Monday, May 30, 2022

நினைவஞ்சலி :

 மணி நாதம்

நிலைத்துவிட்ட மணி நாதம்…

பார்வதி புரத்தில்—நாகர்கோயில்- பிறந்த

கணீரென்ற குரலின் அதிபதி-- சுப்ரமணியம்

மத்திய அரசில் வேலை பார்த்த அப்பா,

அனந்தை நகருக்கு மாற்றலாகி

வந்தபோது, கூடவே வந்து,

வடக்கு பார்த்து நிற்கும் செந்திட்டைஅம்மன்

சன்னிதியில் கிழக்கு மேற்காய்

சாஷ்டாங்மாய் கிடக்கும் அக்கிரகாரத்தில்,

சீட்டுகெட்டாய், அடுத்தடுத்திருக்கும்

அகங்களொன்றில் நெடுநாள் வாசம்….

பக்கத்தில் காந்தளூர் சாலை-கிள்ளியாற்றின் கரையில்

அமைந்திருக்கும் பழம்பெரும் உயர்நிலைப் பள்ளியில்

இவன் பள்ளித்தோழன்….

பிறகு, வீழ்ந்த காலத்திரை

விலகுவது பல ஆண்டுகளுக்குப்பின்

டில்லியில்…….

இந்திய எழுத்தாளர் சங்க—ஆதேழ்ஸ் கில்ட்-எஜிஐ

கூட்டத்தில் பங்கெடுக்க முதன் முறையாக

டிஸம்பர் குளிரில் வெடவெடக்க இவன்

டில்லி விஜயம்….

’காந்தி பீஸ் பௌண்டேஷனி’ல்

நாலு நாள் வாசத்தில் ஒரு நாள் மாலையில்

காநாசு வீட்டுக்குக் கூட்டிச்செல்ல,

இவன் தங்கியிருந்த இடத்திற்கு

தன் காரில் வந்த மணியுடன் மறு சந்திப்பு

எத்தனையோ ஆண்டுக்களுக்குப்பின்…

இவன் அடைந்த இன்ப அதிர்ச்சி

வாக்குக்களுக்கு அதீதமானது……

”தலைமுறைகள்” காநாசு கைவண்ணத்தில்

ஆங்கிலத்தில் “ஜனறேஷன்ஸ்” ஆனபோது

கொச்சைப் பதங்களை இத்தனைக்கு

பொருளை கோட்டைவிடாது ஆங்கிலத்தில்

ஆக்கியதின் மர்மம் புரிந்தது……!

காநாசுவின் மாப்பிள்ளை--மகள் கணவன் மணி…

பிறகு, அடிக்கடி நாகர்கோயில் போகும் போது

அனந்தைக்கு வரும்போதெல்லாம்

தன்னையும் இன்னொரு பள்ளித்தோழன்

பாபுவையும் வீட்டில் வந்து சந்தித்து

நட்பைப் புதுப்பித்துக்கொண்டிருந்த மணி…

 அடுத்தக் கட்சி சில ஆண்டுக்களுக்குப்பின்

சென்னையில் தனியாய் ஒரு பிளாட்டில்

குடி வந்தபின்னர்……

அடிக்கடி தொலைபேசித் தொடர்ப்பு…..

கோட்டைக்கல்லில் சில நாட்சிகிச்சை…

சென்னைத் திரும்பியப் பின்னர்……

சற்று வினோதமான ஓர் வேண்டுகோள்..

அவரைப்பற்றி வெளியிடவிருக்கும் புத்தகத்திற்கு

ஓர் கட்டுரை கொரி……

தட்டமுடியாமல் அனுப்பி வைத்தான் இவன்…

நல்ல முறையில் வெளியான நூல்…..

ஆண்டு தோறும் ஏப்ரல் இருபத்திஆறுக்கு

அதிகாலையில் பிறந்ததின வாழ்த்துக்கள்

தொலைபேசியில் தெரிவிக்கும் உன் நாதம்

அடுத்த ஆண்டு—2022-ல் இல்லை……

காலம் ஓடோடி, தன்னை முந்திவிட்ட

நண்பா….நானும் பின் தொடர்வேன்

வெகு விரைவில்…….

14—12--2021 நீல பத்மநாபன்

 

 

 

No comments: