Friday, May 20, 2011

பாரதத் தாய்கள்

பாரதத் தாய்கள்

உனை எந்நேரமும்
மறவாதிருக்க
துயரத்தையே தந்துகொண்டிருக்க
வேண்டிக்கொண்ட
பாண்டவர் அன்னையை
தலைவலி பல்வலி
இதயவலி இடுப்புவலி
இன்னும் இன்னும்
உச்சிமுதல் உள்ளங்கால் வரை
சொல்லொண்ணா உபாதைகள்
விட்டுவைத்த
மாயம்தான் என்ன

கொண்ட கணவன்
குருடன் ஆதலால்
வாழ்நாள் முழுதும்
கண்ணைக் கட்டி
பார்வையை
மகாத்தியாகம் பண்ணி
தர்ம பத்தினியாய்
வாழ்ந்து முடித்த
கௌரவர் அன்னையே
எங்களூரில்
கோயில் கொண்டு
இன்றும் அம்மனாய்
வாழ்கிறாய்
அருள் பாலிக்கிறாய்
ஆனால்
உன் புத்திரர்கள்
நூற்றியொன்றுபேர்களில்
ஒருவருக்குக் கூட
உன் சத்க்குண சம்பத்தில்
துளியிலும் துளியேனும்
அளிக்கப்பெடாததின்
மர்மம்தான் என்ன

நீல பத்மநாபன்
16 ஏப்ரல் 2011

Tuesday, April 12, 2011

எழுத்து அனுபவங்கள்

“ கலைப்பணியில் ஈடுபாடு உடையவர்கள் தமக்கு உகந்த பாணியில் சுதந்திரமாக ஒருவிதசமர்ப்பண மனப்பான்மையுடன், ஆத்மதிருப்தியுடன் செயல்பட்டுவருகையில் அவர்கள் அறிந்தும் அறியாமலும் அவர்கள் நெற்றியில் ஒரு முத்திரை (label) குத்தப்படுகிற்து.இது, கலைபிரிவுகள் பாற்பட்டதாக இருக்கலாம், எழுத்துத்துறையென்றால் மொழி, நடை, இலக்கியப்பிரிவுகள்-கதை, கவிதைபோன்றவை சம்பந்தப்பட்டவையாக இருக்கலாம்.ஏனைய கலைவகையறாக்கள்-ஆடல், பாடல், ஓவியம், சிற்பம், கூத்து எல்லாம் இதில் அடங்கும்.தமிழ் எழுத்தாளன், மலையாள எழுத்துகாரன், கவிஞன், கதாசிரியன், நாவலாசிரியன்,நாடகாசிரியன்,தவிர ஓவியன்,சிற்பி, பாடகன், நாட்டியக்காரி இத்யாதி,இத்யாதிமுத்திரைகள்.ரவீந்திரநாத டாகூரை கவிஞர், கதாசிரியர்,நாவலாசிரியர் என்றெல்லாம் கூறுகட்டி விமரிசையாக திறனாய்வாளர்கள் விமர்சித்துக்கொண்டிருக்கையிலேயே அவர்உண்மையான கலைஆர்வத்துடன் ,அனுபூதியுடன் ஓவியக்கலையிலும்(painting) தன் செய்த்திறனை காட்டிக்கொகொண்டிருந்தார். எனவே,கலைஞன் தன் கலைஆர்வத்தை சமனப்படுத்த,வெளிப்பிரகடனம் செய்ய,மற்றவர்களின் முத்திரைகளைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல்- அனால் ஆங்கிலத்தில் சொல்வார்களல்லவா-a rolling stone gathers no mass என்று,அப்படிஏனோதானோ என்றில்லாமல் செய்வதை திருந்தச் செய் என்ற முதுமொழிக்கேற்ப தன் முழு சித்தத்தையும் சீரிய முறையில் ஒருமுகப்படுத்தி-அது ஐந்து வரி கவிதையாக இருக்கலாம்,ஆயிர பக்க நாவலாக இருக்கலாம் செயல்பட்டுக்கொண்டிருப்பதுதான் சிலாக்கியமானது.”
நீல பத்மநாபன்

31-3-2011-ல் திருவனந்தபுரம் பாரத்பவன் நிகழ்த்திய தேசீய ஒருமப்பாடு கருத்தரங்கில் எழுத்தனுபவங்கள்
என்றஎழுத்தாளர் பட்டறை துவக்க உரையிலிருந்து.

