ரத்தத்தில் கலந்திருந்த உப்பெல்லாம்
எங்கே, போய் தொலைந்ததோ? ஏனோ..?
சோடியம் குறைந்து விட்டதென்று,
மூன்று நேர உணவில்
உப்பைச் சேர்த்துக்கொள்ள
தண்டனை விதித்தார்கள் மருத்துவர்கள்--
யூறாளஜியும், நியோறஜியும்…..!
உப்பில்லா பண்டம் குப்பையிலே….,
உப்பிட்டவரை உள்ளளவும் நினை….
--பழமொழிகள்…,
உப்பைபோல் நேசிக்கிறேன் என்ற
புத்திரியை நாடு கடத்திய மன்னவர்
கடைசியில் தவறை உணர்ந்து
பச்சாதபித்த பழங்கதை..,
--இவையெல்லாம் இப்போ
ஞாபகத்தில் வர
உணவு நேரங்கள் மூன்றையும்
விதிக்கப்பட்ட தீரா தண்டனையாய்
உணவில் உப்பை அள்ளிப்போட்டு
உள்ளே கொட்டி, உயிர் தரித்து,
கருணைக் கொலையைக்
காத்திருக்கும் நிலைமை……..
நீல பத்மநாபன் 10—1—2022
No comments:
Post a Comment