அம்மா….அம்மா….
இன்று தை அமாவாசை…….
பதினெட்டு ஆண்டுக்களுக்குமுன்,
இப்படீயொரு தை அமாவாசை நாளில்தானே
எங்களையெல்லாம் விட்டுப்பிரிந்து சென்றாய்….
உனை நினைக்கையில்,……எதைச்சொல்ல?, எதைச்சொல்லாமல் விட?
அன்றுபோல்தான் இன்றும் நெஞ்சில் மலைப்பு………சோகத்தின் நிழல்கள்….,, ..!
இணைப்புக்கோடுகள் போடத்தெரியாத, இயலாத
மின்னி மறையும் கோலப்புள்ளிகள் நெஞ்சம்
நிறைய…….. ……;
சமையல் கியாஸ், குக்கர், மிக்சி, கிரைண்டர், சலவை யந்திரம்
வகையறாக்கள் இல்லாத நாளில்
வீட்டில் நிறைந்து வழிந்த குழந்தை குட்டிகளின்
பல்வேறு ருசிபேதங்களுக்கேற்ப ஆக்கி
விளம்ப,
அணையா வேள்வித்தீ ஜ்வாலைபோல்
சதா எரிந்துகொண்டிருக்கும் அடுப்படித்
தீக்கொழுந்தொளியில்
ஜ்வலிக்கும் அம்மாவின் முகம்….,
அடுப்பில் பாத்திரம் பண்டங்கள் காய
காய்கறிக்காரி வாறாளா என்ற தேட்டமுடன்
அடுப்படிக்கும் தெருவாசலுக்குமா ஓட்டமும்
நடையுமா
பரபரக்கும் அம்மா….
இடையிடையே அம்மிமுன் விரைந்து
மஞ்சள், முளகு, கொத்தமல்லி, சீரகம் என பசரக்குப்பொருட்களை
அரைத்துக் குழம்பாக்கும் அம்மா……
சூரியன் வானுச்சியில் வந்து, முற்றத்தில் நனைந்த
துணிகளை உலர்த்த கட்டியிருக்கும் கொடியில்
வெயில் வீழ்கையில்
அழுக்குத்துணிகளை சோப்பிட்டு அடித்துத்
துவைக்கும் அம்மா…….
இடையில், தூளியில் கிடந்து கைகால்கள் அடித்து
அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் தம்பியையோ, தங்கையையோ
தூளி ஆட்டி தாலாட்டு பாடிச் சீராட்டும்
அம்மா….
சாமப்பொழுதுகளில் பள்ளிப்பாடங்களை
படித்துவிட்டு அயர்ந்து தூங்கையில்,,
எங்கள் காதுகளில் ஒலிசெய்யும்…கடபடா சத்தம்…,
அடுத்த நாள் காலைஉண்டிக்காக
ஆட்டுரலில் மாவரைக்கும் அம்மா.....
கடைசி மூச்சு வரை ; ,
வாழ்வில் எதிரிட வேண்டிவந்த
கொடுமையான சோதனைக் கட்டங்களிலும்
கடுமையான,வேதனைகள், ரோதனைகளையெல்லாம்
உள்ளுக்குள்ளையே புதைத்து,யாரையும் கரித்துகொட்டாமல்,
பிள்ளைகள் எங்களிடம் தன்னம்பிக்கையை விதைத்து
சுப எதிர்பார்ப்புடன், தளராது வாழ்ந்து காட்டிய அம்மா…
நீல பத்மநாபன்..
No comments:
Post a Comment