கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா
உனை மீண்டும் அடைந்திட
ஆசை கொண்டு
பிறவிகள் பல
வேண்டிப் பெற்று
யுகாந்திரங்கள் பல
நீந்திக் கடந்து
கலியுகம் தாண்டியிந்த
கணினி யுகத்தில்
தனிப்பட்டுப் போன
தற்கால கோபியின்
குமுறல் இது
மானிடப் பிறவியின்
இடையறா இன்னல்களை
மறந்திட
ஆயர்பாடியில்
ஆடிக்களித்த
ஆனந்த நாட்களை
கனவதில் காண்கின்றேன்
கனிவுடன் கரைகின்றேன்
அந்த நாளும் வந்திடாதா என
ஆறாத பிரிவுத் துயரால்
வாடி வதங்கின்றேன்
உள்ளம் உருகிட
கண்ணீர் வடிந்திட
உனை நாடிய ராதையின்
விழிநீர் நீ
துடைக்கலையோ
செயலிழந்த பார்த்தனுக்கு
பாதை நீ காட்டலையோ
பிஞ்சு நாள் ஏழைத்தோழனை
கை கொடுத்து தூக்கலையோ
நாராயணீயம் பாடியவரின்
கொடும் நோய் அகற்றலையோ
கர்ம யோகத்தின்
கரடுமுரடான பாதைகள்
கடந்து
உற்றம் சுற்றம்
மாயையெனப் புரிந்து
புருஷாயிசின்
கடைக்கோடியில்
மீண்டும் உனை நாடி
வந்து நிற்கும்
இவன் முன்
ராதை முன் ரமணனாய்
அசுரர் முன் மோகினியாய்
இன்னுமொரு
ரமணியின் கோலம் கொண்டு
வந்திடலாகாதோ
நெஞ்சத்து சுமையெல்லாம்
கண்ணீராய் கரைந்துருக
உன் திருமடியில் தலை வைத்து
அழுது தணிந்திடும்
அருட்பேற்றை
தந்தருளும் பெரும் தயையை
வரி வழங்கிடலாகாதோ
என்னருமை ராதையின்
கிருஷ்ணா கார்முகில் கண்ணா
|