இந்தப் பிறவியின் முடிவு
நெருங்கிக்கொண்டிருக்கையில்
இகலோக வாழ்வின் ஆசைகள்,
அபிலாஷைகள், பிடிப்புக்கள் யாவற்றையும்
கொஞ்சம் கொஞ்சமாய் கழற்றி,
உதறி விலக்கிக்கொண்டிருக்கும்
கைங்கரியம் முழுமூச்சில்….
இதைச் செய்யாவிடில்
மரண வேளையிலும்
நிறைவேறாது மிச்சமீதியிருப்பவற்றை
செய்து தீர்க்க
இனியுமொரு ஜன்மம் உறுதி…..
எனவே, கொஞ்சம் கொஞ்சமாய்
ஆசை அபிலாஷைகளைக் களைய
முழுமூச்சில் முயன்றவாறுக்
காத்திருக்கும் காலத்தில்
மனமெங்கணும் எப்போதும்,
நெருக்கமான நீத்தார் நினப்புத்தான்…,
ஒரு கணம் கூட
நிம்மதியில்லா நிலைமை…
இறுதி நொடிக்காகக் காத்திருந்துக் ,காத்திருந்து
நிலை குலைந்து, குமைந்து,, கலைந்த மனதை
ஒரு நிலைக்கு கொணர,
இந்நாள் வரை ஈடுபாடுகொண்டிருந்தவற்றில்
மீண்டும் செயல்படுவது—
குருஷேத்திரக் களத்தில் கர்மம் செய்தவாறு
மடிந்து வீழ்வது தான் உத்தமம்—
நிஷ்காம கர்மம் என்ற ஞானோதயம்….
மீண்டும் செயல் களத்தில்……..!
நீல பத்மநாபன் 14—1--2022
No comments:
Post a Comment