Tuesday, November 13, 2012

தேடித்தேடி


            தேடித் தேடி  
 அமைதியைத் தேடிதேடி
அவனியில் சகல சராசரங்களுக்கும்
சாந்தியும் சமாதானமும் அளிக்கும்
ஆண்டவன் சன்னிதிகளெல்லாம்
மாறி மாறிச் சென்றுபார்த்தால்
அகத்தை அவனில்
லயிக்க விடாத
ஆர்ப்பாட்டங்கள்.......,
ஆரவாரங்கள்...........,
போட்டாப்போட்டிகள்.......,
ஒலி,ஒளி,சுற்றுப்புற மாசுக்கள்.....,
சந்தைக்கடைகள் போல்,
ச்ந்துமுனைகள் போல்,
சட்டசபைகள் போல்.......!
                          நீல பத்மநாபன்
                            9-11-2012

                                      


                                                                      
               
                            

                                                  சூக்தங்கள்

              பலதில் உடன்பட்டாலும்
                சிலதில் மாறுபட்டால்
                எதிரியாய் முத்திரை
                நாட்டிலும்
                வீட்டிலும்....

                பிறவி வாசனையாய்
                உடன் வந்த துறை
                அன்னமிடும் தொழிலாய்
                அமையாதிருப்பினும்
                வந்து வாய்த்ததில்
                முழுத்திறமையைக் காட்டி
                முன்னுக்கு வர
                முயற்சி கொள்ளலாகாதா.....
                                            நீல பத்மநாபன்   
                                                 2011

Saturday, October 27, 2012


கவிதை
              இப்படியும் சில நாட்கள்
                                 நீல பத்மநாபன்
      சில நாட்கள் இப்படித்தான் விடிகின்றன ஏனோ.......
   எதையெதையெல்லாமோ செய்து தீர்க்க
   வெம்பும் மனமுடன் தீவிர சித்தமுடன்
   முழுமுனைப்பில் களத்தில் இறங்கினால்
   எதிர்பாராமல் குறுக்கே வந்து விழுந்து
   கதிகலங்கச் செய்துவிடும் ‘சகுனம் முடக்கிகள்’.....
   கூடவே வாழ்கிறவர் கூர் சொல்லாக இருக்கலாம்…,
   தொலைதூரத்திலிருந்து செவிவழி புகும்
   தொலைபேசி குரல்...,. மின் தடை..,.கணினிக் கோளாறு..,
   முன் அறிவிப்பின்றி வரும் விருந்துகள்
   இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ…!
   இவற்றிலிருந்தெல்லாம் மீண்டு வருகையில்
   மரத்துப்போய்விடும் உள்ளம்...,உறுப்புக்கள்....
   அன்றைய தினமும் வெறுமனெ
    பாழாய் முடிந்துவிடப்போகிறதே......,     
   மீதியிருக்கும் அற்பசொற்பம் ஆயுள் ஏட்டில்
   ஒரு தாள் கூட அநியாயமாய்
   காலகாற்றில் பறந்து மறைந்துபோகவேண்டியதுதானா?
   அயர்ச்சி..., ஆதங்கம்....முடியப்போகும் நாளின்
   அந்திம யாமத்தில் மனம் குமைந்து
   தலைச்சாய்க்க எண்ணுகையில்...
   எங்கிருந்து, எப்படியென்றுத் தெரியவில்லை
   ஜில்லென்று, உள்ளுக்குள்ளே பாலாழியாய்
   நுரை ததும்பி பொங்கும்                           
   உன்மத்தம் கொள்ளவைக்கும் உற்சாக போதை.....,ஊக்கம்........    
   அதில் மீண்டும் உருத்தெரியும் கர்ம மார்க்கம்...,சுதர்மம்...,
   விக்கினங்கள் எல்லாம் கரைந்துருகி....!
                                             விஜய தசமி
                                              24-10-2012.

                                             
                                            
                                                  

Wednesday, October 17, 2012

campus


காலேஜ்கேம்பஸ்
கல்லூரிநினைவுகள்:
எழுத்தாளர்நீலபத்மநாபன்

எழுத்தாளர் நீல பத்மநாபனுக்கு கேரள பல்கலைக்கழக கல்லூரியில் அடியெடுத்து வைக்கும்போதே அவருடைய மனது குதூகலிக்கிறது. பிரமாண்டமான காம்பவுண்டு சுவரைத்தாண்டி அழகான பூங்காவைத்தாண்டி கம்பீரமாக நிற்கிறது 1866.ல் கட்டப்பட்ட இந்த கல்லூரி. முன்புறம் ராஜராஜவர்மாவின் சிலை..நீல பத்மநாபன் 1956-58 காலகட்டத்தில் படித்த இயற்பியல் துறை படிக்கட்டில் ஏறி வராண்டாவைப்பிடித்தபடி பழைய நினைவுகளை அசைபோடுகிறார். பிசிக்ஸ் மெயினாக  இருந்தாலும் தமிழ்த்துறையோடு அதிக தொடர்புவைத்திருந்தார் நீல பத்மநாபன்.  கல்லூரி நினைவுகளுக்காக நம்முடன் பயணித்தவர் தமிழ்த்துறை நூலகத்தில் சென்றதும் அங்கிருந்த மாணவிகளுக்கு அவருடன் உரையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி. அங்கிருந்த  கிறிஸ்டில்டா என்ற மாணவி நீல பத்மநாபன் கதைகளைப்பற்றி முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்வதாக கூற மனதுக்குள் மத்தாப்பூவாய் முகம் மலர்கிறது.
அந்த மாணவியும் மற்ற மாணவிகளும் கேட்ட சந்தேகங்களை பொறுமையுடன் நிவர்த்திச்செய்கிறார். சில ஆலோனைகளும் வழங்குகிறார். இந்த கல்லூரியில் இருந்து வெளிவந்து ஆண்டுகள் 54 கடந்து விட்டபின்னரும் இக்கல்லூரியின் உடனான உறவு இன்னும் அகல வில்லை. பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அடிக்கடி வந்து போகிறார். தமிழ்த்துறையைச்சேர்ந்த அனைவருக்கும் அவர் பரிச்சயமானவராக இருக்கிறார். இளம் தலைமுறை மாணவ மாணவியர்கள் அவரை வணக்கத்துடன் வரவேற்று நலம் விசாரிக்கின்றனர். 
அங்கே சுற்றிச்சுற்றி வந்து பழைய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்ளத்துவங்கினார்; நகரச்சந்தடியிலிருந்து சற்று விலகியிருந்த
நாலாஞ்சிறை எனும் இடத்திலிருந்த மார் இவானியேஸ் கல்லூரியில் இண்டர்மீடியேட் முடிச்சதும் இந்த கேரள பல்கலைக்கழக கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியலில் சேர்ந்தேன். இண்டர்மீடியேட்டில் நல்ல மார்க் இருந்ததால் விரும்பிய குரூப் இங்கே கிடைத்து. நான் பள்ளியில் மலையாள மீடியம் படித்தாலும்(கல்லூரிகளில் ஆங்கில மீடியம்) பிறந்து வளர்ந்தது, மழலை பேசி வளர்ந்தது எல்லாம் தாய்மொழி தமிழில் என்பதால்,  சிறுவயதிலேயே நான் எழுதுவது தமிழில் தான். கையெழுதுப்பத்திரிகை நடத்துவது, கவிதைகள், கதைகள், தெருவில் சிறுவர்கள் நடிப்பதற்கு நாடகங்கள்-இப்படி பல்வேறு விஷயங்களில் எழுத்தார்வமுடன் இருந்திருக்கிறேன்.  இங்கே நான் இயற்பியல் பாடம் எடுத்திருந்தாலும் ,இங்குள்ள தமிழ்த்துறையின் மீதான என் அக்கரையும் அபரிமிதமானஆர்வமும் காரணமாக இயற்பியல் பாடத்தை கோட்டை விட்டுவிடவில்லை. என் அறிவியல், கணக்கு படிப்பு, எதையும் வள வளவென்றில்லாமல், கணக்கு நுணுக்கத்துடன்(arithmetic accuracy) படைப்புத்துறையில் கையாளும் பயிற்சியை அந்த காலத்திலேயே எனக்கு தந்துவிட்டது என்கலாம்..  அப்போது,தமிழ்த்துறைத்தலைவராக பேராசிரியர் ஜேசுதாசன் இருந்தார். மார் இவானியேஸ் கல்லூரியில் என் ஆங்கில ஆசிரியராக இருந்த டி.கெ.துரைசாமி(நகுலன்)யும்-அவர் அடிக்கடி ஜேசுதாசன் சாரைப்பார்க்க இங்கேயும் வருவார்,இங்கிருந்த ஜேசுதாசன் சார் அவர்களும் ன்து எழுத்தார்வத்தை  மேலும் மேலும் வளர்த்தவர்கள் ஆவார்கள். அத்துடன்  இங்கு பணியாற்றிய  பேராசிரியர்கள் சா.வே. சுப்பிரமணியம், அழகி சொக்கலிங்கம், வீரபத்திர செட்டியார், ஆங்கிலத்துறையில் என் ஆசிரியர்அய்யப பணிக்கர் ஆகியோர் மறக்க முடியாதவரகள். ஜேசுதாசன் சார் கம்ப ராமாயணம் போன்ற பழ்ந்தமிழ் இலக்கியம் மட்டுமல்ல, நவீன இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அக்காலத்தில் தமிழ் மாணவர் சங்கம் சார்பில் நடந்த கட்டுரைப்போட்டியில் பரிசுபெற்ற நான் அப்பரிசை கா.நா.சுப்பிரமணியம் அவர்கள் கையால்  வாங்கியது மறக்க முடியாத நிகழ்ச்சி. பிரபல தமிழ் இலக்கியவாதிகள் இங்கு வரவழைக்கப்பட்டு சொற்பொழிவுகள் நடக்கும். தொ.மு.சி. ரகுநாதன் ஒருமுறை இங்கு வந்திருந்தபோது சுந்தரராமசாமி அவருடன் வந்திருந்தார். அப்போதுதான் சுந்தரராமசாமி இலக்கிய உலகில் தடம்பதிக்கத்துவங்கியிருந்தார்.
இங்கே படிக்கும்போது கல்லூரி ஆண்டுவிழா மலர்களில் என்னுடைய படைப்பு  இடம் பெறுவதுண்டு. என்னுடையை ஆரம்பகால நல்ல சிறுகதைகளில் ஒன்றாக பேசப்படும் பதில் இல்லை!சிறுகதை இங்குள்ள ஆண்டுமலரில் தான் முதலில் வெளியானது. பொதுவாக பெரும்பாலான கதைகளில்,குறிப்பாக அந்த இளம் பருவத்தில், ஆண், பெண் பிரச்சனைகளைத்தான் சொல்வாங்க, ஆனால் அதிலிருந்து மாறுபட்டு,ஒரு சாலைவிபத்தில் சிக்கிக்கொண்ட ஒரு சிறுவனை மையமாக வைத்து எழும் பிரச்னையை சித்தரித்தந்தச் சிறுகதை பெரிதும்பேசப்பட்டது.
நான் சற்று சங்கோஜமான டைப் மாணவன். ஆனா அதேவேளை படிப்பு மட்டும் இல்லாம பல்வேறு விஷயங்களில் எனக்கு ஈடுபாடு இருந்தது. கலை, இலக்கியம், அரசியல் எல்லாவற்றிலும் ஈடுபாடு இருந்தது. இந்த கல்லூரியில் அதற்கெல்லாம் வாய்ப்பிருந்தது. நிறைய மகிழ்ச்சியைத்தந்திருக்கிறது. வீட்டிலிருந்து கல்லூரிக்கு அனேகமாக பஸ்சில்தான் வந்து செல்வேன். சில வேளைகளில் நடந்தும் வந்திருக்கிறேன்.
என்னுடைய குடும்பம் பெரிய குடும்பம். அப்பா ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். . நாங்கள் பத்துபேர்களில் மூத்தவன் நான். அதனால் எனக்கு பொறுப்பு இருப்பதாக உணர்ந்தேன். எனக்கு கீழே உள்ளவர்கள் படிச்சுகிட்டிருந்தாங்க. நான்  படிச்சு நல்ல மார்க் வாங்கி பாஸாகி,  ஏதாவது வேலை பார்த்தால் அப்பாவின் சுமை குறையுமே என்று நினைச்சிருந்தேன். இன்னிக்குள்ள கேம்பஸ் இண்டர்வியூ மாதிரி அன்னிக்கு ஒண்ணும் கிடையாது. நான் பி.