Thursday, June 9, 2022

நிசாகந்தி

பட்டப் பகலில் வெட்டவெளியில்

வெளிச்ச வீச்சில் பகிட்டைக் காட்டி

இதழ் விரித்து விரிந்து நிற்கும்

மலர்கள் போலன்றி

இரவின் சூழலில்

இருளின் மடியில்

சோக வெறுமையில்,

தன்னைக் காட்டி ஆட்டம் போடாமல்

எங்கிருந்து வருது எனத் தெரிவிக்காது

மெல்லிசான சுகந்தத்தைத் தந்து

அடிமனதில் அமைதியை, ஆறுதலை

தந்தருளி இறையம்சத்தை

வாரி வழங்கிடும்

சுகந்திப் பூவே

நீ வாழ்க…… வளர்க……..

நீல பத்மநாபன் 1—9--2021

காத்துக்கிடப்பேனே கவியரசீ

அரியாசனத்தில் உனை அமர்த்தி

அழகு பார்த்தனர்

ஆராதித்தனர்

சான்றோர்கள்

இலக்கியக்கலையின்

அரசியென புகழாரம் சூட்டினர்….!

எல்லோரும் இந்நாட்டு மன்னரென்ற

புதுயுகம் இந்நாளில்

விரலுக்கேற்ற வீக்கமென

உனை சேவிப்பவர்கள்

பெருகிவிட்டதில்

அகமகிழ்ந்தனர் ரஸிகர்கள்…..

மாறாக, அரஸிகர்கள்

குருடர்கள் பார்த்த யானைபோல்

விளக்கங்கள், விதிமுறைகளுக்கெல்லாம்

அப்பாற்பட்ட உன் சொரூபத்தில்

பரவசப்படத் தெரியாது

உதாசீனம் செய்தாலும்

உன் கடைக்கண் பார்வைக்காக,

மிச்ச நாளிலும் உனை சேவித்தவாறு

காத்துக் கிடப்பேனே கவியரசீ……

நீல பத்மநாபன் 15—1--2022..

நிம்மதி

பளிங்கு போன்றத் தெளிந்த

நீரைக்கொண்டத் தடாகத்தை

நொடிப்பொழுதில்

கலக்கிவிடும்

யமதூதன் வாகனம் போல்

சின்ன மனங்களின்

ஊசிமுனைக் குத்தல்களால்,

குயுக்திகளால்

நிர்மலமான நெஞ்சகத்தை

நிம்மதி இழக்கச்

செய்யலாமா……..?

நீல பத்மநாபன் 6—11—2021

துளிகள்

நுனியில் நிற்கும் துளிகள்…..

அவற்றை வெளியேற்றுகையில்

கிடைக்கும்

கண நேர சுகத்திற்காக

என்னென்ன பொய் வாக்குறுதிகள்……!

எத்தனை எத்தனை

விபரீதங்கள்……

வினோதங்கள்…..

கட்டுக்கடஙா கற்பனைகள்……

புராண, இதிகாசங்களில்

எத்தனை எத்தனை கதைகள்

வரலாற்றுப் பாதையில்

சரிந்துவிட்ட

சிம்மாசனங்கள்,

சாம்ராஜ்யங்கள்

எத்தனைஎத்தனை…..!

நீல பத்மநாபன் 8—1--2022

ஜென்மாந்தரம்

இந்தப் பிறவியின் முடிவு

நெருங்கிக்கொண்டிருக்கையில்

இகலோக வாழ்வின் ஆசைகள்,

அபிலாஷைகள், பிடிப்புக்கள் யாவற்றையும்

கொஞ்சம் கொஞ்சமாய் கழற்றி,

உதறி விலக்கிக்கொண்டிருக்கும்

கைங்கரியம் முழுமூச்சில்….

இதைச் செய்யாவிடில்

மரண வேளையிலும்

நிறைவேறாது மிச்சமீதியிருப்பவற்றை

செய்து தீர்க்க

இனியுமொரு ஜன்மம் உறுதி…..

எனவே, கொஞ்சம் கொஞ்சமாய்

ஆசை அபிலாஷைகளைக் களைய

முழுமூச்சில் முயன்றவாறுக்

காத்திருக்கும் காலத்தில்

மனமெங்கணும் எப்போதும்,

நெருக்கமான நீத்தார் நினப்புத்தான்…,

ஒரு கணம் கூட

நிம்மதியில்லா நிலைமை

இறுதி நொடிக்காகக் காத்திருந்துக் ,காத்திருந்து

நிலை குலைந்து, குமைந்து,, கலைந்த மனதை

ஒரு நிலைக்கு கொணர,

இந்நாள் வரை ஈடுபாடுகொண்டிருந்தவற்றில்

மீண்டும் செயல்படுவது

குருஷேத்திரக் களத்தில் கர்மம் செய்தவாறு

மடிந்து வீழ்வது தான் உத்தமம்

நிஷ்காம கர்மம் என்ற ஞானோதயம்….

மீண்டும் செயல் களத்தில்……..!

நீல பத்மநாபன் 14—1--2022

சென்ற, நிகழ் காலங்கள்

இளம் காலைப்பொழுதுகளில்

தூங்கியது போதும்

எழுந்து கடமைகளைச்செய்

என பட்சி ஜாலங்களின்

பள்ளியெழுச்சி கீதங்கள் கேட்டும்

பரிதியின் இளம்கதிர்களின்

இருளகற்றும் இந்திரஜாலங்கள் கண்டும்

நித்திரை கலைந்தெழுந்த நல்ல நாட்கள்

இனி திரும்பி வரவே வராது போய் மறைந்துவிட்டனவா….?

இப்போதெல்லாம் இரவில் படுக்கையில்

விழும் நேரத்திலிருந்து காலை புலர்ந்த பின்னரும்

தொடரும் வியதிகளின் உபாதைகளும்

நடைமுறை வாழ்வுடன்உற்ற சொந்த பந்தங்களுடன்

ஒத்துப்போக இயலாத மானசீக சித்திரவதைகளும்

இறுக்கங்களும், பித்ருக்களைப்பற்றிய

சின்னசின்ன நினைவலைகளும்

அவர்கள்கூடப் போய்ச்சேர்ந்தவிடமாட்டோமா

என்ற ஏக்கங்களும் தொடரும்

நிகழ் காலம்……………

நீல பத்மநாபன் 16—6--2020

நல்லரசு/ வல்லரசு

 இதனால் அனைவருக்கும்

தெரிவிப்பது என்னவென்றால்

இந்நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும்

குழந்தை குட்டிகள், ஆண்கள் பெண்கள்,

இளைஞர்கள், வயோதிகர்கள் வேறுபாடின்றி

மருத்துவ ரீதியில் தகுதியுள்ள சகலமான பேர்களுக்கும்

மொபைல்மருத்துவ மனையில்

அவரவர் குடியிருப்பில் நேரில்ச் சென்று

கோவிட் தடுப்பூசி வழ்ங்கப்படும் ,

முன்பு பெரியம்மை., காச நோய்களுக்கு

தடுப்பூசி தந்தது போல்……

சுவர் இருந்தால் தானே சித்திரம் தீட்ட….!

டும்….டும்…. டும்

9—5—2021 நீல பத்மநாபன்