Monday, April 9, 2018

நம்பிக்கை


                      நம்பிக்கை
  புத்தக விழாக்களுக்குச் சென்றால்
  வாங்க வருபவர்களைவிட
  விற்க வருபவர்களே அதிகம்..
  கதை கவிதை அரங்கங்களுக்குச் சென்றால்
  கேட்க வருபவர்களைவிட
  கதை கவிதை வாசிக்க வருபவர்களே அதிகம்...
  மனபாரங்கள், எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களையெல்லாம்
  முறையிடலாமென்று வந்தால்
  கேட்பவர்களைவிட முறையிடுபவர்களே அதிகம்...
  வேறுவழி தெரியாமல்
    பக்தி யோகத்தில் கடைசிப்படியெனத்தெரிந்திருந்தும்
  உன்னை நாடி வ்ந்து அடைக்கலம்...
    அதோடு, பகல் நேரம் பூரா பகலவனின்
  வெளிச்சம் வெயில் வெப்பத்தின் கூட
  சுட்டெரிக்கும் தீ நாக்கின் வாக்கு,
    போக்குகளின் இம்சைகள்...
  விம்மும் நெஞ்சுடன் தான்
  கரடு முரடான குண்டும் குழியும் கொண்ட
  இருளும் வெளிச்சப்புள்ளிகளும் இரண்டற கலந்த
   பாதைகள் நடந்து உன்னிடம் அடைக்கலம்....
     சின்னாட்களில் அதைத்தா இதைத்தா என்றெல்லாம்
      வேண்டியதைப்போல்
  பின்னாட்களிலும் பட்டம் தா, பதவி தா
 என்றெல்லாம் யாசிப்பது கீழான இறைஞ்சல்....
  எது தகுதியோ அதைச்செய்..,
  இல்லையேல் உலக நன்மையை வழங்கு..
  -இதெல்லாம் கூட தேவையா....?
  அவனின்றி அணுவும் அசையாது...’,
  நடப்பதெல்லாம் நன்மைக்கே
  இந்த தாரக மந்திரங்கள் போதாதா ,
  தனி பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் வேறு வேண்டுமா........?
      முன்னால் நின்ற ஒரு சிலரில்
  ஒரு முகம் முன்பு எப்போதோ
  கண்டு மறந்தது போல் ஒரு மாயத் தோற்றம்...
  ஒரு குறு நகை அரும்புகிறதா....
  நீண்ட அவர் கரத்துடன் தன் கரமும்
  ஸ்பரிசித்து திரும்பியதும்
  நெஞ்சில் நிறையும் நிம்மதி....                            நீல பத்மநாபன்




No comments: