Friday, July 28, 2017

காலவெளியில்

                       
           அடிக்கடி சண்டித்தனம் பண்ணினாலும்
                     தோன்றிய நாளிலிருந்து அண்மை காலம்வரை,
                          சிற்சில நேரங்களில் அற்ப சுகங்களும்
                       ஆசுவாசங்களும் தந்து, கூடவே வந்து இயங்கி,
                  இயக்கிகொண்டிருந்த எல்லாமே காலச்சக்கிரத்தின்
               சுழற்சியின் அயற்சியில் பினவாங்கும் நேரமா......
                    முடங்கி விழுந்ததை எல்லாம் என்னதான்
                  பெருமுயற்சிச்செய்தும் மீண்டும்
                  இயக்கப்பாதையில் இழுத்துக்கொணர
                  இயலாத தருணங்கள்.......
                     விடிந்தும் விடியாத பொழுதுகளையும்,
                   புள்ளினங்களும் செடிகொடிகளும்
                     மலரும் மர்ம நொடிகளையும்
                    கண்டுகளித்த மதுர கணங்களும்
                    ஒரு நாளும் திரும்பி வரவே வராமல்
                    போய் மறந்து மறைந்தே விட்டனவா......?
          சுகமும் ஆறுதலும் அளிக்காவிடிலும்
                   மீதி நாட்களில் இம்சைகளை இறைத்து
                   கொடுமைபடுத்தாதிருக்கலாகாதா?
                  இந்நாள் வரை, குடியிருந்த கோயிலா, இல்லை
                 அணிசெய்த மேலாடையா, பாழ்பட்டதால்
                 வேறொன்றை நாடியோ, விமோசனதை தேடியோ
                 காலவெளி பயணத்திற்கான ஆரம்ப அறிகுறிகளோ........

                          நீல பத்மநாபன்








மரண பயம்


           “வாசித்தாலும் வளர்வாய்
           வாசிக்காவிடிலும் வளர்வாய்
           வாசித்தால் விளைவாய்
           வாசிக்காவிடில் வளைவாய்
            மலையாள குறுங்கவிஞர் குஞ்ஞுண்ணி
           பயந்தாலும் சாவாய்
           பயப்படாவிடிலும் சாவாய்
           பயந்து செத்தால்  
           காத்துநிற்கும் பந்து மித்திர சத்துருக்களுக்கு தொல்லை
           பயப்படாமல் செத்தால்   
            வாழ்கிறவர்க்கும் ஆத்மாவுக்கும்
            சாந்தி
             நீல பத்மநாபன்


நீண்ட நிசி

                              நீண்ட நிசி
     நீண்ட நிசியில் நித்திரையின் மடியில்
         காட்டுவெளியில் கண் விழிக்கையில்
      காலத்தை கடந்துவிட்டோமா
     கோலத்தை இழந்துவிட்டோமா, தெரியாத
       மயக்கத்தில் தெளிவில்லாக் குரல்கள்
      புரியாத மொழிகள்….. கண்டவை கொண்டவை எல்லாம்
   நீர்வரைகளாய் மக்கி மடிய......
    என்றோ எங்கோ வாழ்ந்து வீழ்ந்த
   நினைவலைகள் கனவாய் தேய்ந்து மாய
  சுற்றிலும் முட்டிமோதும்  மனிதர்களின் இடையில்
   கால் கடுக்க தொண்டை வரள  
      வயோதிக சகஜ உள்ள உடல் உபாதைகளுடன்.......
   கோடீஸ்வரர்கள் அரசியல் பிரமுகர்கள்
   காலதேவனின் பாசக்கயற்றில் சிக்காமல்
  பிராணனை தக்கவைக்க ஐந்து நட்சத்திர மருத்துவங்கள்,
   அண்டைநாடுகளுக்கெல்லாம்பரிவாரங்களுடன்                     படையெடுத்துக்கொண்டிருக்கும் நாளிலும்,
  ஏழை பாழைகள் சரணடையும்
 அரசு மருத்துவ மனைகளில்
 பிரவேசிக்கப்பெற்று சிகிச்சைபெறும்
 ஒன்றிரண்டு ஏழைத்தோழர்களான
 மக்கள்ப்பிரதிநிதிகள், மந்திரிகளின்
செய்திகள் கொட்டை எழுத்துக்களில்
வாசித்து ஞானோதயம்  பெற்று
வியாதியின் உச்சகட்டத்தில்
இங்கு வந்து மூன்றுமணி நேரமாய்
வியர்வையில் குளித்து தொண்டை வரள
தள்ளாமையின் உபாதைகளில் சுய சித்திரவதைக்கு
உள்ளாகியிருக்கும் அதிசாகசம்...
முட்டி மோதி அங்குலம் அங்குலமாய்
தன்னைப்போலவோ, அதிகமாகவோ ரோதனைகள்
வேதனைகளில் இன்னலுறும் சக நோயாளிகளுடன்
வைத்தியத்திற்கெல்லாம் நாதனின் தரிசனத்தை நாடி
முன்னேறிகொண்டிருக்கும் அவச நிலை.....
நிசியும் நித்திரையும் காட்டுவெளியும்
காலத்தின் கோலமும் முற்றுப்பெறாது தொடர்கிறதா........?
 நீல பத்மநாபன்
(மார்ச் 21, 2017-அனைத்துலக கவிதை தினம்)





பயம்


                                        பயம்
  ந வாசுதேவ பக்தா நாம சுபம் வித்யுதே க்வ்சித்
   ஜன்ம மிருத்யு ஜரா வியாதி பயம் நைவோப ஜாயதே
                             ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்திரம்
  சோதனை கட்டங்கள், எப்படி எதிர்கொள்ளப்போகிறோமென்ற
     மலைப்பு, பரபரப்பு, பதட்டம்எதிபார்ப்புக்கள்,
    ஏமாற்றங்கள், நிறைவில் குறைகண்டும் , குறைவில்
    நிறைகாண இயலாமையுமெல்லாம்
  அழுத்திய கட்டங்களில் போதுமிந்த
   பிறவியென சலித்துக்கொண்ட கணங்களும் உண்டு....
  இனியும் பிறவியற்ற பேரின்ப நிலையை நாடுகையில்
   ஜன்மாந்திர துக்கம் ஒருபக்கம்….
     மனக்கோட்டைகளை கட்டிமுடிக்கும்முன்
      களம் விடவேண்டி வந்துவிட்டால்
  முடிக்கும் பொருட்டு மீண்டும் பிறக்கவேண்டி
    வந்துவிடுமோ என்ற பயம் இன்னொருபக்கம்,
    வாட்ட புதிய ஆசைகளை திட்டங்களை
     முளயிலேயே கிள்ளிக்களையவும் முயற்சி....
      பிஞ்சு நாட்களில் அண்டை அயலார் வீடுகளில்
 நடக்கும் மரணங்கள் பீதியை விதைத்ததுண்டு..
 சுழிமாறிப்போய்விடும் தூங்கையிலெ வாங்கிற மூச்சு,
  கூத்தாடி கூத்தாடி போட்டுடைப்பு
  நீரினில் முழுகி நினைப்பொழிதல்
எல்லாம் கண்டு, கேட்டு, பழகி....
தனக்கு நேர்ந்து விடுமோ என்ற பயத்தை
அனாயாச மரணமென்ற விடாத  வேண்டுதல் மூலம்
ஒரளவுக்கு கட்டுக்குள் நிறுத்த முடிந்தும் ,
உற்றவர், உடையவர், இளையவர்களுக்கு
நிகழ்ந்துவிடுமோ என்ற் அச்சத்திலிருந்து
பிழுது விலக மறுக்கும், பார்த்தனின் மூடமனம்....
தள்ளாமையை எதிர்கொள்ளப் பழகிவிட்டபின்பும்,
வேதனை ரோதனைகள்,உபாதைகள்,
 பிறர் உதவியின்றி இயங்க இயலாமை
இன்னுமின்னும் எத்தனையோ அவசங்களுக்கு
ஆளாக்கிவிடுமோவென்று
வியாதி பயம் விட்டபாடில்லையே
என்ன செய்வேன் வாசுதேவா.....!                  
                                                            நீல பத்மநாபன்
,