜியும், நியோறஜியும்…..!

உப்பில்லா பண்டம் குப்பையிலே….,

உப்பிட்டவரை உள்ளளவும் நினை….

--பழமொழிகள்…,

உப்பைபோல் நேசிக்கிறேன் என்ற

புத்திரியை நாடு கடத்திய மன்னவர்

கடைசியில் தவறை உணர்ந்து

பச்சாதபித்த பழங்கதை..,

--இவையெல்லாம் இப்போ

ஞாபகத்தில் வர

உணவு நேரங்கள் மூன்றையும்

விதிக்கப்பட்ட தீரா தண்டனையாய்

உணவில் உப்பை அள்ளிப்போட்டு

உள்ளே கொட்டி, உயிர் தரித்து,

கருணைக் கொலையைக்

காத்திருக்கும் நிலைமை……..

 

நீல பத்மநாபன் 10—1—2022


Tuesday, August 11, 2020

ஏனோ.....

சென்ற சில நாட்களாக
நிசிகளின் நடு யாமங்களில் 
நித்திரையின் இடைவெளியில்
காலத்தில் கரைந்த பின்னர், 
தான் சதா பார்த்துப் பழகும்
இந்த படுக்கை, அறை, வீடு, வெளியெல்லாம் 
எப்படியிருக்கும் என்ற வினோத கற்பனை……. 
 நாளொன்றாகும் முன் அணிந்திருக்கும் ஆடைக் களைந்து 
புத்தாடை கொள்ள 
ஆர்வம் கொள்ளும் மனமே, 
ஆண்டாண்டுகள் உருண்டோடி 
காலப் பழக்கத்தில் பழுதுகள் நேர்ந்த, 
கூண்டைக் களைந்து ”வெளி” யில் ஏற’ 
அவசமா…..இல்லை..அச்சமா…….…….. 

 நீல பத்மநாபன் 19-7-2020