Saturday, October 29, 2016

நவயுக யயாதிகள்


                                            நவயுக யயாதிகள்

                      வம்பு தும்புகளுகளில் மாட்டிக்கொள்ளாமல்
                     தெரிந்து பிறருக்கு கெடுதல்
                     நினைக்காமல், விளைவிக்காமல்
                     கரடுமுரடான யந்திர வாழ்வின்
                       சோதனை கட்டங்களில்
                    நிறைய உணர்ச்சிகளை
                      விரையம் செய்ய வேண்டியிருந்தும் கூட,
                    கடவுள் அருளால் எப்படியோ கடந்து வந்ததினால்
            தானோ என்னமோ, வயோதிகத்திலும்
                   மிஞ்சியிருக்கும் அற்பச்சொற்பம்
         க்ரியா சக்தி......,ஆத்ம பலம்......!.
         அதையும், ஆர்ப்பாட்டமான உலகியல் வாழ்வை
                 மேலும் நீடித்து அனுபவிக்க தமக்குள் கூடுபாய்ச்ச
                  வழி நாடி வரம் தேடி நடக்கும்
                 நவயுக பிள்ளையாண்டர்கள்.......

                               நீல பத்மநாபன்


Saturday, October 1, 2016

எதிர்பார்ப்பு



            
                           எதிர்பார்ப்பு

                                          “Grow old with me
                                           the best is yet to be
                                          the last of life
                                         for which the first was made”
                                                          -Robert Browning

            கடிகார முள்ளை முன்நிறுத்தி
                பள்ளி கல்லூரி படிப்பு, பரீட்சைகள்,
                       உத்தியோக காண்ட கெடுபிடிகள்,
                    பண வரவு செலவு அப்பியாசங்கள்
                     குடும்பத்தை கட்டிக்காத்து கரையேற்றும்
               சாகச கைங்கரியங்கள்...........,
              இன்னுமின்னும் எத்தனையெத்தனையோ
              பிச்சுப் பிடுங்கல்களுக்கெல்லாம் 
                 விடைசொல்லல்………  குட்பை !
                           காத்திருந்த ஆயுளின்  கடைசி அத்தியாயம்
             கைகூடிவிட்டது  ……      இதோ……
                   ஆனால்......என்னதான் முழுமூச்சாய்
                       உதற முனைந்தாலும்   பழசும் புதுசுமான
                      பிச்சுப்பிடுங்கல்கள்
                             தாங்கும் உள்ள, உடல் வலிமையெல்லாம்
                   வழியில் இழந்துபோன இந்நாட்களிலும்........!
                            கூடவே, சோக வெறுமையில்
                             மழைகால மேகங்களாய் தாறுமாறாய்
               புள்ளிக்கு வெளியே போய்விடும்
              அகக் கோலங்கள்... அலங்கோலங்கள்….
                            சிறப்புமிக்க அந்த இறுதி கணத்தை
             இப்போதும் எதிர்நோக்கித் தொடரும்
                            பயணத்தில் இடையிடை
                 வெள்ளிவீச்சுக்களாய் மின்னி மறையும்
            ஒளிக்கோடுகள் நம்பிக்கை நட்சத்திரமாயிருந்தும்                                                   அக்கரைப் பச்சையோ  கானல் நீரோ
                            தெரியலையே மூட மனமே
                                                             நீல பத்மநாபன்