Sunday, July 19, 2009

கோபியின் கொஞ்சல்

கோபியின் கொஞ்சல்

கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா
உனை மீண்டும் அடைந்திட
ஆசை கொண்டு
பிறவிகள் பல
வேண்டிப் பெற்று
யுகாந்திரங்கள் பல
நீந்திக் கடந்து
கலியுகம் தாண்டியிந்த
கணினி யுகத்தில்
தனிப்பட்டுப் போன
தற்கால கோபியின்
குமுறல் இது

மானிடப் பிறவியின்
இடையறா இன்னல்களை
மறந்திட
ஆயர்பாடியில்
ஆடிக்களித்த
ஆனந்த நாட்களை
கனவதில் காண்கின்றேன்
கனிவுடன் கரைகின்றேன்
அந்த நாளும் வந்திடாதா என
ஆறாத பிரிவுத் துயரால்
வாடி வதங்கின்றேன்


உள்ளம் உருகிட
கண்ணீர் வடிந்திட
உனை நாடிய ராதையின்
விழிநீர் நீ
துடைக்கலையோ
செயலிழந்த பார்த்தனுக்கு
பாதை நீ காட்டலையோ
பிஞ்சு நாள் ஏழைத்தோழனை
கை கொடுத்து தூக்கலையோ
நாராயணீயம் பாடியவரின்
கொடும் நோய் அகற்றலையோ


கர்ம யோகத்தின்
கரடுமுரடான பாதைகள்
கடந்து
உற்றம் சுற்றம்
மாயையெனப் புரிந்து
புருஷாயிசின்
கடைக்கோடியில்
மீண்டும் உனை நாடி
வந்து நிற்கும்
இவன் முன்
ராதை முன் ரமணனாய்
அசுரர் முன் மோகினியாய்

இன்னுமொரு
ரமணியின் கோலம் கொண்டு
வந்திடலாகாதோ
நெஞ்சத்து சுமையெல்லாம்
கண்ணீராய் கரைந்துருக
உன் திருமடியில் தலை வைத்து
அழுது தணிந்திடும்
அருட்பேற்றை
தந்தருளும் பெரும் தயையை
வரி வழங்கிடலாகாதோ
என்னருமை ராதையின்
கிருஷ்ணா கார்முகில் கண்ணா

Get this widget | Track details | eSnips Social DNA

Saturday, July 18, 2009

சீதாயணம்

சீதாயணம்

மாயமான்களின்
கவர்ச்சி லீலைகளின்
பின்னால் செல்லும்
லௌகிக நெஞ்சங்கள்
கொண்டவன்
அவதார புருஷனாகலாம்
நாலும் தெரிந்த
புருஷோத்தமனாகலாம்
இருந்தும்
'மான் அன்று அது மாயமே'
என சோதரர் சொல்லுக்கு
'இவ்வாறு இருத்தல் இயலாதோ'
என தன் சித்தத்தை
குளிர்விக்க
மாயமான்களின்
வேட்டைக்கு
விரைந்து செல்ல
பதியை தூண்டிடும்
பத்தினிகோலங்கள்தான்
இன்றும்

மாயமான்களின்
கபட ஓலங்களின்
சூழ்ச்சிக்குறி அறியாது
வீண்பழிக்கு ஆளாக்கி
நலம்நாடிகளை விரட்டியடித்து
இலக்குவக் கோடுகளையும்
தாண்டி வந்து
யுத்த காண்டத்திற்கு
வழி வகுக்கும்
கோமாளாங்கிகள்

தாய்ப் பாசம்

தாய்ப் பாசம்

புத்திர வாஞ்சை
அமிதமாகிவிட்டால்
கூனியின் சொல்தானா
தாரகை மந்திரம்
மூத்தவன்
அவதாரமாயினும்
வெறும்
சக்களத்தி மகன்
கொண்ட கணவன்
பார் புகழும்
நல்லரசனின்
நாடு நீங்கல் கூட
திரணமாய்
தோன்றிடுமோ

அறுபத்தியெட்டு

அறுபத்தியெட்டு

பிஞ்சிலே பழமாகிவிட்டால்
காய்ப்பருவம் முழுமை பெறுமோ
பழப்பருவத்தில் விதைக்காய்
மண்ணுக்குள் கரையத்தானே
காலபைரவன் காட்டும் வழி
அவசிய அனாவசியங்களுக்காய்
அமிதமாய் விரையம் செய்த
உணர்ச்சிகளால்
பிஞ்சிலே மிஞ்சிவிட்ட
முதுமை 'கிழ'மை

காண்டீபம் கீழ்வைத்த
பார்த்தனுக்கு ஊட்டிய
எதிர்கொள்ளும் வலிமையின்
துளியிலும் துளியதை
உன் ஊரில் வந்து நிற்கும்
வயோதிகனுக்கும் தந்தருள
குருவான அப்பனே
உன் தாழைப் பணிகிறேன்

Monday, July 13, 2009

குற்ற சம்மதம்

குற்ற சம்மதம்

கொலையொன்று செய்தேன்
பல நாட்களாய்
கதவு கட்டளை
புத்தகம்
படுக்கையறை
பேதமின்றி
கண்ணுக்குத் தெரியாது
ஓடிக்களித்தும்
கருவண்ணக் கழிவுகளை
மனம்போல் விதைத்தும்
பற்களின் பதிவுகளை
அழுத்தமாய் பதித்தும்
போக்குக் காட்டிக்கொண்டிருந்த
உனக்கு
கருணைக் கொலைக்குத் தந்த
மணம் கமழும் கேக்கை
ஆன்மாவில்
தேக்கி வைத்திருக்கிறாயா
என்னருமை மூஷிகனே
வரும் பிறவியில்
திருப்பித் தந்திட

Wednesday, July 8, 2009

முழுமையை நாடி

முழுமையை நாடி

உள்ளுருகும்
பண்ணை செவிமடுத்து
மனம் நெகிழ்ந்து
இசைக்க நினைக்கையில்
படைப்புத் தினவின்
சிகரத்தின்
அற்புத உருவை
எழுத்தாணி வழி
வார்த்தையாய்
வடிக்கையில்
உலக மகா தத்துவங்களை
காலம் காலமாய்
கண்டெடுத்து
கடைந்தெடுத்து
ரத்தினச் சுருக்கமாய்
உரைத்திட
குரல்வளையில்
கொணர்கையில்
.............

Tuesday, July 7, 2009

மாறாட்டம்

மாறாட்டம்

யாராரும் அறியாது
கடைசி வரிசையில்
கூட்டத்துடன் கூட்டமாய்
நின்று செல்ல வந்தவனை
கைப்பிடித்தழைத்து
மேடைக்கு
இட்டு வந்ததும்
உள்ளுக்குள்
ரீங்கரித்த
அதே கேள்வி
ஆள் மாறிப்போச்சோ

Monday, July 6, 2009

ஒரே பால் மணம்

ஒரே பால் மணம்

இவ்வுலகில் வாழ்கையில்
பரஸ்பரம் குதறிக்கிழித்துக்
கொண்டிருந்தவர்கள்
சாவூர் சென்றதும்
ஒன்றாய் இணைந்தனர்
முறைப்படி
ஒரேபால் மணத்திற்கு
தடையுத்தரவு இல்லையாம்
அங்கே

வந்த சுவடு தெரியாமல்

வந்த சுவடு தெரியாமல்

ஆர்ப்பரித்து வந்த
எதிர் காற்றினில்
அடிபதறாதிருக்க
அழுத்திக் காலூன்றிய
கட்டங்கள் கணங்கள்
இல்லையென்பதில்லை
இருப்பினும்
இப்போதெல்லாம்
வந்த சுவடு தெரியாமல்
போய்விடவே ஆசை

Sunday, July 5, 2009

இலை உதிர் காலம்

இலை உதிர் காலம்

பஞ்சு போன்ற கால் பதித்து
மெல்ல அணுகிடும்
சரத்கால கொழுந்துகள்
தளிர்த்திட
இதயமெனும்
இகலோக விருட்சத்தின்
இலைகள்
கருகிச் சருகாகி
உதிரச் செய்திடவும்
மீண்டும்
தளிரிட்டுத் தழைக்கவும்
செய்திடும்
விந்தைகள் வினைகள்
காலம்காலமாய்
களைக்காமல்
நிறுத்தாமல்
செய்துகொண்டிருக்கும்
நாயகனே
உன் பாதம்
சரண்

Wednesday, July 1, 2009

மிரட்டல்

மிரட்டல்
கண்ணே
கோயில் பிரகாரங்களில்
புகை,பேசும்,வரைப்படங்களில்
நிஜ உருவில் கூட

தலையும்
முலையும்
யோனியும்
ஒன்றிணைந்திருக்கும்
அம்மணமும்
முழுவடிவில்
அழகுதான்
அதுக்காக
ஒவ்வொன்றாய்
முழுசாய்
மொண்னையாய்
தூக்கிக்காட்டி
மிரட்டலாமா