Wednesday, March 16, 2011

நீல பத்மநாபன் கவிதைகள் கர்ணாடக இசையில்

நீல பத்மநாபன் கவிதைகள்.………………. ராகம்

1) தூக் கம் ....... .(1966)........................... .நாட்டை
2) நெருப்புக்குச்சி (1967) கானடா
3)நிலை .............. (1967)................................ .ரஞ்சினி
4)? .. ............... (1967)............................... .மோகனம்
5)விமோசனம்.... (1973)............................... . ஹம்சநாதம்
6) )பூதக்கண்ணாடி.....(1993).................. அட்டனா
7) அபகரணம்.......... .(1973)............................ கல்யாணி
8) பக்கம்....... (1973)...................................கானடா
9) தேரோடும் வீதி....(1987)................... ஹமீர்கல்யாண
10) செக்போஸ்டுகள் (1973)................... சாமா
11)இறைஞ்சல்................(1993)..................... நாத நாம க்ரியா

1) தூக்கம்

ஜனனியின் கருப்பையில்
மார்ப்பின் கதகதப்பில்
கயிறு நுனி தூளியில்
கிரீச்சிடும் தொட்டிலில்
தந்தையின் அரவணைப்பில்
கோரைப்புல் பாயில்
சூரலிழைக் கட்டிலில்
எதிர்பாலின் கிளுகிளுப்பில்
வெல்வெட் மெத்தையில்
சேய்களின் ஸ்பரிசத்தில்
கோரைப்புல் பாயில்
கட்டாந்தரையில்
நா லு
பே ர்
தோள் தாங்கும்
பச்சை மூங்கில் பாடையில்
இடுகாட்டு வரட்டியில்
உய்விக்கும் நெருப்பில்
ஆறடி மண்ணில்
அந்தரீஷ வெளியில்

2) நெருப்புக்குச்சி

உருண்ட முனையில்
கந்தகச் செழுமை
குருதிச் செம்மை
பரந்த பரப்பில்
ரஸாயனக் கலவை
சிமிழின் சீற்றம்
அழுத்தி ஆழ்கையில்
அழிக்கும் செந்தீ
ஆக்கும் வெண் தீ
எரிந்து அடங்கையில்
புகையிழை
கரித்துகள்கள்
நூலிழை ் உயிர் லட்சங்கள்

3)நிலை

எழுத்தாணி மழுங்கியும்
சளைக்கவில்லை
எழுதாமல் இருக்கவும் முடியவில்லை
எழுதிய எழுத்துக்கோ
கணக்குமில்லை
எழுதாது அணைந்தவை
கொஞ்சமில்லை
சுவடியைத் தூக்கி நான்
அலையவில்லை
சுருள் நிமிர்த்திப் பார்க்கவோ
நாதியில்லை

4) ?

பிறவிக்கு நன்றி
பெற்றோருக்கு
வளர்ச்சிக்கு நன்றி
அவர்களுக்கே
கல்விக்கு நன்றி
ஆசானுக்கு
கலவிக்கு நன்றி
மனைவிக்கு
பதவிக்கு நன்றி
அரசுக்கு
பாசத்திற்கு நன்றி
உடன்பிறப்புக்கு
நட்புக்கு நன்றி
நண்பனுக்கு
அருளுக்கு நன்றி
இறைவனுக்கு
கொள்ளிக்கு நன்றி
குழந்தைக்கு
மிருத்துயூவுக்கு நன்றி
?


5) விமோசனம்

எழுதப்படாதிருந்தால்
களங்கப்படாதிருக்கும்
ஏடே
பாடப்படாதிருந்தால்
சேதப்படாதிருக்கும்
பாட்டே
உனக்கும்
எனக்கும்
இந்த ஜென்மத்தில்
விமோசனம்
உண்டா

6) பூதக்கண்ணாடி

ஊரை
உலகை
பூதக்கண்ணாடியில்
பார்த்தோம்
களித்தோம்
கண்ணாடி
பின் திருப்பியதும்
சுய முகங்களைக்
கண்டோம்
அப்பப்பா...
களிப்பெல்லாம்
போச்சு
கொந்தளிப்பு
கொதிப்பு
குதிப்பு
வெட்கம்
மட்டும்?

7) அபகரணம்

காத்திருந்தேன்
கள் மொந்தையுடன்
தேன் சுளையுடன்
நீ வந்தாய்
கள்ளையும்
தேனையும்
தந்து
ஆத்மாவை
அபகரித்துக்கொண்டாய்
பறிபோன ஆத்மாவை
நினைக்கவோ
நேரமின்றி
கள்ளிலும்
தேனிலும்
கரைந்துருகிப்போனேன்
கள் கசக்கையில்
தேன் புளிக்கையில்
ஆத்மாவைத் தேடினால்
கிடைக்குமோ
தெரியல்லே

8) பக்கம்

படிக்கப்
படிக்க
பக்கங்கள்
தீரவில்லை
படிப்பதை
நிறுத்தியதும்
பக்கங்கள்
தீர்ந்தன

9) தேரோடும் வீதி

இணைந்தவர்கள் கூட்டல்களாகி
கழந்தவர்கள் கழித்தல்களாகி
வாழ்க்கைப் பயணம்
தொடர்கையில்
கிரவுஞ்சப் பட்சியின்
விரக கீதமாய்
சிறகடித்து ஒலிசெய்யும்
நெஞ்சத்தடம்
சொல் ஏர்கள்
தாறுமாறாய்
உழுது மறித்திட
குருதித் துளிகள் தெறித்திடும்
யுத்தக்க்ளம்
அண்டம் கிடுங்கிட
ஆனந்த நர்த்தனம் ஆடிட
அகந்தை அசூயை
கோப தாபப்
புகழ்ப் பேராசைகளின்
கூர் முனைகள்
நசுங்கிச் சிதறிட
அஞ்ஞான இருளகற்றும்
மெய்ஞானப் பேரொளி
அஷ்ட திக் முகங்களில்
பூசிச் சிலிர்த்திட
ஆதித்த தேவனின்
காலத்தேர் சக்கிரங்கள்
நித்தம் நித்தம்
ஓடோடிக் கொண்டிருக்கும்
வீதியாம்
விதியதன் வீதி

10) செக்போஸ்டுகள்
ஊரில்லை வேரில்லை
மொழியில்லை வழியில்லை
மண்ணொன்றும்
உன்னை
மகனாய்க் கொள்ளவுமில்லை
பிறந்த பொன்னாட்டை
மூளியாக்கும்
செக்போஸ்டுகள்
வாயைத் திறக்காமல்
உனக்குள்ளே
கூனிக்குறுகி
சுய இரக்கச் சிந்தையில்
மறுகிப்போய்
நான் என்ற கல்லறையில்
அகம் என்ற சிலுவையில்
அடங்கிடும்
யக்ஞத்திலும்
தோற்றுப் போய்
புகலிடம் கிடைக்காது
ஆடி நடக்கும்
பாபாத்மா நீ

11) இறைஞ்சல்

குரல் நன்றாயிருக்கையில்
பாட்டை நிறுத்திவிடு
விரலுக்கு வீக்கம் வரும்முன்
வீணையை விற்றுவிடு
பரல்கள் சிதறும் முன்
சதங்கையை அவிழ்த்துவிடு
படுக்கையில் விழும்முன்
பாடையில் ஏற்றிவிடு


Recited by Sri Ramachandran in All India Radio, Thiruvananthapuram (broadcast in 1993)

Sunday, January 23, 2011

கவியோகி

கவியோகி

சின்ன விஷயங்களுக்கெல்லாம்
அமிதமாய் உணர்ச்சிகளை
விரையம் செய்வதைக் கண்டு
கவிதை எழுதத்தூண்டினார்
எழுத்தை ஆள்கிறவர்
கவிதைகள் எழுத எழுத
உணர்வுகள் உணர்ச்சிகள்
மேலும் கூர்மைபெற்றன
முறுக்கேறின
உக்கிரம் கொண்டன
உணர்ச்சிகளின் உளறல்கள்
என்றுரைத்து
யோகத்தில் சித்தத்தைச்செலுத்த
பணித்தார் யோகி
யோகத்தில் முழுக முழுக
உரம் பெற்ற ஆன்ம பலத்துடன்
உணர்வுகளும் ஊக்கம் பெற்றன
மிச்ச நாட்களின்
நகர்தலில்
முற்றிலும் சமனம் அடையா
உணர்ச்சிகள் உணர்தல்களின் கூட
சேர்ந்துகொண்ட
கவிதையும்
யோகமும்

