Monday, May 30, 2022

இக்கவிதைகள்

 ”சாயங்கால மேகங்களு”க்கு (2019)ப் பிறகு சென்ற ஆண்டு-2021 வெளியான ”நகுலம்”

நீள்கவிதைக்கு முன்னும் பின்னும்(2019-2022) எழுதியவை இவை.அன்று (2019) நான்

குறிப்பிட்டிருந்தவாறு, வயோதிக சகஜ வியாதிகள், உள்ள உளைச்சல்கள்-அதிர்வுகளில்

அவதிப்பட்டுக்கொண்டிருக்கையில் இப்படியும் கொஞ்சம் கவிதைகளை படைப்பேன் என்று நினைக்கவில்லை.

இன்றுத் திரும்பிப் பார்க்கையில், இன்னொன்றுப் புலப்படுகிறது. பிஞ்சு நாட்களில், பாட்டி, அம்மா, அப்பா இவர்களிடமிருந்தெல்லாம் நாட்டுப்பாட்டு மெட்டில் கேட்ட கதைகளாக இருக்கலாம் கவிதைகளை—அவற்றை கவிதைகள் என்பதைவிட பாட்டுக்கள் என்பதாக இருக்கும் அதிக பொருத்தம்- கிறுக்க எனக்குத் தூண்டுதலாக அமைந்திருக்கக் கூடும்… அதன் கூடவே கதைகளும்……..! .எழுதிக் கிழித்துப் போட்டவைப் போக மிஞ்சியவையில் பரவாயில்லை என்று எனக்குப் புலப்பட்டக் கதையாக இருக்கலாம் 1956-ல் –அப்போது எனக்கு வய்து 18 “பதில் இல்லை” (1956)..அன்றுத் துவங்கி( இக்கதை என் “மோகம் முப்பது ஆண்டு” என்ற முதல் சிறுகதைத் தொகுப்பில்(1969) முதல் கதையாக

உட்படுத்தப்பட்டிருந்த்து. சுமார், 168 கதைகள்( “நீல பத்மநாபனின் 168 கதைகள்”--1344 பக்கங்கள்—வானதி பதிப்பகம்-2018-என் எண்பதாவது ஆண்டில் வெளியான நூலில் முதல் கதை இந்த “பதில் இல்லை”.கடைசியாக உட்படுத்தியிருக்கும் “கொட்டாரம்” (2012) கதைக்குப்பிறகு நான் கதை எதுவும் எழுதவில்லை என்பதைவிட எழுதத் தோன்றவில்லை என்பதாக இருக்கும் கூடுதல் பொருத்தம்….

நாவல்களை இன்று ஒட்டுமொத்தமாகத் திரும்பிப் பார்க்கையில், இன்னொன்று எனக்கேப் புலப்படுகிறது; “உதய தாரகை” (1956)யில் துவங்கி, ”தலைமுறைகள்”, ”பள்ளிகொண்டபுரம்”, ”உறவுகள்”,”தேரோடும் வீதி” போன்று பெரியதும், “யாத்திரை”, ”பைல்கள்”, ”சமர்” போன்று சிறியதுமாய், கடைசியாக-, இருபதாவதாக எழுதிய ”இலை உதிர் காலம்”2005) நாவலுடன் முடிவடைந்துவிட்ட்து…..இதெல்லாம் நான் வேண்டுமென்றேச் செய்தச் செயல்களாகத் தோன்றவில்லை…. கவிதை விஷயத்திலும், இடையிடையில் நின்றுபோன காலம் உண்டு. கதை, நாவல்கள் போல் பேசாமல் சும்மாஇருந்திருக்கலாம்தான்.ஆனால் விட்டகுறைத் தொட்டகுறை போல் அது என்னைவிட்டு விலகவில்லை, இல்லை, கவிதையைவிட்டு என்னால் விலகிட--அகல முடியாவில்லை, .வலுக்கட்டாயமாக விலக்க--அகற்ற எனக்கும் ஏனோத் தோன்றவில்லை…

இந்த 84-வ்து வயதில் “நாலு வைத்தியரும் நம்புவதற்கில்லை” என்றுவிட்ட வயோதிக சகஜ வியாதிகளில் கிடந்து—குறிப்பாக தூக்கம் வராத இரவுகளில் காலமாகிவிட்ட உற்றம் சுற்றங்களின் நினைவுகளும் கனவுகளும் அல்லல்ப்படுத்தி அவதியுறச்செய்கையில். ஆன்மீக தத்துவ சாரங்களும் மனசுக்கு ஆறுதல் தராத சந்தர்ப்பங்களில் வேறு வழியின்றி

ஒருசில கவிதை வரிகள் உள்ளுக்குள்ளே இயல்பாகவேத் தோன்றி  மறைவதுண்டு... மனசுக்கு சிறிதளவாவது தெம்பு தரும் இந்த கவிதை  வரிகளை சில போது குறிப்பதுண்டு… வாழ்வின் அந்திப்பொழுதில்-சாயங்காலத்தில் வெளியான “சாயங்கால

மேகங்களு”டன். கவிதைகள் பெய்துத் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்த்ததிற்கு மாறாக, இரவானப் பின்னரும் தொடரும் வாழ்வில் விரிந்தவை இக்கவிதை மலர்கள்……….

சி.சு.செல்லப்பா அவர் எழுத்து பிரசுரத்தில் 1975-ல் வெளியிட்ட(அப்போது என் வயது 37) ”நீல பத்மனாபன் கவிதைகள்” நூலில் வந்த என் இரண்டு கவிதைகளை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்;

 

1. நிலை (பக்கம்11)

எழுத்தாணி மழுங்கியும்

சளைக்கவில்லை

எழுதாமல் இருக்கவும் முடியவில்லை

எழுதிய எழுத்துக்கோ

கணக்குமில்லை

எழுதாது அணைந்தவை

கொஞ்சமில்லை..

சுவடியைத் தூக்கி நான்

அலையவில்லை

சுருள் நிமிர்த்திப் பார்க்கவோ

நாதியில்லை..

 

2. விமோசனம் (பக்கம் 31)

எழுதப்படாதிருந்தால்

களங்கப்படாதிருக்கும்

ஏடே

பாடப்படாதிருந்தால்

சேதப்படாதிருக்கும்

பாட்டே

உனக்கும்

எனக்கும்

இந்த ஜென்மத்தில்

விமோசனம் உண்டா?

 

நீல பத்மநாபன்  25—3—2022

வாக்கு தேவதை

 ஐந்தாகும் முன் --மூன்றோ நான்கோ வயதினிலெ

உன் முன் வைத்திருந்த

வளைவுகள், சுருள்கள் கொண்ட எழுத்துக்களும்,

உருட்டல்கள், வளைத்தல்களைச் செதுக்கி

நேர்கோடுகளைக் கொண்ட எழுத்துக்களும்—

மலையாளம், தமிழ் எழுத்துக்களைக் கொண்ட

காகித அட்டைகள்……

குருநாதர் மடியிலும், அப்பா மடியிலும்

பட்டு வேட்டி உடுத்தி உட்காரவைத்து,

தன் பிஞ்சு விரல்களைப் பிடித்து,

உன் முன்னால் தாம்பாளத்தில்

பரப்பியிருக்கும் தானியத்திலும்,

கீழே பரப்பியிருக்கும் வெள்ளை மணலிலும்,

ஆனா, ஆவன்னா என்று எழுத்துக்களும்,

1, 2 என்று எண்களும் எழுத வைத்து

பள்ளிக்கிருத்திய

பிஞ்சுநாள் நினைவுகள்

எதோ முன் ஜென்மத்தில் நடந்ததுபோல்…………!

