Friday, July 28, 2017

நீண்ட நிசி

                              நீண்ட நிசி
     நீண்ட நிசியில் நித்திரையின் மடியில்
         காட்டுவெளியில் கண் விழிக்கையில்
      காலத்தை கடந்துவிட்டோமா
     கோலத்தை இழந்துவிட்டோமா, தெரியாத
       மயக்கத்தில் தெளிவில்லாக் குரல்கள்
      புரியாத மொழிகள்….. கண்டவை கொண்டவை எல்லாம்
   நீர்வரைகளாய் மக்கி மடிய......
    என்றோ எங்கோ வாழ்ந்து வீழ்ந்த
   நினைவலைகள் கனவாய் தேய்ந்து மாய
  சுற்றிலும் முட்டிமோதும்  மனிதர்களின் இடையில்
   கால் கடுக்க தொண்டை வரள  
      வயோதிக சகஜ உள்ள உடல் உபாதைகளுடன்.......
   கோடீஸ்வரர்கள் அரசியல் பிரமுகர்கள்
   காலதேவனின் பாசக்கயற்றில் சிக்காமல்
  பிராணனை தக்கவைக்க ஐந்து நட்சத்திர மருத்துவங்கள்,
   அண்டைநாடுகளுக்கெல்லாம்பரிவாரங்களுடன்                     படையெடுத்துக்கொண்டிருக்கும் நாளிலும்,
  ஏழை பாழைகள் சரணடையும்
 அரசு மருத்துவ மனைகளில்
 பிரவேசிக்கப்பெற்று சிகிச்சைபெறும்
 ஒன்றிரண்டு ஏழைத்தோழர்களான
 மக்கள்ப்பிரதிநிதிகள், மந்திரிகளின்
செய்திகள் கொட்டை எழுத்துக்களில்
வாசித்து ஞானோதயம்  பெற்று
வியாதியின் உச்சகட்டத்தில்
இங்கு வந்து மூன்றுமணி நேரமாய்
வியர்வையில் குளித்து தொண்டை வரள
தள்ளாமையின் உபாதைகளில் சுய சித்திரவதைக்கு
உள்ளாகியிருக்கும் அதிசாகசம்...
முட்டி மோதி அங்குலம் அங்குலமாய்
தன்னைப்போலவோ, அதிகமாகவோ ரோதனைகள்
வேதனைகளில் இன்னலுறும் சக நோயாளிகளுடன்
வைத்தியத்திற்கெல்லாம் நாதனின் தரிசனத்தை நாடி
முன்னேறிகொண்டிருக்கும் அவச நிலை.....
நிசியும் நித்திரையும் காட்டுவெளியும்
காலத்தின் கோலமும் முற்றுப்பெறாது தொடர்கிறதா........?
 நீல பத்மநாபன்
(மார்ச் 21, 2017-அனைத்துலக கவிதை தினம்)





No comments: