Saturday, May 11, 2019

தீ நாக்கு


தீ நாக்கு
பெரிய சிறிய மரங்கள் மட்டுமல்ல
புல்பூண்டுகளையும் சுட்டெரித்து
வெந்தணலாக்கியும் அடங்காத
காட்டுத்தீ…….
எதிரில் மாட்டிக்கொண்டவர்களை
சுட்டுப்பொசுக்கியும் நிற்காது,
வக்கணைகளையும் அபாண்டங்களையும்
வாய்க் கூசாது சரமாரியாய் வாரி இறைத்து,
அகராதி காணா கெட்ட வார்த்தைகளையும்
கூரம்புகளாய்ப் பாய்ச்சி
ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கும்
……………………………………………………………………………..
   நீல பத்மநாபன்


அம்மா..அம்மா


அம்மா….அம்மா….

இன்று தை அமாவாசை…….
பதினெட்டு ஆண்டுக்களுக்குமுன்,
இப்படீயொரு தை அமாவாசை நாளில்தானே
எங்களையெல்லாம் விட்டுப்பிரிந்து சென்றாய்….
உனை நினைக்கையில்,……எதைச்சொல்ல?, எதைச்சொல்லாமல் விட?
அன்றுபோல்தான் இன்றும் நெஞ்சில் மலைப்பு………சோகத்தின் நிழல்கள்….,, ..!
இணைப்புக்கோடுகள் போடத்தெரியாத, இயலாத
மின்னி மறையும் கோலப்புள்ளிகள் நெஞ்சம் நிறைய…….. ……;
சமையல் கியாஸ், குக்கர், மிக்சி, கிரைண்டர், சலவை யந்திரம்
வகையறாக்கள் இல்லாத நாளில்
வீட்டில் நிறைந்து வழிந்த குழந்தை குட்டிகளின்
பல்வேறு ருசிபேதங்களுக்கேற்ப ஆக்கி விளம்ப,
அணையா வேள்வித்தீ ஜ்வாலைபோல்
சதா எரிந்துகொண்டிருக்கும் அடுப்படித் தீக்கொழுந்தொளியில் 
ஜ்வலிக்கும் அம்மாவின் முகம்….,
அடுப்பில் பாத்திரம் பண்டங்கள் காய
காய்கறிக்காரி வாறாளா என்ற தேட்டமுடன்
அடுப்படிக்கும் தெருவாசலுக்குமா ஓட்டமும் நடையுமா
பரபரக்கும் அம்மா….
இடையிடையே அம்மிமுன் விரைந்து
மஞ்சள், முளகு, கொத்தமல்லி, சீரகம் என பசரக்குப்பொருட்களை
அரைத்துக் குழம்பாக்கும்  அம்மா……
சூரியன் வானுச்சியில் வந்து, முற்றத்தில் நனைந்த
துணிகளை உலர்த்த கட்டியிருக்கும் கொடியில் வெயில் வீழ்கையில்
அழுக்குத்துணிகளை சோப்பிட்டு அடித்துத் துவைக்கும் அம்மா……. 
இடையில், தூளியில் கிடந்து கைகால்கள் அடித்து
அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் தம்பியையோ, தங்கையையோ
தூளி ஆட்டி தாலாட்டு பாடிச் சீராட்டும் அம்மா….
சாமப்பொழுதுகளில் பள்ளிப்பாடங்களை
படித்துவிட்டு அயர்ந்து தூங்கையில்,,
எங்கள் காதுகளில் ஒலிசெய்யும்…கடபடா சத்தம்…,
அடுத்த நாள் காலைஉண்டிக்காக
ஆட்டுரலில் மாவரைக்கும் அம்மா.....
கடைசி மூச்சு வரை ;  ,
வாழ்வில் எதிரிட வேண்டிவந்த
கொடுமையான சோதனைக் கட்டங்களிலும்
கடுமையான,வேதனைகள், ரோதனைகளையெல்லாம்
உள்ளுக்குள்ளையே புதைத்து,யாரையும் கரித்துகொட்டாமல்,
பிள்ளைகள் எங்களிடம் தன்னம்பிக்கையை விதைத்து
சுப எதிர்பார்ப்புடன், தளராது வாழ்ந்து  காட்டிய அம்மா…
                                  நீல பத்மநாபன்..

