கவிதை பசுமையை
நாடி.....
காட்டைத் திருத்தினோம்
கழனி செய்தோம்
நஞ்சை
புஞ்சைகளில்
கதிர் கற்றைகள்
வளர்த்தோம்.....வளர்ந்தோம்...
தானியங்களின்
அறுவடை
பசித்த
வயிர்களுக்கு அன்னக்கொடை.
பறவைகள்....பசுமாடுகள்...ஜீவராசிகள் யாவுமே
செழித்தன
பசுமைப்புரட்சியில்....
நீலவானுடன்
சரசமாடும்
பச்சைமர
உச்சிகள்.....
பொதிகை மலைத் தொடர்ச்சிகள்....
குமரன்
குடியிருந்த குன்றங்கள்.....
பழமரச்சோலைகள்.....
ஜீவ ஊற்றாய்
தாகஜலம்
பொழிந்த
அருவிகள்...
நதிகள்....நீர்த்தடங்கள்.....
புனல் பூங்கணங்களை
சூல் கொண்ட
கார்முகில்
கன்னிகள்
வாரி வழங்கிய
மும்மாரி
அமிழ்த தாரைகள்
நாடெங்கும்
களிநடம் செய்த
நாமகளும்
திருமகளும்….
காலங்கள்
கரைந்தன....
ஆசையை வென்ற
பேராசைகள்..
காடான
காட்டையெல்லாம் அழித்தோம்..
வானம் முட்டிய
மரங்களையெல்லாம்
வேரோடு
சாய்த்தோம்....
கூண்டோடு ஒழிந்த
பறவைகள்..,விலங்குகள்..
மண்மேடுகளான
காடுகள்...,ஆறுகள்...
நீலமலையெல்லாம்
வெறும் மொட்டைக்
குன்றுகளாயின..
ஜீவ ஊற்றுகள்
நிரம்பி வழிந்த
நதிகளின் மடிகளைக்கூட
தோண்டித்
தோண்டி...,
மணலையெல்லாம்
அள்ளியள்ளி...,
கழனியாயிருந்த
பொன்விளையும் பூமியில்
மலையை உடைத்த
கற்களை ஜல்லிகளாக்கி...,
சிமண்ட்டுடன்
கலந்து,
காட்டை அழித்த
மரங்களை தடிகளாக்கி...,
சிமண்ட்
கோபுரங்கள்...,மாடிமேல் மாடிகள்....,
ராஜ பாட்டைகள்.....
நச்சுப்புகையை
எக்கணமும் நிறைக்கும்
வாகனங்கள்....,யந்திரங்கள்.....
சுற்றுச்சூழல்
மாசால் சுத்த வாயு சூன்யம்...,
பசுமையெல்லாம்
பொசுங்கி,
வெறும் கான்க்ரீட்
காடுகள்....
3
மீண்டும்
வஸந்தம் பிறந்திட....,
பூக்கள்
விரிந்திட....,
மழலைகள்
சிரித்திட...,
பசுமை
கொலுவிருக்க...,
அன்னை பூமியை
ஆராதிப்போம்....
மண்ணை மதிப்போம்...
மரங்களை நடுவோம்...
செடிகொடிகளை
பேணுவோம்..
பயிர்
வளர்ப்போம்....
மலையை வனமாய்
நிலைபெறச்
செய்வோம்....
நதிகளின் குளிர்
மடியில்
ஜீவ அமுதம்
மீண்டும்
சுரக்கச்
செய்திடுவோம்...
காற்றில் கலந்த நஞ்சு
அகலட்டும்....
பிராணவாயு
நிறையட்டும்....
மக்கள் குலம்
செழிக்கட்டும்........
செழிக்கட்டும்......
நீல பத்மநாபன்
No comments:
Post a Comment