Monday, February 13, 2012

நகரம் நரகம்

கவிதை

நகரம் நரகம்

நீல பத்மநாபன்

புறநகர் பகுதியில் பரந்த நிலப்பரப்பில்
பலநாள் ஆய்வுகள் ஆயுத்தங்கள்
உள்நாட்டு வெளிநாட்டுதொழில்நுட்பக்கூறுகள்
ரஸாயன உள்ளமைப்பு தயாரிப்புக்களுடன்
கோடிகள் செலவிட்ட தளவாடங்கள்
கொட்டுமேளம் குரவைகோரஸ்
ஆரவாரமாய் நிறுவப்பட்ட
நகர குப்பைக்கூளங்கள் பதப்படுத்தி
உரம் செய்யும் தொழிற்சாலை
நகரையும் நாட்டையும் ஆளவந்தவர்களின்
ஆண்டாண்டுகால போட்டாபோட்டி
நிர்வாகத்திறமையின் அறுவடை
நகர் முழுதும் அங்கிங்கினாதபடி
எங்கெங்கும் குப்பைக்கூளக்குவித்தல்கள்
தகனங்கள் புதைத்தல்கள்
சதா நீக்கமற நிறையும்
பிளாஸ்டிக் விஷ புகைச்சுருள்கள்
துர்நாற்ற வாயுமண்டலம்
சுற்றுப்புறச்சூழல்நச்சு
கூட்டம்கூட்டமாய் கொசுக்கள் ஈக்கள்
எலிகள் நாய்கள்
டெங்கிக்காய்ச்சல் பறவைஜுரம்
மலேரியா டைபாய்ட் ஜுரங்கள்
மஞ்சள்காமாலை இன்னும் என்னென்னமோ ஜுரங்கள்
வெறிநாய்க்கடியால் குரைத்துச் சாக்காடுகள்
இத்தனைக்குப்பிறகும்
நீயா நானா

No comments: