Saturday, January 28, 2012

கங்கை அன்னையே வணக்கம்

கங்கை அன்னையே வணக்கம்

நீல பத்மநாபன்

சம்ஹாரமூர்த்தியின் ஜடாமுடியிலிருந்து
உக்கிரம் குறைந்து
பூமியில் வீழ்ந்த
ஆகாய கங்கையே
ஓடிவரும் உன்
ஒவ்வொரு துளியிலும்
உனையே தரிசிக்கிறோம்
நாதியற்று அழுகி நாற்றமெடுக்கும்
தெய்வத்தின் இச்சொந்த நகரை
சுத்தம் செய்யும்
நல்நோக்குடந்தானா
சுயமாய் நீ வந்தாய்
எம் இல்லங்களின் புறமும் அகமும்
உரிமையுடன் கடந்து வந்து
ஆசிகள் அனுக்கிரங்கள்
அள்ளி வழங்கினாய்
ஆனால் குன்றாய் குமிந்துவிட்ட
கழிவுப்பொருள் கூம்பல்கள்
உடைந்து ஓடும் மண்ணினடி, வெளி
கழிவுநீர் சாக்கடைகள்
மிதக்கவிட்ட மாமிசமிச்சங்கள்
(நன்றி பூ-நகர மாதாவுக்கா,
முதல்வருக்கா,இல்லை இருவருக்குமா)
இவை மட்டுமா எத்தனையோ நாட்களாய்
அழுகி நாறும் நகரின் கழிவுகள்
யாவற்றையும்உன்னுடன்
ஒழுக்கி கொண்டுவந்து
கங்கை யமுனை காவிரி நகர்களை
இணைத்திடும் இந்த
சரஸ்வதிநகர் பெரும்வீதியை
கரைபுரண்டோடும் ஆறாக்கி
எங்கள் வீடுகளில் தள்ளியது
நியாயமா சொல்
* * *
நிரந்தரத் தீர்வுபணிகளுக்காக
கோடிகள் ஊடகங்களில்
முழக்கிடும் பிரஜாபதிகளே
வானம் கறுக்கையில் எல்லாம்
வீதி நதியாகும்
தெய்வம் பள்ளிகொள்ளும் இந்நகரின்
நடைப்பாதைகளில் ஆங்காங்கு
இல்லாமலாகிவிட்ட சிமண்ட் ஸ்லேப்களின்
இடுக்குகள் வழி
சாக்கடைகளில் வீழ்ந்து கைகால்கள் தலைகள் அடிபட்டு
குற்றுயிரும் கொலைஉயிருமாய்
நடைப்பிண்ங்களாய் செத்துசெத்து
பிழைத்து வாழ்ந்து முடிக்கின்ற
பாவம் பிரஜைகளைப்பற்றி
உங்களுக்குத் தெரியுமா
குறைந்தபட்சம் மழைவெள்ளம்
மூடிக்கிடக்கும் பாதாளச்சாக்கடைகளில்
முழுகி சாகாதிருக்க
கைகால்கள் தலைகள் உடையாதிருக்க
நடைப்பாதைகளில் நடந்துசெல்லவாவது
கொடிவைத்த ஊர்திகளில்
பதம் செய்த வாயுவின் சீதளத்தில்
சுகசயனம் செய்து
முன்னும் பின்னும்
பாதுகாப்புக்கூவல்கள் முழக்கி
பெருவெள்ள அழிவுகளை
நேரில் பார்த்துத் திடுக்கிட
நகர் ஊர்வலம் வரும்
எம் அருமை மக்கள்பதிகளே
மனம் கனியலாகாதா

No comments: