Thursday, June 9, 2022

ஜென்மாந்தரம்

இந்தப் பிறவியின் முடிவு

நெருங்கிக்கொண்டிருக்கையில்

இகலோக வாழ்வின் ஆசைகள்,

அபிலாஷைகள், பிடிப்புக்கள் யாவற்றையும்

கொஞ்சம் கொஞ்சமாய் கழற்றி,

உதறி விலக்கிக்கொண்டிருக்கும்

கைங்கரியம் முழுமூச்சில்….

இதைச் செய்யாவிடில்

மரண வேளையிலும்

நிறைவேறாது மிச்சமீதியிருப்பவற்றை

செய்து தீர்க்க

இனியுமொரு ஜன்மம் உறுதி…..

எனவே, கொஞ்சம் கொஞ்சமாய்

ஆசை அபிலாஷைகளைக் களைய

முழுமூச்சில் முயன்றவாறுக்

காத்திருக்கும் காலத்தில்

மனமெங்கணும் எப்போதும்,

நெருக்கமான நீத்தார் நினப்புத்தான்…,

ஒரு கணம் கூட

நிம்மதியில்லா நிலைமை…

இறுதி நொடிக்காகக் காத்திருந்துக் ,காத்திருந்து

நிலை குலைந்து, குமைந்து,, கலைந்த மனதை

ஒரு நிலைக்கு கொணர,

இந்நாள் வரை ஈடுபாடுகொண்டிருந்தவற்றில்

மீண்டும் செயல்படுவது—

குருஷேத்திரக் களத்தில் கர்மம் செய்தவாறு

மடிந்து வீழ்வது தான் உத்தமம்—

நிஷ்காம கர்மம் என்ற ஞானோதயம்….

மீண்டும் செயல் களத்தில்……..!

நீல பத்மநாபன் 14—1--2022

சென்ற, நிகழ் காலங்கள்

இளம் காலைப்பொழுதுகளில்

தூங்கியது போதும்

எழுந்து கடமைகளைச்செய்

என பட்சி ஜாலங்களின்

பள்ளியெழுச்சி கீதங்கள் கேட்டும்

பரிதியின் இளம்கதிர்களின்

இருளகற்றும் இந்திரஜாலங்கள் கண்டும்

நித்திரை கலைந்தெழுந்த நல்ல நாட்கள்

இனி திரும்பி வரவே வராது போய் மறைந்துவிட்டனவா….?

இப்போதெல்லாம் இரவில் படுக்கையில்

விழும் நேரத்திலிருந்து காலை புலர்ந்த பின்னரும்

தொடரும் வியதிகளின் உபாதைகளும்

நடைமுறை வாழ்வுடன்—உற்ற சொந்த பந்தங்களுடன்

ஒத்துப்போக இயலாத மானசீக சித்திரவதைகளும்

இறுக்கங்களும், பித்ருக்களைப்பற்றிய

சின்னசின்ன நினைவலைகளும்

அவர்கள்கூடப் போய்ச்சேர்ந்தவிடமாட்டோமா

என்ற ஏக்கங்களும் தொடரும்

நிகழ் காலம்……………

நீல பத்மநாபன் 16—6--2020

நல்லரசு/ வல்லரசு

 “இதனால் அனைவருக்கும்

தெரிவிப்பது என்னவென்றால்

இந்நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும்—

குழந்தை குட்டிகள், ஆண்கள் பெண்கள்,

இளைஞர்கள், வயோதிகர்கள் வேறுபாடின்றி

மருத்துவ ரீதியில் தகுதியுள்ள சகலமான பேர்களுக்கும்

’மொபைல்’ மருத்துவ மனையில்

அவரவர் குடியிருப்பில் நேரில்ச் சென்று

கோவிட் தடுப்பூசி வழ்ங்கப்படும் ,

முன்பு பெரியம்மை., காச நோய்களுக்கு

தடுப்பூசி தந்தது போல்……

சுவர் இருந்தால் தானே சித்திரம் தீட்ட….!

டும்….டும்…. டும் “

9—5—2021 நீல பத்மநாபன்

 

 

சர்ப்ப சகவாசம்

 “Learn to accept blame, criticism and accusations without retaliation even though untrue and

unjustified” -Yogananda

இந்நாள் வரை குடும்ப நலனுக்காக

சுக சௌகரியங்களை உதறிவிட்டு,

உடல் உழைப்பையும் ஊதியத்தையும்

அந்தரங்க சுத்தியுடன் செலவழித்து,

கூடியமட்டும் பிறரை நாடாமல் வாழ்ந்த வாழ்வில்

,தேய்ந்து, ஓய்ந்துப்போகும் உள்ள உடல் உபாதைகள்.. ,

மீதி காலம் பிறரை நாடாமல் வாழ்வது

அசாத்தியமாகிவிடுமோ போன்ற

சுய இரக்கச் சிந்தனைகள்-சித்ரவதைகளில்

சுயம் எரிந்தடங்கிக்கொண்டிருக்கும்

வயசாளிக் கிழவர்….……

அவளைப் பொறுத்தவரையில்

அவனொருப் பணம் காய்க்கும் மரம்,

பிள்ளைப் பெறப் பயன்பட்ட யந்திரம்..

.ஆயுள் நீண்டுகொண்டிருக்கும்

கிழவனுக்கு ஆக்கிக் கொட்டும் பணியில்

சலிப்படைந்து, ”‘மனசுக்கு நிம்மதியில்லை”

என்று அதைத்தேடி,,வெளியூர்களில் வசிக்கும்

மகன், மகள்களின் வீடுகளுக்கு அடிக்கடி திடீர் பயணம்……

அவர்களுடன் கோயில் குளம், கடைக்கண்ணி என்று சுற்றுலா,

மகள்-மருமக்களின் ஷஷ்டிபூர்த்தி, திருமண ஆண்டு நாள்,

பேரன் பேதிகள், கொள்ளுப்பேரர்களின் பிறந்த நாட்கள்,

அன்னமூட்டல், காதுகுத்தல். காவடி இத்யாதி

சடங்குகளில் பங்கெடுத்தல் என்ற ரகசிய திட்டங்களை

முன்கூட்டியே தீட்டிவிட்டு, அதை மூடிமறைக்க,

கிழவனைப்பற்றி இல்லாததும் பொல்லாததுமான

அபாண்டங்கள் குற்றசாட்டல்கள். அவதூறுகளை

அடுக்கடுக்காய் ,சரமாரியாய் வாரி இறைத்து

திக்குமுக்காடித் திணறவைத்து

ஊர் சுற்றிக்கொண்டிருக்கும்

உலகம் சுற்றும் இல்லக்’கிழவி’……………

நீல பத்மநாபன்

சோலை/ சேவை

வாடாமலராயினும்

வாடிச் சருகாத

பூ, பொருள், உயிர், பொழுதுண்டா

அவனியில்……?

அப்பொழுதில்,

ஒருக் கணமாவது

நாதன் உனை சேவிக்கும்

மனம் படைத்தோர் எத்தனை…?


நீல பத்மநாபன் 18—1--2020

வேண்டுகோள்

“ தூங்கையிலே வாங்கிற மூச்சு, சுழிமாறிப்போனாலும் போச்சு”

                  யாரோ--பழமொழி

ஒவ்வொரு நாள்

மதிய, இரவு நேரங்களில்

படுக்கையில் சாய்கையில்

எல்லாம் வல்ல இறைவன் அளித்த

உயிரின் மூச்சே,

உன்னிடம் ஒரேயொரு

வேண்டுகோள்…..

கடைசித் துரும்பென

வண்டி வண்டியாக

சுமைகளைச் சுமந்து,

ஓடிக்களைத்துத் துவண்டபின்னரும்

சுழி மாறிப் போயி

உதவிட மாட்டாயோ……’’

நீல பத்மநாபன் 24----8----2021.