Saturday, May 11, 2019

குயில் நாதம்


குயில் நாதம்

முன்பெல்லாம் காலையிலோ மாலையிலோ
வெயிலின் வெப்பம் தணிந்த பொழுதுகளில்
காற்றினிலே வரும் கீதமாய்மென்மையாய்க்
காதினிலே வந்து வீழ்ந்துகொண்டிருந்த உன் சோக நாதம்
இப்போ சில நாட்களாய் நேரம் காலமின்றி
வைகறைப்பொழுது, சூரியன் உச்சியில் நிற்கும் வேளை,
மாலை மங்கி இருள் சூழ்ந்த நேரங்களிலும்
விடாமல் ஏகாந்த, சோகரீங்கார நாத இழையாய்
உள் புகுந்து, இதயத்தை வாட்டி வதைத்துக்
கொண்டிருக்கிறதே……… ஏன்…….…… ?
இன்னதென்றுச்சொல்லத்தெரியாத சோக வெறுமை
நெஞ்சகமெங்கணும் புகைமறையாய் நிறைந்து வழியும்
ஒருவித நிம்மதியின்மை….ஆற்றாமை
வீட்டில் கீழ் அறைகள்-குளியலறை, மேல்மாடி…..
எங்கும் விடாமல் தொடர்ந்துகொண்டிருக்கும்
உன் நாதரிங்காரம் வெறு யாரையும்
அலட்டுவதாய்த் தெரியவில்லையே……
அதைப்பற்றிப்பேசி அந்தரங்கத்தை
அம்மணமாக்கவும் தோன்றவில்லை……
உடல் உறுப்புக்கள் வலுவும் பொலிவும் இழக்க இழக்க..
உள்ளத்து உணர்ச்சிகள் அலைவிச்சுக்களாய் ஆர்ப்பரிக்க,
அந்திமத்தின் காலடியோசை நெருக்கமாய்க் கேட்கக் கேட்க….
இந்நாள் வரையுள்ள ஆயுளின்
இந்த இறுதி நாட்களில் பேரிடியாய்
அனுபவமாகும் உதாசீனம்……..
யாருக்கும் வேண்டாத அதிகச் சுமையாகிப்போனோமோ
என்ற மானசீக சுய வதைப்பு…… ..
போதுமின்ற அவனி வாழ்வு…..ஒரு நாள், ஒரு நொடி
முன்னாலாவது போனால்பொதுமென்று
அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில்
வா   வா ….   உன அழைப்பா கோகிலமே………?   
பிரிவாற்றாமை……அது விரகமென்றுத் தோன்றவில்லையே
வேறேதோ பாசப்பிணைப்பின் வெளியீட்டு வீறிடலா…....,
இல்லை, முன் ஜன்மாந்திர சங்கிலித் தொடர்பா……
வா  வந்துவிடு………இந்நாள் வரை அனுபவித்ததெல்லாம் போதும்..
இனியும் அவஸ்தைப்படவேண்டாம் ,உனக்கு நானிருக்கிறேன்
தம்பீ………தம்பீ…….…
திடீரென்று  உள்ளுக்குள்ளே …….ஓர் மின்வெட்டு……..
அக்கா……….நீயா…………..?
அப்போது தனக்கு ஐந்து வயதிருக்குமா
.வெறும் இரண்டு வயதுக்கு மூத்த ஒரே அக்கா
தெருவில் போகுமிடங்களிலெல்லாம் கைப்பிடித்து
தம்பி தம்பியென பாசமுடன், பெருமையுடன் கூட்டிச்செல்லும் அக்கா
பாடம் படிக்கவில்லையென்றோ, குறும்புத்தனமென்றோ
அப்பாவோ அம்மாவோ அறைய வந்தால்
தம்பி மீது அறை விழாதிருக்க அவள் சிறிய பாவாடையை
கேடையமாய் விரித்தவாறு இடையில் வந்து விழ
சில வேளைகளில் அறைகளை அவளே வாங்கிக்கொள்ள….…..
பிஞ்சாயிருக்கையிலேயே எல்லோரையும்
சோகக்கடலில் ஆழ்த்தி காலத்திரையில் நட்சத்திர
ஒளிப்புள்ளியாய் மறைந்து விட்ட ஒரே அக்கா….
பித்ருக்களை நினைக்கையிலும், அல்லாத போதும்
பிரக்ஞை வெளியில் வெளிச்சம் அதிகமில்லா
ஏதோ ஒரு மூலையில்அந்த களங்கமில்லா
களையான அழகு முகம்……..
இப்போ……..எல்லா இகலோக இம்சைகளிருந்தெல்லாம்
நிரந்தரமாய் விமோசனம் தந்தருளும் அபயக்குரலாய்-அழைப்பாய்…..
இதோ………மீண்டும் அதே அன்பு நாதம் மிக மிக அருகில்….
இடைவெளி இல்லாமல்…..தம்பீ…..தம்பீ…………..

   8-3-2019 (உலக மகளிர் தினம்)                       நீல பத்மநாபன்

No comments: