”சாயங்கால மேகங்களு”க்கு (2019)ப் பிறகு சென்ற ஆண்டு-2021 வெளியான ”நகுலம்”
நீள்கவிதைக்கு முன்னும் பின்னும்(2019-2022) எழுதியவை
இவை.அன்று (2019) நான்
குறிப்பிட்டிருந்தவாறு, வயோதிக சகஜ வியாதிகள், உள்ள உளைச்சல்கள்-அதிர்வுகளில்
அவதிப்பட்டுக்கொண்டிருக்கையில் இப்படியும் கொஞ்சம் கவிதைகளை
படைப்பேன் என்று நினைக்கவில்லை.
இன்றுத் திரும்பிப் பார்க்கையில், இன்னொன்றுப் புலப்படுகிறது.
பிஞ்சு நாட்களில், பாட்டி, அம்மா, அப்பா இவர்களிடமிருந்தெல்லாம் நாட்டுப்பாட்டு மெட்டில்
கேட்ட கதைகளாக இருக்கலாம் கவிதைகளை—அவற்றை கவிதைகள் என்பதைவிட பாட்டுக்கள் என்பதாக
இருக்கும் அதிக பொருத்தம்- கிறுக்க எனக்குத் தூண்டுதலாக அமைந்திருக்கக் கூடும்… அதன்
கூடவே கதைகளும்……..! .எழுதிக் கிழித்துப் போட்டவைப் போக மிஞ்சியவையில் பரவாயில்லை என்று
எனக்குப் புலப்பட்டக் கதையாக இருக்கலாம் 1956-ல் –அப்போது எனக்கு வய்து 18 “பதில் இல்லை”
(1956)..அன்றுத் துவங்கி( இக்கதை என் “மோகம் முப்பது ஆண்டு” என்ற முதல் சிறுகதைத் தொகுப்பில்(1969)
முதல் கதையாக
உட்படுத்தப்பட்டிருந்த்து. சுமார், 168 கதைகள்( “நீல பத்மநாபனின்
168 கதைகள்”--1344 பக்கங்கள்—வானதி பதிப்பகம்-2018-என் எண்பதாவது ஆண்டில் வெளியான நூலில்
முதல் கதை இந்த “பதில் இல்லை”.கடைசியாக உட்படுத்தியிருக்கும் “கொட்டாரம்” (2012) கதைக்குப்பிறகு
நான் கதை எதுவும் எழுதவில்லை என்பதைவிட எழுதத் தோன்றவில்லை என்பதாக இருக்கும் கூடுதல்
பொருத்தம்….
நாவல்களை இன்று ஒட்டுமொத்தமாகத் திரும்பிப் பார்க்கையில்,
இன்னொன்று எனக்கேப் புலப்படுகிறது; “உதய தாரகை” (1956)யில் துவங்கி, ”தலைமுறைகள்”,
”பள்ளிகொண்டபுரம்”, ”உறவுகள்”,”தேரோடும் வீதி” போன்று பெரியதும், “யாத்திரை”, ”பைல்கள்”,
”சமர்” போன்று சிறியதுமாய், கடைசியாக-, இருபதாவதாக எழுதிய ”இலை உதிர் காலம்”2005) நாவலுடன்
முடிவடைந்துவிட்ட்து…..இதெல்லாம் நான் வேண்டுமென்றேச் செய்தச் செயல்களாகத் தோன்றவில்லை….
கவிதை விஷயத்திலும், இடையிடையில் நின்றுபோன காலம் உண்டு. கதை, நாவல்கள் போல் பேசாமல்
சும்மாஇருந்திருக்கலாம்தான்.ஆனால் விட்டகுறைத் தொட்டகுறை போல் அது என்னைவிட்டு விலகவில்லை,
இல்லை, கவிதையைவிட்டு என்னால் விலகிட--அகல முடியாவில்லை, .வலுக்கட்டாயமாக விலக்க--அகற்ற
எனக்கும் ஏனோத் தோன்றவில்லை…
இந்த 84-வ்து வயதில் “நாலு வைத்தியரும் நம்புவதற்கில்லை”
என்றுவிட்ட வயோதிக சகஜ வியாதிகளில் கிடந்து—குறிப்பாக தூக்கம் வராத இரவுகளில் காலமாகிவிட்ட
உற்றம் சுற்றங்களின் நினைவுகளும் கனவுகளும் அல்லல்ப்படுத்தி அவதியுறச்செய்கையில். ஆன்மீக
தத்துவ சாரங்களும் மனசுக்கு ஆறுதல் தராத சந்தர்ப்பங்களில் வேறு வழியின்றி
ஒருசில கவிதை வரிகள் உள்ளுக்குள்ளே இயல்பாகவேத் தோன்றி மறைவதுண்டு... மனசுக்கு சிறிதளவாவது தெம்பு தரும்
இந்த கவிதை வரிகளை சில போது குறிப்பதுண்டு…
வாழ்வின் அந்திப்பொழுதில்-சாயங்காலத்தில் வெளியான “சாயங்கால
மேகங்களு”டன். கவிதைகள் பெய்துத் தீர்ந்துவிடும் என்று
எதிர்பார்த்ததிற்கு மாறாக, இரவானப் பின்னரும் தொடரும் வாழ்வில் விரிந்தவை இக்கவிதை
மலர்கள்……….
சி.சு.செல்லப்பா அவர் எழுத்து பிரசுரத்தில் 1975-ல் வெளியிட்ட(அப்போது
என் வயது 37) ”நீல பத்மனாபன் கவிதைகள்” நூலில் வந்த என் இரண்டு கவிதைகளை இங்கே குறிப்பிடுவது
பொருத்தமாக இருக்கும்;
1. நிலை (பக்கம்11)
எழுத்தாணி மழுங்கியும்
சளைக்கவில்லை
எழுதாமல் இருக்கவும் முடியவில்லை
எழுதிய எழுத்துக்கோ
கணக்குமில்லை
எழுதாது அணைந்தவை
கொஞ்சமில்லை..
சுவடியைத் தூக்கி நான்
அலையவில்லை
சுருள் நிமிர்த்திப் பார்க்கவோ
நாதியில்லை..
2. விமோசனம் (பக்கம் 31)
எழுதப்படாதிருந்தால்
களங்கப்படாதிருக்கும்
ஏடே
பாடப்படாதிருந்தால்
சேதப்படாதிருக்கும்
பாட்டே
உனக்கும்
எனக்கும்
இந்த ஜென்மத்தில்
விமோசனம் உண்டா?
நீல பத்மநாபன் 25—3—2022
No comments:
Post a Comment