எஸ்சி படிச்சுகொண்டிருக்கும்போதே கேரளா அரசின் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். வேலைக்கு வரச்சொல்லி உத்தரவு வந்தது. பி.எஸ்.சி பரீட்சை தேர்வு எழுதி முடித்த கையோடு நான் திருச்சூரில் போய் வேலையில் சேர்ந்தேன்.. விடுமுறைக்காலம் முடிந்ததும், பி.எஸ்சியில் நல்ல மார்க் இருந்ததால் அப்பா என்னை இன்ஜினியரிங் படிக்கக் கட்டாயப்படுத்தியதினால், அதன்பின்னர் இன்ஜினியரிங்க கல்லூரியில் சேர்ந்து நான்கு வருடங்கள் படித்தேன். (அங்கு படிக்கும்போது நான் எழுதி, இயக்கி, நடித்த என்ஜினீயர் என்ற தமிழ் நாடகத்திற்கு அனைத்திந்திய வானொலி நாடகப்போட்டியில் முதல் பரிசு கிடைத்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.)
இந்த பல்கலைக்கழக கல்லூரியை எடுத்துக்கொண்டால் மிகவும் பழமையானது.. 1866.ல் கட்டப்பட்ட இந்தக்கல்லூரி இன்னும் பழமை மாறாமல் புதுமைக்கும் இடம் கொடுத்து மிளிர்கிறது. இங்குள்ள இயற்பியல் துறையை அடுத்து வேதியியல் துறை, அதற்கடுத்து  மாணவிகள் வெயிட்டிங்க் ஹால் இருந்தது. அதனால் இந்த பகுதி எப்பவுமே கலகலப்பாக இருக்கும். மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம். மாணவர்களின் வீர தீர பராக்கிரமங்களை இந்த பகுதியில்தான் அதிகம்காணமுடியும்.  மாணவ, மாணவிகளின் ரொமான்ஸை தூரத்தில் இருந்து ரசிப்பதோடு நான் என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன். அழகான மாணவிகள் நிறைய பேர் என்னுடனும் படித்தார்கள். சிலரைப்பார்க்கும்போது அவர்கள் மீது மரியாதை மட்டுமல்ல, ஒன்றிரண்டுபேர்களிடம் ஆசையும் வந்திருக்கிறது. ஆனால் அந்த பதினெட்டு வயசு பிராயத்தில், வம்புதும்புக்களில் மாட்டிக்கொள்ள விருப்பமில்லாமல், உள் உணர்வுகளை மனதுக்குள் புதைத்துக்கொண்டேன். என்னுடைய முதல் நாவல் உதய தாரகையில் என் கல்லூரி கால நிகழ்வுகளும், நினைவுகளும் ஒரளவுக்குப் பதிவாகியிருக்கின்றன என்று நினைக்கிறேன். தரமான இலக்கியத்தில் எனக்கு அதிக ஈடுபாடு ஏற்பட அடித்தளமாக இருந்தது இந்த பல்கலைக்கழக் கல்லூரி என்றால் அது மிகையாகாது.
இன்று, இக்கல்லூரியில் 75-வது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும்போது நிற்கையில், வயது மீண்டும் 18 ஆனதைப்போல் தோன்றுகிறது. பெரிய கட்டுப்பாடொன்றும் இங்கே அன்றும் இன்றும் இல்லை.. மாணவர்களை அடக்குமுறைகொண்டு நடத்தும் பழக்கம் இல்லை. சுதந்திரம் இருந்ததால் படிப்பின் கூட அவரவருக்கு ஈடுபாடுள்ள எனைய துறைகளிலும் தம் திறமையைக் காட்டி முன்னுக்கு வர முடிந்தது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு நான்என்றுநினைக்கிறேன்.
கல்லூரியின் அருகிலேயே சட்டசபை, செயலகம்,வி.ஜெ.ட்டி ஹால், பல்கலைக்கழக செனட் ஹால்,  எல்லாம் இருந்ததால் அமைச்சர்கள்,அரசியல் தலைவர்கள், மட்டுமல்ல, கலை இலக்கியங்கள், ஏனையத்துறைகளில் பிரபலமானவர்களையும் நெருக்கமாய் பார்க்கவும் பழகவும் முடிந்திருக்கிறது. 

