Monday, May 30, 2022

நினைவஞ்சலி :

 மணி நாதம்

நிலைத்துவிட்ட மணி நாதம்…

பார்வதி புரத்தில்—நாகர்கோயில்- பிறந்த

கணீரென்ற குரலின் அதிபதி-- சுப்ரமணியம்

மத்திய அரசில் வேலை பார்த்த அப்பா,

அனந்தை நகருக்கு மாற்றலாகி

வந்தபோது, கூடவே வந்து,

வடக்கு பார்த்து நிற்கும் செந்திட்டைஅம்மன்

சன்னிதியில் கிழக்கு மேற்காய்

சாஷ்டாங்மாய் கிடக்கும் அக்கிரகாரத்தில்,

சீட்டுகெட்டாய், அடுத்தடுத்திருக்கும்

அகங்களொன்றில் நெடுநாள் வாசம்….

பக்கத்தில் காந்தளூர் சாலை-கிள்ளியாற்றின் கரையில்

அமைந்திருக்கும் பழம்பெரும் உயர்நிலைப் பள்ளியில்

இவன் பள்ளித்தோழன்….

பிறகு, வீழ்ந்த காலத்திரை

விலகுவது பல ஆண்டுகளுக்குப்பின்

டில்லியில்…….

இந்திய எழுத்தாளர் சங்க—ஆதேழ்ஸ் கில்ட்-எஜிஐ

கூட்டத்தில் பங்கெடுக்க முதன் முறையாக

டிஸம்பர் குளிரில் வெடவெடக்க இவன்

டில்லி விஜயம்….

’காந்தி பீஸ் பௌண்டேஷனி’ல்

நாலு நாள் வாசத்தில் ஒரு நாள் மாலையில்

காநாசு வீட்டுக்குக் கூட்டிச்செல்ல,

இவன் தங்கியிருந்த இடத்திற்கு

தன் காரில் வந்த மணியுடன் மறு சந்திப்பு

எத்தனையோ ஆண்டுக்களுக்குப்பின்…

இவன் அடைந்த இன்ப அதிர்ச்சி

வாக்குக்களுக்கு அதீதமானது……

”தலைமுறைகள்” காநாசு கைவண்ணத்தில்

ஆங்கிலத்தில் “ஜனறேஷன்ஸ்” ஆனபோது

கொச்சைப் பதங்களை இத்தனைக்கு

பொருளை கோட்டைவிடாது ஆங்கிலத்தில்

ஆக்கியதின் மர்மம் புரிந்தது……!

காநாசுவின் மாப்பிள்ளை--மகள் கணவன் மணி…

பிறகு, அடிக்கடி நாகர்கோயில் போகும் போது

அனந்தைக்கு வரும்போதெல்லாம்

தன்னையும் இன்னொரு பள்ளித்தோழன்

பாபுவையும் வீட்டில் வந்து சந்தித்து

நட்பைப் புதுப்பித்துக்கொண்டிருந்த மணி…

 அடுத்தக் கட்சி சில ஆண்டுக்களுக்குப்பின்

சென்னையில் தனியாய் ஒரு பிளாட்டில்

குடி வந்தபின்னர்……

அடிக்கடி தொலைபேசித் தொடர்ப்பு…..

கோட்டைக்கல்லில் சில நாட்சிகிச்சை…

சென்னைத் திரும்பியப் பின்னர்……

சற்று வினோதமான ஓர் வேண்டுகோள்..

அவரைப்பற்றி வெளியிடவிருக்கும் புத்தகத்திற்கு

ஓர் கட்டுரை கொரி……

தட்டமுடியாமல் அனுப்பி வைத்தான் இவன்…

நல்ல முறையில் வெளியான நூல்…..

ஆண்டு தோறும் ஏப்ரல் இருபத்திஆறுக்கு

அதிகாலையில் பிறந்ததின வாழ்த்துக்கள்

தொலைபேசியில் தெரிவிக்கும் உன் நாதம்

அடுத்த ஆண்டு—2022-ல் இல்லை……

காலம் ஓடோடி, தன்னை முந்திவிட்ட

நண்பா….நானும் பின் தொடர்வேன்

வெகு விரைவில்…….

14—12--2021 நீல பத்மநாபன்

 

 

 

Wednesday, May 25, 2022

இன்று இன்னுமொரு நாளே

இன்று தீபாவளி…

விடிந்தும் விடியாத காலைப்

புலர்கையில், வெளியில்,

அண்டையிலும், அகலத்திலும்

கிடுகிடுக்கவைக்கும்

பட்டாஸ் முழக்கங்கள்….

வானில் மின்னி மறையும்

ஜோதி கோளங்கள்…புஸ்வாணங்கள்……

சின்னாட்களில் பயந்தும் பயத்தை 

வலுக்கட்டாயமாக விரட்டி வெல்ல முயன்றும்

காலைப் பொழுதுகளில், மத்தாப்புக்கள்,

பட்டாஸ்கள் கொளுத்திய நினைவுகளில்

முழுகி, முக்குளியிட்டு

கீழேக் கீழேச் செல்லச் செல்ல

பிரக்ஞை மங்கி மயங்கி……,மழுங்கி,,,,,,,

நீல பத்மநாபன்

27-10-2019   தீபாவளி நாள்

தொடரும்

சுட்டெரிக்கும் நினைவுகள், கனவுகள்…..

கட்டுக்கடஙா உறுப்புக்கள்……

கிட்டெக் கிட்டெ வந்து

கவ்விடாமல்

எட்டயெட்டப்

போய்விடும்

துட்ட நாய்…..

நாய்க்கும் பேய்க்கும் கூட

வேண்டாத

இந்த பாவஜென்மம்இன்னும்

எத்த்னை நாள்

சர்வேசா………?

 

நீல பத்மநாபன் 20—7--2021

 

நானே ராஜா

 நாட்டில் நோய் நொடிகள். பஞ்சமும் பசியுமென்று

பிரஜைகள் அழுது அரற்றிக்கொண்டு,

ராஜாவிடம் வந்து முறையிட்டபோது

வாயிலும் வயிற்றிலும்

அடித்துக்கொண்டு

குய்யோ முறையோ என்று

ஓவென்று ஒப்பாரி வைத்து

அழுது புரளும் ராஜா……….

25—5—2021 நீல பத்மநாபன்

உப்பு

ரத்தத்தில் கலந்திருந்த உப்பெல்லாம்

எங்கே, போய் தொலைந்ததோ? ஏனோ..?

சோடியம் குறைந்து விட்டதென்று,

மூன்று நேர உணவில்

உப்பைச் சேர்த்துக்கொள்ள

தண்டனை விதித்தார்கள் மருத்துவர்கள்--

யூறாளஜியும், நியோறஜியும்…..!

உப்பில்லா பண்டம் குப்பையிலே….,

உப்பிட்டவரை உள்ளளவும் நினை….

--பழமொழிகள்…,

உப்பைபோல் நேசிக்கிறேன் என்ற

புத்திரியை நாடு கடத்திய மன்னவர்

கடைசியில் தவறை உணர்ந்து

பச்சாதபித்த பழங்கதை..,

--இவையெல்லாம் இப்போ

ஞாபகத்தில் வர

உணவு நேரங்கள் மூன்றையும்

விதிக்கப்பட்ட தீரா தண்டனையாய்

உணவில் உப்பை அள்ளிப்போட்டு

உள்ளே கொட்டி, உயிர் தரித்து,

கருணைக் கொலையைக்

காத்திருக்கும் நிலைமை……..

 

நீல பத்மநாபன் 10—1—2022


Tuesday, August 11, 2020

ஏனோ.....

சென்ற சில நாட்களாக
நிசிகளின் நடு யாமங்களில் 
நித்திரையின் இடைவெளியில்
காலத்தில் கரைந்த பின்னர், 
தான் சதா பார்த்துப் பழகும்
இந்த படுக்கை, அறை, வீடு, வெளியெல்லாம் 
எப்படியிருக்கும் என்ற வினோத கற்பனை……. 
 நாளொன்றாகும் முன் அணிந்திருக்கும் ஆடைக் களைந்து 
புத்தாடை கொள்ள 
ஆர்வம் கொள்ளும் மனமே, 
ஆண்டாண்டுகள் உருண்டோடி 
காலப் பழக்கத்தில் பழுதுகள் நேர்ந்த, 
கூண்டைக் களைந்து ”வெளி” யில் ஏற’ 
அவசமா…..இல்லை..அச்சமா…….…….. 

 நீல பத்மநாபன் 19-7-2020

Thursday, May 21, 2020

விளக்கேற்ற வந்தவள்


நேற்று
அவன் பிறந்து வளர்ந்த வீட்டில்
தனியாக பூஜை அறை இல்லை…..
ஆனால் எந்த இடி மின்னல் மழையாக இருந்தாலும்
ஒளியும் இருளும் சங்கமிக்கும் மூவந்திப்பொழுதில்
அம்மா தெருநடையைப் பெருக்கி,
தண்ணீர் தெளித்து அலம்பிவிட்டு
வீட்டு வாசல்படியையும் நீரால் கழுவியபின்
நடுக்கூடத்தில் சுவரோரத்தில் கிழக்குப்பார்த்து
தேய்த்து மினுக்கி வைத்திருக்கும் குத்துவிளக்கில்
திரியிட்டு எண்ணை விட்டு குங்கும பொட்டிட்டு
நெற்றியில் குங்குமமோ, திருநீறோ துலங்க
நாம ஜெபம் செய்தவாறு விளக்கேற்றுவாள்
கொல்லையிலிருந்து செக்கச்சிவந்த செம்பருத்திப்பூவொன்றை
பறித்து வந்து விளக்குக்கு கிரீடமாகச் சூடுவதற்கும்
ஒரு நாள்கூட அம்மா மறந்ததாக கண்டதில்லை
குத்துவிளக்கின் இதமான மஞ்சள் நிற மங்களப் பிரகாசம்
ஒளி பரப்பும் முன் கண்கூசும் மின் விளக்குகளை
வீட்டில் யாரும் போடுவதில்லை….
அந்நேரத்தில் பாட்டியும், வீட்டில் எங்கிருந்தாலும்
கை கால் முகம் அலம்பி நெற்றியில் விபூதியுடன்
திருவிளக்கை வழிபட வந்துவிடத் தவறுவதில்லை
வீட்டில் விளக்கு வைக்கும் அந்திப்பொழுதில்
யாரும் முடங்கி கிடப்பதில்லை…..
தெருவில் மூவந்திப்பொழுதில் விளக்கேற்றாமல்
இருள் படர விட்டிருக்கும்  வீடுகளைப்பற்றி
அங்கே மூதெவிதான் குடியிருப்பாள்,
சீதேவி இறங்கிப்போயிருப்பாள்…”
சந்தேகமின்றி திடமாக சொல்லுவாள் பாட்டி……

இன்று  
பூஜை அறை குத்துவிளக்கைக் குனிந்து நிவர்ந்து
ஏற்ற இயலாதென்று அவள் படுக்கை அறையில்
மேஜைமீது சாமிப் படங்கள், விக்கிரகம்..
மின்னும் வெள்ளி விளக்கு..
காலையில் அவள் தன் வெள்ளி விளக்கை
ஏற்றி வழிபடுவதோடு சரி….,
காலையிலிருந்து வீட்டுவேலைகள் செய்த களைப்பு,
ஓய்வுக்கு இதுதான் தக்க நேரமென்று
 மாலைப்பொழுதுகளில் படுக்கையில் சரணடையும் அவள்
துணைக்கு, தொலைக்காட்சி மெகா சீரியல், ஸ்மார்ட் போன்
காலையில், குளியலுக்குப்பின், பூஜைஅறை குத்துவிளக்கை ஏற்றி
அதன் முன் பீடத்தில் அமர்ந்து சற்று நேரம் வழிபடாமல்
உணவு புசிப்பதில்லை அவன்…..
இருள் படரும் அந்திப்பொழுதுகளிலும், அவனே, நாள் தவறாமல்
பூஜை அறை குத்துவிளக்கை ஏற்றிக்கொண்டிருந்தான்……
கண் மூடி எங்கும் நிறைந்த பரம்பொருளை தியானிக்கையில்
சில வேளைகளில், “இன்றுக்கு வர வழித்தெரியாமல்,
நேற்றிலேயே வீற்றிருக்கிறாயா….—அந்தரங்கத்தின் கேள்வி….
கூடவே, அம்மா விளக்கேற்றும் காட்சி
பாட்டி சொல்லும் சொற்களும்..…….

நீல பத்மநாபன்    
8—3—2020 (மகளிர் தினம்);  10—5—2020 (அன்னையர் நாள்)