மூட மதி


  மூடமதி
வாயில் வெள்ளிகாரண்டியுடன்
பிறந்தவனில்லை அவன்……….
உடன் பிறப்புக்கள், தெருவாசிகள், ஊரக்காரர்களின்
எதிர்மறைச்சிந்தனைகள், செயல்கள், மோதல்களின்
இடையில் வாழ்ந்தான், வளர்ந்தான்…….
அடிபட்டு, கடிபட்டு, முட்டி மோதி
தனக்கென சுயம்புவாய் ஓர் ஆளுமை
காலத்தின் கிரமத்தில் அவனிடத்தில்
ஆழ்ந்திறங்கியிருக்கவேண்டும்…
அதுவும், நின்ற இடத்திலேயே தேங்கிவிட விடாமல்,
மீண்டும் மீண்டும், காலத்திற்கு,,பருவத்திற்கு ஏற்ப
புதுப்பித்துக்கொள்ளும் முயற்சிகளை, பயிற்சிகளைத்
தொடர்வதிலும் பின்னடையவில்லை…..
இவ்வாறெல்லாம்i இந்நாள்வரை கற்றுத்தெரிந்துத்தெளிந்தவை,,
சம்சார சாகரத்திலிருந்து கரையேற
அபயக்கரம் நீட்டாமல் கைவிட்டுப்போனது ஏனோ……………….?

                                                       நீல பத்மநாபன்
  
                                                                                                                                     
                                                                                                                                                                                                                                                            

சாயங்கால மேகங்கள்


             சாயங்கால மேகங்கள்

காரணம் தெரியாமல்
கார்மேக படலங்கள்
வந்து சூழும் அகம்………
ஓய்வு ஒழிச்சலின்றி சதா ஓடியாடி
உழைத்த உழைப்பிற்கெல்லாம்
ஒத்துழைத்து, தற்போது
முடங்கிப்போய்விட்டப்பின்னரும்
என்னதான் முனைந்தும் 
வயோதிக சகஜ அவசங்கள், அல்லல்களால்
அவஸ்தைப்படசெய்துவிட்ட உடம்பும் உள்ளமும்…..….
ஒரு காலத்தில் கை வராதா என
ஆசைப்பட்டவை
கை எட்டும் தொலைவில் வந்து கண் சிமிட்டியும்
கைப்பற்ற தோன்றாத விரக்தி நிலை…….
யார், எவற்றிற்கெல்லாம்
ஆயுளை, பொருளை செலவழித்தோமோ
அவர்கள், அவற்றிற்கெல்லாம்
வேண்டாதவன், அதிக பாரம்
ஆகிவிட்டோமோ என்ற மன மயக்கம்….
ஒவ்வொரு நாள் புலர்கையிலும்………
இன்னுமா ஈசனே……..

                        நீல பத்மநாபன்..