 தமிழ்ப்பாடத்தில் அதிக விருப்பத்துடன் இருந்ததால், என்னுடன் படித்த இயற்பியல் மாணவர்கள் என்னை கிண்டல் செய்வார்கள்.பேசாமல் தமிழ் மேஜரை எடுத்துப்படித்திருக்கலாமே!என்று. நான் சிரிப்பேன். ஒருமுறை எம்.ஜி.ஆர். அவர்கள் திருவனந்தபுரத்தில் நாடகம் நடிப்பதற்காக வந்திருந்தார். அவரை கல்லூரிக்கு அழைத்து பேச வைத்தோம். மறக்காமல் அவருடன் போட்டோவும்எடுத்துக்கொண்டோம். அதே எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சர் ஆனபின்னர், அவர் கையிலிருந்து, என் உறவுகள் நாவலுக்காக  ராஜா சர் அண்ணாமலைசெட்டியார் விருது வாங்கியதும் நான் சற்றும் எதிர்பார்த்திராத அனுபவம்.
அதுபோல் ஆங்கிலத்துறை பேராசிரியர் அய்யப்ப பணிக்கரின் வகுப்புகள் இனிமையானவை. அக்காலத்தில் இக்கல்லூரியில் ஆசிரியர்களாக பணியாற்றிக்கொண்டிருந்த இடற்பியல் பேராசிரியர் வெங்கடேஸ்வரன் சார், கேரளத்தில் பிரபலமான நாடகாசிரியர் என்.கிருஷ்ணப்பிள்ளை சார், விமர்சகர் குப்தன் நாயர் சார், சர்வோதயத் தலைவரும் புகழ் வாய்ந்த ஆங்கில கவிஞருமான ஜி.குமாரபிள்ளை சார் இவர்கள் முகங்களும் இங்கு நிற்கும் இந்த நல்லநேரத்தில் என்னில் நிறைகின்றன என்று மகிழ்ச்சியுடன் கூறினார் எழுத்தாளர்நீலபத்மநாபன்.
-- 
                                                   திருவட்டாறு சிந்துகுமார்
                                                        குமுதம் 17-10-2012


Monday, September 24, 2012


 கவிதை
                விலாபம்  
    சாலையும், ஆரியசாலையும்,
    பழையசாலையும், புத்தன்சாலையும்,
    வலியசாலையும்.....
    ஏன், பழம் பெரும் புகழ் வாய்ந்த
    இந்த வரலாற்று மகிமை கொண்ட
    காந்தளூர் சாலையையே
    விளப்பில் சாலையாக்கிவிட்டார்களே
    இன்று உன் நாட்டை ஆளவந்தவர்கள்...
    கொடிபிடிக்கவும் கோஷம் போடவும்
    பொலீஸ், பட்டாள சேனையை எதிரிடவும்
    நேரமில்லாது அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு 
    அல்லல்பட்டு ஓடி நடக்கும் பாமர மக்கள் நாங்கள்
    நரர்களாய் இங்ஙனம் பிறந்தோம் பூமியில்
    இந்நகர வாரியின் நடுவில் 
    இந்நரகத்திலிருந்து கரையேற்றுங்கள்
    திருவனந்தை வாழும் பெருமாளே...

                 கொலைவெறி
    கை வெட்டுவோம், கால் வெட்டுவோம்
    குலம் குத்துவோம், சவம் குத்துவோம்
     மந்தபுத்திகள், மனநோயாளிகளை
     வெறிநாய்களைப்போல் அறைந்து கொல்வோம்
     நோய்ப்படுக்கையில் கைகால் மரத்துப்போய்க் கிடக்கும்
     வயசாளி பெண்ணாக இருந்தாலும்
     காம பூர்த்திக்கு இரையாக்குவோம்
     தந்தையை ஹத்திசெய்யும் தனையர்கள்.....
     குழந்தைகளை கொன்றிடும் தாய்த் தந்தையர்
     இன்னும், இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்
     -இதுதான் இன்றைய எங்கள் புண்ணிய புராதன பூமி....

                                      நீல பத்மநாபன்
                                                  

Friday, August 17, 2012

பசுமயை நாடி...


கவிதை            பசுமையை நாடி.....

       காட்டைத் திருத்தினோம்
   கழனி செய்தோம்
   நஞ்சை புஞ்சைகளில்
   கதிர் கற்றைகள் வளர்த்தோம்.....வளர்ந்தோம்...
   தானியங்களின் அறுவடை
   பசித்த வயிர்களுக்கு அன்னக்கொடை.
   பறவைகள்....பசுமாடுகள்...ஜீவராசிகள் யாவுமே
   செழித்தன பசுமைப்புரட்சியில்....

  நீலவானுடன் சரசமாடும்
  பச்சைமர உச்சிகள்.....
  பொதிகை மலைத் தொடர்ச்சிகள்....
  குமரன் குடியிருந்த குன்றங்கள்.....
  பழமரச்சோலைகள்.....
  ஜீவ ஊற்றாய் தாகஜலம்
  பொழிந்த அருவிகள்...
  நதிகள்....நீர்த்தடங்கள்.....
  புனல் பூங்கணங்களை சூல் கொண்ட
  கார்முகில் கன்னிகள்
  வாரி வழங்கிய மும்மாரி
  அமிழ்த தாரைகள்
  நாடெங்கும் களிநடம் செய்த
  நாமகளும் திருமகளும்….
   காலங்கள் கரைந்தன....
 ஆசையை வென்ற பேராசைகள்..
 காடான காட்டையெல்லாம் அழித்தோம்..
 வானம் முட்டிய மரங்களையெல்லாம்
 வேரோடு சாய்த்தோம்....
 கூண்டோடு ஒழிந்த பறவைகள்..,விலங்குகள்..
 மண்மேடுகளான காடுகள்...,ஆறுகள்...
 நீலமலையெல்லாம்
 வெறும் மொட்டைக் குன்றுகளாயின..
 ஜீவ ஊற்றுகள் நிரம்பி வழிந்த
 நதிகளின் மடிகளைக்கூட
 தோண்டித் தோண்டி...,
 மணலையெல்லாம் அள்ளியள்ளி...,
 கழனியாயிருந்த பொன்விளையும்  பூமியில்
 மலையை உடைத்த கற்களை ஜல்லிகளாக்கி...,
 சிமண்ட்டுடன் கலந்து,
 காட்டை அழித்த மரங்களை தடிகளாக்கி...,
 சிமண்ட் கோபுரங்கள்...,மாடிமேல் மாடிகள்....,
 ராஜ பாட்டைகள்.....
 நச்சுப்புகையை எக்கணமும் நிறைக்கும்
 வாகனங்கள்....,யந்திரங்கள்.....
 சுற்றுச்சூழல் மாசால் சுத்த வாயு சூன்யம்...,
 பசுமையெல்லாம் பொசுங்கி,
 வெறும் கான்க்ரீட் காடுகள்....
                             3
  
   மீண்டும் வஸந்தம் பிறந்திட....,
 பூக்கள் விரிந்திட....,
 மழலைகள் சிரித்திட...,
 பசுமை கொலுவிருக்க...,
 அன்னை பூமியை ஆராதிப்போம்....
 மண்ணை மதிப்போம்...
 மரங்களை நடுவோம்...
 செடிகொடிகளை பேணுவோம்..
 பயிர் வளர்ப்போம்....
 மலையை வனமாய்
 நிலைபெறச் செய்வோம்....
 நதிகளின் குளிர் மடியில்
 ஜீவ அமுதம் மீண்டும்
 சுரக்கச் செய்திடுவோம்...
 காற்றில் கலந்த நஞ்சு அகலட்டும்....
 பிராணவாயு நிறையட்டும்....
 மக்கள் குலம் செழிக்கட்டும்........
 செழிக்கட்டும்......

                             நீல பத்மநாபன்

Wednesday, June 20, 2012

ஒரு நடுநிசிநேர தெருக்கூத்து


கவிதை

ஒரு நடுநிசிநேர தெருக்கூத்து

நீல பத்மநாபன் 

     நடுநிசி பனிரெண்டைத் தாண்டிவிட்டநேரம்கெட்ட
     நேரமதில் இரண்டு மணிநேரம் தாமதமாகி          
     வேண்டாவெறுப்போடுசொந்த ஊர் வந்துநின்ற
     ரயிலில் இருந்து மனைவி,மகள்,கைப்பெட்டியுடன்
     எப்படியோ இறங்கும்போதுகளைத்துத்துவளும்
     உடம்பும் உள்ளமும்;தள்ளாமையில் தள்ளாடும்
     தேகத்தைத் தள்ளிக்கொண்டு படிகள் ஏறி இறங்கி
     ”ப்ரீ பெயிட்” ஆட்டோ கௌண்டர் முன் நெடுநீள க்யூ
     வரிசை;ஆட்டோ கிடைத்தால் பத்துநிமிஷபயணத்தில்
     வீடுபோய்ச்சேர்ந்துவிடுவோமே என்ற நப்பாசையுடன்
     உடல் உபாதைகளை அடக்கிநிறுத்த முயன்றவாறு
     காத்துநிற்கும் கடின யக்ஞம்....
     அப்பாடா, தன்முறை வந்துவிட்டது,கடவுளுக்கு நன்றி,
     உள்ளிருக்கும் போலீஸ்ச்சிப்பந்தியிடம் ஆட்டோ
     ஓட்டியிடம் கொடுக்கவேண்டிய ஆட்டோக்கூலிக்கான
     சீட்டுக்காக சில்லறையை நீட்டியவாறு ‘சரஸ்வதிநகர்
     பைபாஸ் ’என்றார் பலகீனமாய். ’அப்படியொரு பைபாஸே
     இல்லையே,கிள்ளிப்பாலம்,இல்லாட்டி அட்டக்குளங்கரை,
     சீக்கிரம் சொல்லுங்கோ’என்று கத்தினான்   
     எரிச்சலுடன்.செக்கச்சிவந்த அவன் கண்கள்,தூக்கக்
     கலக்கமா....இல்லை வேறு கிறுக்கமா...   பின்பக்க அடுத்தமுரட்டுஆள் இவரை நெட்டித்தள்ளி   முந்திக்கொண்டு சில்லறையை நீட்டி’பேயாடு’என அவன்  
      இடப்பெயரைப்புகல,உள்ளிருந்து போலீஸ்பாணியில் இவரிடம்       ‘நீங்கி நில்லுங்கோ’என   கட்டளை;பக்கவாட்டில் நின்ற       காக்கிஉடை ஆட்டோஓட்டி,வீடெங்கேன்னுகூட தெரியாதா
       என கிண்டல் அடிக்க,அடுத்தடுத்து கவுண்டருக்குள்
       கை நுழைத்து இடப்பெயர் சொல்லி சீட்டுவாங்கி           
       ஓடிவந்து நிற்கும் ஆட்டொவில்விரைகிறவர்கள், 
        ஏனயோர்கள் இளக்காரமுடன் பார்வையை எறிந்திட
        முன்பு நேரம் கெட்ட நேரத்தில் ஒருதடவை
        கிள்ளிப்பாலத்தில்,இன்னொரு தடவை நடுமதிய
        வேனாவெயிலில் அட்டக்குளங்கரையில் இறக்கிவிட்டு
        ஆட்டோ ஓடிவிட ,வேறு வழியின்றி மூட்டைமுடிச்சுடன்
        நடக்க நேர்ந்த கசப்பான முன் அனுபவம்....
        ’சரஸ்வதி நகர் பெயர்பலகை இருக்கு, சரஸ்வதி நகர்
         ரெஸிடண்ட்ஷியல் அஸோஸியேஷன்     பதிவுச்செய்யப்
         பட்டது’ என்றெல்லாமென்ற இவர் முறையீடுகளுக்கு
         செவிசாய்க்கும் மூடில் இல்லை உள்ளிருப்பவன்.
         ’அதெல்லாம் தெரியாது,இங்கே எங்க லிஸ்டில் இல்லை’  
‘கங்கா நகர், யமுனா நகரெல்லாம் இருக்கு,சரியா
யோசிச்சுப்பாருங்கோ,சொந்த வீடிருக்கும் இடம்கூடத்
தெரியாதா தாத்தா’-பக்கப்பாட்டுப் பாடி தூபம் போட்டான் ஆட்டோ ஓட்டி..கங்கையமுனை சங்கமத்தில்
சரஸ்வதி ஊனக்கண்களுக்கு புலனாகாது என்ற தத்துவ
போதனையா?அரை நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்து,
துறக்க காத்திருக்கும் விட்டை அடைவதுஎப்படி
என்பதை என்னசொல்லிஇவர்களைப் புரியவைப்பது?
ஆட்டோ ஓட்டிச் சொல்வதிலவியப்பதற்கில்லை,
பொதுமக்களுக்கு நியாயம் வழங்கும் காவல்
சிப்பந்தியுமா?பின்னால் வரிசையிலிருந்து
விரைந்து வருகிறவர்களின் முட்டிமோதல்..
கிறுகிறுக்கும் தலை, நிலை தடுமாறியது..
‘புத்தன்கோட்டைக்குத் தாறேன்’குரலில் கேலி?
ஊரின் பழமையான சுடுகாடிருக்கும்இடம்,
சரஸ்வதிநகர் பைபாஸ் ஜங்க்‌ஷன் வழியும்செல்லலாம்
தன் வீட்டுக்கு அந்த ஜங்க்‌ஷனில் இறங்கி கொஞ்சம்
நடக்கணும்....ஒண்ணுக்கு ரெண்டாய் அவன் எழுதித்தந்த
இரு மடங்கு ஆட்டோகூலிசீட்டை வாங்கி ஆட்டோ ஓட்டி கையில் கொடுத்துவிட்டு மனைவி மகள் ஏறியபின் ஆட்டோவிலேறி உட்கார்ந்தார் நடைப்பிணமாய்.....