Monday, May 25, 2015

ஆப்பரேஷன் வெற்றி, ஆனால்


             

                     ஆப்பரேஷன் வெற்றி,  ஆனால்....

                      நீல பத்மநாபன்
             
             வானம் கறுத்தால், மழை பொழிந்தால்
             நீர் ஓடி ஒழுகிப்போக விடாத,
      நகரில் குறுக்கேயும் நெடுகேயும் கிடக்கும்,
            அகலமான சாக்கடைகள் மீது காண்க்ரீட் தூண்கள்,
      சிமண்ட் சுவர்கள் பலமாக கட்டி உயர்த்தப்பட்ட
      கட்டடங்கள்-கடைகள், வீடுகள், கிட்டங்கிகள்,
      கட்சி காரியாலயங்கள், கோயில்கள், திருமண மண்டபங்கள்......!
      ராஜ பாட்டைகள் சந்துகள் வீடுகள் குடிசைகள் கடைகள்
       கோயில்கள் பேதமின்றி எங்கெங்கும் சாக்கடைநீரும்,
       கூடவே அடித்துக்கொண்டு வரும் கழிவுப்பொருட்களும்
       புகுந்தோடுவதைக் கண்டு பற்பல திட்டங்கள் உதயம்.....
       ட்ராக்டர்கள், காவற்படை சகலவித தயாரெடுப்புகளுடன்
       சாக்கடைகளை மூடியிருந்த  கான்க்ரீட் ஸ்லேபுகள்,
          அனுமதியின்றி கைப்பற்றி  அவை மீது கட்டப்பட்டவை
      எல்லாம் தூள் தூள்....,அங்கிங்கு சிற்சில தடைகளிருந்தும்.
      அடைமழை ஆர்ப்பரிக்க ஆங்காங்கே சாக்கடை குப்பைக்கூளங்கள்,
      அடைப்புக்கள் அப்புறப்படுத்தும் வேலைகள்
     அமோகமாய் நடந்தேற நடந்தேற.......
          தடைகள் நீங்கி  பெருக்கெடுத்தோடி வரத்தொடங்கிய                                            
     மழை வெள்ள்மும் சாக்கடை நீருமெல்லாம்
          போய்ச்சேரவேண்டிய இடம் தெரியாதுடன்,
     வழக்கமாய்ப் போகும் சாக்கடைப்பாதைகள் யாவும்
     கல்லும் மண்ணும் பிளாஸ்டிக் குப்பைக்கூளங்களும்
     நிறைந்து கிடப்பதால்.....நகரெங்கணும்
         வீடு, கடை, வெளி பேதமின்றி  வெள்ளம் வெள்ளம்.
         முன்னாலிருந்ததை விட வெள்ளம்
          சாக்கடை கழிவுநீர் கலந்த பெரும் வெள்ளம்..

                                                                                 24—5--2015


         

             
          


Monday, March 23, 2015

சமய சந்தர்ப்பம்

      

                  

                       சமய சந்தர்ப்பம்

              நீல பத்மநாபன்

                        எல்லோருக்கும்தான்
            பேசத்தெரிகிறது...
                      செய்கையிலும்
                      சளைத்தவர்களல்ல..
                      ஆனால்
           பேச்சும் செயலுமெல்லாம்
                      என்ன
                      எங்கே
                      எப்போ-
            முந்தியா
                        பிந்தியா எனத்
                     தெரியாமல்
                     பிரயோகிப்பதால் தானா
                        அனர்த்தங்கள் யாவும்?

                     இளமை முகத்தில் மட்டுமன்றி
                     அங்கங்கள் அனைத்திலும்
                     பொங்கி வழிந்துமொண்டிருந்த
                     காலங்களிலெல்லாம்
                     வெறும் பார்வை பரிமாற்றங்கள்
                     கனவுகள் கற்பனைகளுக்கு மேல்
                     போக அஞ்சிக்கிடந்தது,
                     மணமாலையின் அனுமதி பெற்ற்பின்
                    கிளர்ந்தெழுந்து அடங்கி ஒடுஙகியும்
                    முற்றிலும் சமனம் பெறாமல்
                    காலம் கடந்து மீண்டும்
                       தலைதூக்கிற்து என்றால்...........

                                                                                                          20-3-2015
               


Monday, February 23, 2015

பட்டாம் பூச்சியாய்


                                            பட்டாம் பூச்சியாய்…….
                                                        
                                              நீல பத்மநாபன்
                                                                  
                                             இந்நாள் வரை வாழ்ந்த
                             கூண்டினுள்ளிலிருந்து
                            விமோசனம் பெற்று
                                        வெளியேற
                                       பட்டாம்பூச்சியாய்   
                                          படபடத்துக்கொண்டிருக்கையில்
                                         நீடிக்கும் வாழ்நாட்கள்.......
                            நீடிகக நீடிக்க
                         சகஜீவிகளுக்கு அலுப்பு...
...                                  ஆறுதல் தேறுதல்கள் இருக்கட்டும்,
                                       சுயரோதனை வேதனைகளையெல்லாம்
                                      ஒதுக்கித்தள்ளிவிட்டு
                      அவர்கள் அலுப்பை விரட்டி
                                  விருப்பை ஊட்ட,
                      குரங்காட
                              அந்த அந்திம நாட்களிலும்
                                 தெரியாவிடில்.........!

                                                                *      *      *

                 உயிரை கையில் பிடித்துக்கொண்டு
                 வாழ்வதாய் சொல்லக்கேட்கையில் எல்லாம்
                                  பிடிவிட்டுவிட்டால் போய்விடுமென்றால்
                 போய்த்தொலையட்டுமே என
                நினைந்துகொண்ட நாளெல்லாம் போய்
                                உடல் உபாதைகள் கட்டறுந்த இம்சைப்பிராணிகளாய்
                               அல்லும் பகலும் கூட்டத்தோடுத் தாக்கி
                               உள்ளையும் சேர்த்து நிலைகுலையச்செய்கையில்
                   அடிபதறி வீழாதிருக்க
               பீஷ்மரின் சரசயன நிலையிலும்
                               தோற்றுப்போகாதிருக்க
                       பிடித்து நின்று இயக்க வலு ஒழுகித்தீராதிருக்க
                              உடும்புப்பிடியாய்......
                             அது தானா   உயிர்.......?
                                                                                              பிப்ரவரி-2015




Monday, December 29, 2014

2 கவிதைகள்



               விவேகானந்தம்

                                                       நீல பத்மநாபன்

  பிறரின் தீவினையால்
    சுயவதைப்புள்ளாகலாமா?
    திடமாய் நில்
    தீரமாய் எதிர்கொள்
    தீவீரமாய் சுயகர்ம மார்க்கத்தில்
  பயணித்திடுவாய்…..


        திருப்பிறவி தினத்தில் ஒரு தீனக்குரல்
                                        நீல பத்மநாபன்
        பார்வை செல்லும் இடங்களிலெல்லாம்
        முழுமையில்லா பிம்பங்கள்
          அரைக்குறை காட்சிகள், கர்மங்கள்..
         குறையான நிறைகள்
        கோடுக்கு வெளியிலாகிவிட்ட
      கோலப்புள்ளிகள்....
        பார்வையைத் தீட்டித்தீட்டி
         பழுதாகிப்போன  விழிகள்.
        அகக்காம்பில் அறைகள் விழுந்தபோது
        பகைவனுக்கு அருள்வாய் எனவோ
         என்னசெய்கிறோமென செய்யும்
        அவர்களை மன்னிப்பாயாக என்றோ
        வேண்டத்தெரியாது
       இன்னாசெய்தார்க்கு இனியவை, நல்லவை
       அவர் நாணுமாறு  செய்யவும் இயலாது
        பரிபூரணன் பாதத்தில் சரணடைய
       சாந்தியும் சமாதானமும் இல்லாது
       நைந்துபோன உள்ளமுடன்
      வெந்துவிட்ட உறுப்புக்களுடன்
      காத்துக்கிடக்கிறான் ஒரு பாவி          
        25 டிசம்பர் 2014