Tuesday, August 14, 2018

நடை


                                       நடை

சின்னாட்க்களிலிருந்தே எந்த மழையிலும் வெயிலிலும,
கைநழுவிப்போய்விடாமல்
கூடவே வந்துகொண்டிருக்கும் பழக்கம்…
எப்படி வந்தது என்றுத் தெரியவில்லை,
ஏன் வந்தது என்றும் புரியவில்லை….,
முன் மாதுரியும் ஞாபகத்தில் இல்லை…  
வெயிலின் வெப்பம் தணிந்துகொண்டிருக்கும்
மாலைப்பொழுதுகளில் வீட்டில் நாலு சுவர்களுக்குள்
அடைந்துக்கிடக்கவிடாது வெளியில் குதிக்க
வெம்பும் மனம்…..
பால பருவத்தில், கூட்டாளிகளுடன்
தெருவில், பக்கத்துக் கோயில் குளங்களைச்
சுற்றியுள்ள காலி இடங்களில் மட்டுமல்ல சற்று தொலைவிலிருந்த
விளையாட்டுப்பூங்காக்களீலும் ஆடிக்களித்த,
தெரியாத சந்துபொந்துக்களைத் தெரிந்துகொள்ள
நடமாடித்திரிந்த, சதா துறு துறுவென்றிருந்த கை கால்கள்,
தற்போது காலத்தின் கோலத்தில் களைத்துத் துவண்டுவிட்டிருந்தும்,
மாலை நேரங்களில் எந்த இடி, மின்னல், மழையிலும்
வெளியேறி, நடந்து செல்ல வெம்பும் மனம்…..
வாகனங்களை நாடுவதில் நாட்டமில்லை………,
தெருநடையில் நின்றவாறு இரு பக்கங்களிலும்
பார்வைசெலுத்த  தலைத்திருப்புகையில்…..
கிர்ரென்று தலைக்குள் கிறுக்கம்,…கண்ணீர் திரையில்..
மங்கிய பார்வையிலும் நடைப்பாதையில்
கட்டிநிற்கும் முந்திய நாள் பெய்த மழைநீர் குட்டைகள்…,
அடுத்து, குவிந்து கிடக்கும், சின்ன பெரிய மூட்டைகளுக்கு
உள்ளையும் வெளியிலுமாக குப்பைக்கூளங்கள்…..,
அவற்றிலிருந்து ஒழுகி இறங்கி
பாதையில் படரும் கழிவுநீர்…..துர்நாற்றம்…
கழிவு நீரில் கால்படாமல் காலடி வைக்கும் அப்பியாசத்தின் போது,
மேலே,தலையிலும் கண்ணிலும் மோதும்
பக்கவாட்டு பாழிட மரத்து கிளைகள், இலைகள்…
எங்கே கால்தடுமாறி விழுந்துவிடப்போகிறோமோ…,
செருப்பிலிருந்து வெளியில் நழுவும் பாதங்கள்… …
சற்று நடந்ததும், நடைப்பாதையை கார் பார்க்காக்கி ‘
கார்களின் வரிசை, இடையிடையே
முச்சக்கிர, இருச்சக்கிர வாகனங்கள்…
சற்று நீங்கி, சென்ற மாத அடைமழையில், காற்றில்
ஒடிந்து விழுந்து அலங்கோலமாய் கிடக்கும்
மரக்கிளைகள் நடைப்பாதை முழுதும்…
கால் வைக்க இடமில்லையென வீதியில் இறங்கும் முன்,
கண்ணை குருடாக்கும், வாகனங்களின் ஹெட் லைட் ஒளிவீச்சுக்கள்.. 
சில அடிகள் நடந்து வீதியை கடக்கும் ஸீப்ரா கோடுகளில்
ஓரம் சேர்ந்து, காத்து நின்று பச்சை விளக்கு வந்ததும்
வீதியை கடக்க முனைகையில், போக்குவரத்து சட்டங்களை
காற்றில் பறத்தி விரைந்து வந்துகொண்டிருக்கும் வாகனங்கள்..
எதிர் முனையில், தனக்கு சம்பந்தமில்லாதது என்ற தோரணையில்
பார்த்து நிற்கும் ட்ராபிக் போலீஸ்……
இதைப்பற்றியொன்றும் அலட்டிக்கொள்ளாமல்
அங்குமிங்கும் விரைந்து கொண்டிருக்கும் ஜனங்கள்…
நெஞ்சை சுட்டெரிக்கும் கனல் பொறிகள் சற்றேனும் ஆறாத
என வெளியே விச்ராந்தியாய் நடக்க வந்தால்……
கனலை கொழுந்து விட்டெரிய செய்யும்
எண்ணைதுளிகளாய் இந்த வழியோரக் காட்சிகள்……!
  ..

                              நீல பத்மநாபன்
.