நீல பத்மநாபன்

Monday, June 28, 2010

ஆத்மானந்தம்

ஆத்மானந்தம்

அறிவாளிகளிடம்
அசடனாகவும்
அசடர்களிடம்
அறிவாளியாகவும்
மேலும் கீழும்
தத்தளிக்கும் மனமே
அறிவாளியிடம்
அறிவாளியாக
இயலாவிடிலும்
அசடனிடமும்
அசடனாகலாமல்லவா
மேலும் மேலும்
அறிவதால்
அகந்தையை அகற்று
ஆத்மானந்தம் கொள்வாய்

பேரானந்தம்

ஒரு வாசல்
அடைந்துவிட்டதென்று
ஓய்ந்துவிடாதே
உனக்குள்ளே
ஒளிந்திருக்கும்
ஒம்பது வாசல்கள்
ஒவ்வொன்றாய்
திறந்திட
முயற்சிச்செய்வாய்
பேரானந்தம்
பெருகிடக் காண்பாய்

போதும்

போதும்

சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மே சதா

அருள்ஜோதியே
இத்தனை நாள் வாழவிட்டாய்
எண்ணியவை எல்லாம்
அடைந்ததாய் ச்சொல்லவில்லை
ஆனால்
எண்ணாதவை
மனதுக்கு
இதம் அளிப்பவை
அல்லாதவை
தந்தருளியிருக்கிறாய்
இனியுமென்னை
எண்ணவிடாதே
ஆசைப்படத் தூண்டாதே
போதும் போதும்
என்ற நெஞ்சைத்
தந்து என்னை
ஏற்றுக்கொள்வாயாக

நீல பத்மநாபன்
விஜயதசமி(17-10-2010 ஞாயிறு)

தாத்தாவின் கட்டில்

தாத்தாவின் கட்டில்

கொல்லையில் பலாமரத் தையொன்று
நட்டு ஆசையுடன் நீர் வார்த்து
தளிர் வருதா தண்டு வளருதா என்று
ஆர்வமுடன் வளர்த்தினாள் பாட்டி
ஆண்டாண்டு பள்ளிவிடுமுறைக்கு
பலாப்பழ ஆசை அலைமோத
பாட்டிவீடு வரும் பேரன்பேத்திகள் நாங்கள்
நெடுமால் திருவாய்
நெடுநெடுவென மேலே மேலே
வளர்ந்து உயரும் மரம்
கிளைபோடவில்லை
பூக்கவில்லை..காய்க்கவில்லை
ஆடிக்காற்றில் அடிபதறி
அய்யோவென்றுஒருநாள்
தலைசாய்ந்த கோரம்
விறகாக்க வந்தவர்களை விரட்டிவிட்டு
ஒட்டுமரப்பலகைப் பிய்ந்து
அவலட்சணமாய்க் கிடந்த கட்டிலில்
தலைச்சாய்த்த பலாமரத்தாய்த்தடியை
பலகைகளாக்கி பரப்பிமெருகு பண்ணி
அவர் சயனிக்கும் சூரல் இழைக்கட்டிலின்
பக்கவாட்டில் போட்டுக்கொண்டார் தாத்தா
பாட்டி,அம்மா,சித்தி,மாமா,மாமி யாரும்
அந்த கட்டிலின் பக்கம் போகவேயில்லை
பாவம், தாத்தா மட்டும் கிடக்கிறாரேயென்று
படுக்கச்சென்ற பேரன் பேத்திகள் எங்களையும்
வேண்டாம், உடம்பு வலிக்கும்,
தூக்கத்தில் கீழே விழுந்துடூவீங்க
-ஒரேயடியாய் தடுத்துவிட்டாள் பாட்டி
*
முற்றத்தில் கொணர்ந்து போட்டிருக்கும்
அந்தகட்டிலில் தாத்தாவின் வெற்றுடம்பு
தலையில் எண்ணைத் தேய்க்கிறார்கள்
குளிர்ந்த நீர்விட்டு குளிப்பாட்டுகிறார்கள்
பட்டையாய் திருநீறிட்டார்கள்
வாய்க்கரிசி போட்டார்கள்
சுற்றிவந்து மாரடித்து
ஒப்பாரி வைத்தார்கள்
நாங்களும் அழுதோம்
அன்றொருநாள் எங்களிடம் தாத்தா
‘எனக்கிந்த கட்டில் பயன்படும் ஒருநாள்’
என்று சொன்னது இதைத்தானா

நீல பத்மநாபன்