                                                  












Saturday, October 25, 2014

நூறு

       


            

                   நூறு

           நீல பத்மநாபன்

           மீண்டும் வெறிச்சோடிப்போய்விட்ட
            அகமும்  புறமும்…..
            சத்தங்கள் சந்தடிகள்
           அதிகமாய் காதுக்குள் எட்டுவதில்லை
      நெருங்கி வந்து குரலைக் கூட்டியும்
      அங்கசேஷ்டைகள் செய்தும்
      புரியவைக்க  முயற்சி.....,
      நெற்றியிலும் சிரஸிலும் விபூதி இடவைத்து
      பாதம் தொட்டு நமஸ்கரித்து ஆசி பேறு....,
      மாறி மாறி மைக் முன்னாடி போய் நின்று
      வாய் கைகள் ஆட்டி அசைத்து பல்வேறு
      முக பாவங்களுடன் நீளமாய் சொற்களின் பொழிவுகள்...,
      முன்னால் சிரித்து கையடித்து ரஸிக்கும் முகங்கள்..,
     கண்ணைக் குருடாக்கும் காமறா, வீடியோ வெளிச்ச வீச்சுக்கள்
     சாப்பாட்டுப் பந்திகள்...! அரட்டை அளவளால்கள்...
            தாம்பூல, இனிப்புப் பைகள்  பெற்று விடைபெற்றுக்கொண்டு
     அவரவர் இடங்களுக்கு திரும்பிச் சென்றுவிட்ட
      பிள்ளைகள், பேரர்கள், கொள்ளுப் பேரர்கள்,
      உற்றம் சுற்றம், தெரிந்தவர், தெரியாதவர்கள்,
      பக்கத்தில் உள்ளவர், தூர தொலைவு வாசிகள்...,.
      எல்லோரும்  எல்லோரும்.....!
      விட்டுச்சென்ற பூமாலைகள்...,பொன்னாடைகள்...,
      பழ வகையறாக்கள்..,இனிப்புப் பண்டங்கள்...,
      பரிசுப் பொருட்களின் வண்ணக்கலவைப்
      பொட்டலக் குவியல்கள்.........
     எல்லாம் எல்லாம் சுபமாய்முடிந்து
      மண்டபத்திலிருந்து பழையபடி
      இந்த இரண்டறை கூட்டுக்குள்
       மீண்டும் வெறிச்சோடிப் போய்விட்ட
       அகமும் புறமும்........... 



Tuesday, September 30, 2014

1)வலியும் கிலியும் 2)மூட சொர்க்க




  
        நீல பத்மநாபன்

           
1          வலியும் கிலியும்
 
வலியை சகித்துக்கொள்ள
நெடுநாள் பயின்று பயின்று
ஒரளவுக்கு பழகமுடிந்தும்
வலிகள் வரப்போகிறதென்ற
ஆரம்ப சைகைகள்
கிடைக்கத் தொடங்கையிலேயே
நெஞ்சில் வந்து உடும்பாய்
கவ்வுக்கொண்டுவிடும்
வரப்போகும் வலியை
நினைந்துள்ள கிலி.......!
அதை அப்புறப்படுத்த
எடுத்துக்கொண்ட
அப்பியாசங்களெல்லாம்
தோல்விக்குமேல் படுதோல்வி
என் செய்வேன்..,.என் செய்வேன்...,
பராபரமே..............
         
2        மூடசொர்க்கம்
 
புருஷாயிசின் முக்காலே முண்டாணியும்
கொஞ்சம் விவேகமுடன் வாழ முயன்றதால்
கிடைத்த பயனென்னமோ நரகம்தான்.....!
மிஞ்சியுள்ள மிச்சசொச்சம் நாட்களை
முட்டாளாய் கடத்திவிட்டாலென்ன என்றொரு
யோசனை......, நடக்குமா……?