Wednesday, February 20, 2013

கவிதை


மனமாசுக்கள் அகன்றிட.....

நீல பத்மநாபன்

பொங்கலோ பொங்கல்

ஆற்றுகால் அம்மைக்கு பொங்கல்

காடும் மலையும் தாண்டி

அனந்த சயனத்தில் அனுக்கிரகம் பொழியும்

புண்ணிய புராதன பூமியில்

வந்து வாழ்ந்தருளும் குடமலைத் தெய்வமே

ஆற்றுகால் அம்மையே

உனக்கு பொங்கலிட்டு வழிபட

குடும்ப கெடுபிடிகளையெல்லாம் மீறி

கூட்டம் கூட்டமாய் ஓடோடி வந்த

உள்ளூர் வெளியூர் மங்கைகள் நாங்கள்

பொங்கல் போடும் உன் திருமுற்றம் இந்நகரம்

எங்கெங்கும் குவிந்து உயரமாய் எழுந்துநிற்பது

குப்பைக்கூளங்களின் மாசுமலையன்றோ....

அவை எரிந்துயரும் நச்சுப்புகையில்

கறுத்திருண்ட ஆகாயமதில்

இப்போதெல்லாம் கருடனல்ல கரும்சிறகுகள்

வீசி,கூர்மையான நகங்கள் நீட்டி பொங்கல்

பானைகளை பறித்திட வட்டமிடும் பருந்துகள்..

“தெரியாதாடீ உனக்கு, இந்த காந்தளூர்’சாலை’

இப்ப இந்த பட்டணத்தின் விளப்பில்சாலையாம்

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வரும்போது

இங்கெல்லாம் குப்பைக்கூளங்களை கொணர்ந்து

இறக்கும் லாரிகள் வரிசையாக இருக்குமாம்

அப்பொ அவங்கவங்க வீட்டில்தான் பொங்கல்”



குப்பைக்கூளங்களின் இடையில்

ஆயிரமாயிரம் அடுப்புக்களில்,

கோயில் பண்டார அடுப்பிலிருந்து பகர்ந்து

வந்த அக்கினி ஜ்வாலையில்

பொங்கி வழியும் பொங்கலோ பொங்கல்...

ஆற்றுகால் அம்மைக்கு பொங்கல்

எங்களையும் உன்னையும் இந்த துர்கதிக்கு

ஆளாக்கியவர்களின் மனமாசுக்கள் அகன்றிட

பொங்கலோ பொங்கல்.....



விளப்பில் சாலை= புறநகர் பகுதியில் நகர குப்பைக்கூளங்களைக் கொணர்ந்து இயற்கை உரம் தயாரிக்க ஆர்ஜிதம் செய்யப்பட்ட இடம். பத்து அண்டுகளாய் உரத்தொழிற்சாலைத் தொடங்ப்படாமல் குப்பைக்கூளங்களை குவித்துக்கொண்டிருந்ததால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்ட அப்பகுதி வாழ் மக்களின் எழுச்சிக் காரணமாய் கடந்த ஒராண்டு காலமாய் இந்நகர குப்பைக்கூளங்கள் அங்கு கொண்டுப்போகப்படுவதில்லை.

. 2013



No comments: