வாய்க்கரிசி
காந்தியின் உண்ணாநோன்பைத்
தெரியவரும் முன்பே
சின்னவயதினிலே
வீட்டில்
நிகழும் சின்னச்சின்ன
சண்டைகள் முரண்பாடுகளின்
போதெல்லாம் ஒன்றுமே
சாப்பிடாமல்
பட்டிணிகிடந்து முரண்டுபிடிக்கும் குணம்...
அடிக்கடி
இதுவே ஒரு வழக்கமாகிவிட்டதும்
பசிக்கிறப்போ வேணுமுன்னா தானாக வந்து
சாப்பிடட்டுமென்று ஒதுங்கிக்கொண்ட
அம்மாவும் மற்றவர்களும்....
பாவம், வயசான பாட்டிமட்டும்
மனசு கேட்காமல், வயிறு என்னடா பாவம் செஞ்சது
அதை பட்டிணிபோடாதே, உடம்பு துரும்பா போச்சு
என்று சொல்லி, பிகுபண்ணி அவளையும்
விரட்டியடிப்பதைப்
பாராட்டாமல்
உணவைப்
பிசைந்துகொண்டுவந்து
மற்றவர்கள் கண்டும் காணாமலும்
ஊட்டிக்கொண்டிருந்ததால்
உயிருக்கு பங்கம் வராமல்
நீடித்துக்கொண்டிருந்த
ஆயுள்....
பாட்டியின்
காலத்திற்குப்பின்
அந்த பணியை மேற்கொள்ளத்
தூண்டிய அம்மாவின் பெற்றபாசம்...
மணமாகி பொண்டாட்டிப் பிள்ளைகள்
ஆனபின்னர், அம்மாவும்
அப்பாவும்
காலத்திரையில் மறைந்த பின்னரும்
அபிப்பிராய வேற்றுமைகள், மனக்கசப்புக்களை
எதிரிட
வேறுமார்க்கங்களெல்லாம்
தோல்வியுறுகையில்
சொந்த உணவை முன்நிறுத்தி
இந்த தார்மீகப்போர் நீண்டபோது....
முதலில்
கீழ் இறங்கிவந்த வீட்டுக்காரி
பிறகு...பிறகு.....
வேணுமுன்னா எடுத்து போட்டு சாப்பிடுங்கோ
என்று, அலட்டிக்கொள்ளாமல்
ஒதுங்கிக்கொண்டாள்.....
பசி வந்துபோனபின்னரும்
கீழிறங்கி
வர அனுமதிக்காத
வைராக்கிய சித்தம்....
பல நாட்கள் வீட்டுணவுக்கு முழுக்கு..
சில
நேரங்களில் வேண்டாவெறுப்பாய்
பணி இடங்களிலோ, அதிக ஆள் அரவமில்லா
ஓட்டல்களிலோ
எதையாவது அள்ளிகொட்டி
கும்பி ஆவியை தணிப்பது.....
குறைவான
போஷாக்கினாலோ என்னமோ
உடம்பில், மனதிலும்தான்
எப்போதும் ஏதேனும் வியாதிகள், உபாதைகள்....
காலத்தின் கோலங்கள்
வாழ்வில் மாற்றங்கள்
இயல்பாய் விதைக்க விதைக்க.....
வேலையிலிருந்து ஓய்வு பெற்ற நாட்கள்...
பேரன் பேத்திகள்......
பாட்டனிலிருந்து பூட்டனாய்விட்ட
தள்ளாமை....வியாதிகள்...கவலைகள்...
மன இறுக்கங்கள்..
வீட்டில் உனக்கு நான், எனக்கு நீ..,
என்ற தனிமைப்பட்ட வயோதிக வாழ்வில்
யார் முந்தி
என்ற நிலையிலிருந்து
நானதான் முந்தி என்ற கட்டம் வந்தும்.....
சண்டைகள்
வாக்குவாதங்கள்
ஒண்டிக்கு ஒண்டி
ஆத்திரப் பிரகடனங்களுக்கு
குறைச்சல் இல்லை.
உணவு விஷயத்தில்
பழைய வைராக்கிய சித்தத்திலிருந்து
கீழிறங்க
இயலாத பிறவி குணம்,
மூன்று
நேர உணவுக்கு முன்னும்
பின்னும்
ரத்தக்கொதிப்பு, வயிற்றுப் புண் இத்யாதி
வியாதிகளுக்கு மருந்து மாத்திரைகளிருந்தும்...….. ....
முன்னால் போல் வெறும் வயிற்றுடன்
வேனா வெயில்
அடைமழை என்றொன்றும் பாராமல்
வெளியில்
இறங்கி ஓடும் வலுவில்லை..
நெஞ்சின் சிதைத்தீ வழி
கும்பி கொதிப்பில்,
வேறுவழிதெரியாமல், வீட்டில்
ஆக்கி வைத்திருப்பதிலிருந்து
“வாய்க்கரிசி”, “கொலைச்சோறு”
என்றெல்லாம் முணுமுணுத்தவாறு
சுவை மறந்து வாரிகொட்டும்போது……,
தன் பசி
பொறுக்காத அம்மா, அப்பா,
பாட்டியை எல்லாம்
நினைந்து
அறியாது நிறையும்
விழிகள்....
* * *
வாழ்க்கை
நாடகத்தில் காலதேவன்
வந்துபோன பின், பாடையில் வைத்து
கட்டும் முன், இறுதிச்சடங்குகள்-
மாரடிப்பு, வாய்க்கரிசி .,நடந்தேறும் காட்சி
“பொம்பளைங்க இனி வேறுயாராவது
வாய்க்கரிசி போட உண்டா....?”
ஊர்ப்பெரியவர்
கத்தினார்...
”வேறுயாருமில்லை..”
யாரோ சொன்னதை வேறு பல குரல்கள்
ஏற்று பாடுகையில்,
மூலையில் முடங்கிக்கிடந்த
இல்லக்கிழவி குபீரென்று எழுந்தோடி வந்தாள்..
“பெண்டாட்டி வாய்க்கரிசி போடும் வழக்கமில்லை”
ஊர்க்காரர்கள் விலக்குவதையொன்றும்
சட்டைசெய்யாமல் கை நிறைய வாய்க்கரிசியை
ஊட்டினாள் கிழவன் வாய்க்குள்........
நீல பத்மநாபன்
1 comment:
மிக சாதாரணமான உதிர்த்த சொல்லின் வலி மரணத்தில் பல மடங்காக வலிக்கும் நிதர்சனம்.. அருமை..
Post a Comment