அன்று தொட்டு இன்று இக்கணம் வரையிலும்

என்னை ஆட்டிப் படைக்கும்

வாக் தேவதையே

உனை அடிபணிகிறேன்…..

நீல பத்மநாபன் 15—10—2021 விஜயதசமி

நினைவஞ்சலி :

 மணி நாதம்

நிலைத்துவிட்ட மணி நாதம்…

பார்வதி புரத்தில்—நாகர்கோயில்- பிறந்த

கணீரென்ற குரலின் அதிபதி-- சுப்ரமணியம்

மத்திய அரசில் வேலை பார்த்த அப்பா,

அனந்தை நகருக்கு மாற்றலாகி

வந்தபோது, கூடவே வந்து,

வடக்கு பார்த்து நிற்கும் செந்திட்டைஅம்மன்

சன்னிதியில் கிழக்கு மேற்காய்

சாஷ்டாங்மாய் கிடக்கும் அக்கிரகாரத்தில்,

சீட்டுகெட்டாய், அடுத்தடுத்திருக்கும்

அகங்களொன்றில் நெடுநாள் வாசம்….

பக்கத்தில் காந்தளூர் சாலை-கிள்ளியாற்றின் கரையில்

அமைந்திருக்கும் பழம்பெரும் உயர்நிலைப் பள்ளியில்

இவன் பள்ளித்தோழன்….

பிறகு, வீழ்ந்த காலத்திரை

விலகுவது பல ஆண்டுகளுக்குப்பின்

டில்லியில்…….

இந்திய எழுத்தாளர் சங்க—ஆதேழ்ஸ் கில்ட்-எஜிஐ

கூட்டத்தில் பங்கெடுக்க முதன் முறையாக

டிஸம்பர் குளிரில் வெடவெடக்க இவன்

டில்லி விஜயம்….

’காந்தி பீஸ் பௌண்டேஷனி’ல்

நாலு நாள் வாசத்தில் ஒரு நாள் மாலையில்

காநாசு வீட்டுக்குக் கூட்டிச்செல்ல,

இவன் தங்கியிருந்த இடத்திற்கு

தன் காரில் வந்த மணியுடன் மறு சந்திப்பு

எத்தனையோ ஆண்டுக்களுக்குப்பின்…

இவன் அடைந்த இன்ப அதிர்ச்சி

வாக்குக்களுக்கு அதீதமானது……

”தலைமுறைகள்” காநாசு கைவண்ணத்தில்

ஆங்கிலத்தில் “ஜனறேஷன்ஸ்” ஆனபோது

கொச்சைப் பதங்களை இத்தனைக்கு

பொருளை கோட்டைவிடாது ஆங்கிலத்தில்

ஆக்கியதின் மர்மம் புரிந்தது……!

காநாசுவின் மாப்பிள்ளை--மகள் கணவன் மணி…

பிறகு, அடிக்கடி நாகர்கோயில் போகும் போது

அனந்தைக்கு வரும்போதெல்லாம்

தன்னையும் இன்னொரு பள்ளித்தோழன்

பாபுவையும் வீட்டில் வந்து சந்தித்து

நட்பைப் புதுப்பித்துக்கொண்டிருந்த மணி…

 அடுத்தக் கட்சி சில ஆண்டுக்களுக்குப்பின்

சென்னையில் தனியாய் ஒரு பிளாட்டில்

குடி வந்தபின்னர்……

அடிக்கடி தொலைபேசித் தொடர்ப்பு…..

கோட்டைக்கல்லில் சில நாட்சிகிச்சை…

சென்னைத் திரும்பியப் பின்னர்……

சற்று வினோதமான ஓர் வேண்டுகோள்..

அவரைப்பற்றி வெளியிடவிருக்கும் புத்தகத்திற்கு

ஓர் கட்டுரை கொரி……

தட்டமுடியாமல் அனுப்பி வைத்தான் இவன்…

நல்ல முறையில் வெளியான நூல்…..

ஆண்டு தோறும் ஏப்ரல் இருபத்திஆறுக்கு

அதிகாலையில் பிறந்ததின வாழ்த்துக்கள்

தொலைபேசியில் தெரிவிக்கும் உன் நாதம்

அடுத்த ஆண்டு—2022-ல் இல்லை……

காலம் ஓடோடி, தன்னை முந்திவிட்ட

நண்பா….நானும் பின் தொடர்வேன்

வெகு விரைவில்…….

14—12--2021 நீல பத்மநாபன்

 

 

 

Wednesday, May 25, 2022

இன்று இன்னுமொரு நாளே

இன்று தீபாவளி…

விடிந்தும் விடியாத காலைப்

புலர்கையில், வெளியில்,

அண்டையிலும், அகலத்திலும்

கிடுகிடுக்கவைக்கும்

பட்டாஸ் முழக்கங்கள்….

வானில் மின்னி மறையும்

ஜோதி கோளங்கள்…புஸ்வாணங்கள்……

சின்னாட்களில் பயந்தும் பயத்தை 

வலுக்கட்டாயமாக விரட்டி வெல்ல முயன்றும்

காலைப் பொழுதுகளில், மத்தாப்புக்கள்,

பட்டாஸ்கள் கொளுத்திய நினைவுகளில்

முழுகி, முக்குளியிட்டு

கீழேக் கீழேச் செல்லச் செல்ல

பிரக்ஞை மங்கி மயங்கி……,மழுங்கி,,,,,,,

நீல பத்மநாபன்

27-10-2019   தீபாவளி நாள்

தொடரும்

சுட்டெரிக்கும் நினைவுகள், கனவுகள்…..

கட்டுக்கடஙா உறுப்புக்கள்……

கிட்டெக் கிட்டெ வந்து

கவ்விடாமல்

எட்டயெட்டப்

போய்விடும்

துட்ட நாய்…..

நாய்க்கும் பேய்க்கும் கூட

வேண்டாத

இந்த பாவஜென்மம்இன்னும்

எத்த்னை நாள்

சர்வேசா………?

 

நீல பத்மநாபன் 20—7--2021

 

நானே ராஜா

 நாட்டில் நோய் நொடிகள். பஞ்சமும் பசியுமென்று

பிரஜைகள் அழுது அரற்றிக்கொண்டு,

ராஜாவிடம் வந்து முறையிட்டபோது

வாயிலும் வயிற்றிலும்

அடித்துக்கொண்டு

குய்யோ முறையோ என்று

ஓவென்று ஒப்பாரி வைத்து

அழுது புரளும் ராஜா……….

25—5—2021 நீல பத்மநாபன்

உப்பு

ரத்தத்தில் கலந்திருந்த உப்பெல்லாம்

எங்கே, போய் தொலைந்ததோ? ஏனோ..?

சோடியம் குறைந்து விட்டதென்று,

மூன்று நேர உணவில்

உப்பைச் சேர்த்துக்கொள்ள

தண்டனை விதித்தார்கள் மருத்துவர்கள்--

யூறாளஜியும், நியோறஜியும்…..!

உப்பில்லா பண்டம் குப்பையிலே….,

உப்பிட்டவரை உள்ளளவும் நினை….

--பழமொழிகள்…,

உப்பைபோல் நேசிக்கிறேன் என்ற

புத்திரியை நாடு கடத்திய மன்னவர்

கடைசியில் தவறை உணர்ந்து

பச்சாதபித்த பழங்கதை..,

--இவையெல்லாம் இப்போ

ஞாபகத்தில் வர

உணவு நேரங்கள் மூன்றையும்

விதிக்கப்பட்ட தீரா தண்டனையாய்

உணவில் உப்பை அள்ளிப்போட்டு

உள்ளே கொட்டி, உயிர் தரித்து,

கருணைக் கொலையைக்

காத்திருக்கும் நிலைமை……..

 

நீல பத்மநாபன் 10—1—2022