Friday, December 30, 2016

அஞ்சலி


                     அஞ்சலி
     
                     தகனக்க்ரியை நடந்து முடிந்து நாட்கள்
                   பல நகர்ந்துவிட்டிருந்தும்
                  விம்மிக்கொண்டிருக்கும் நெஞ்சம்
                                                *         *          *
                           வீட்டின், வெளியின் சந்தடிகள்
                        சத்தங்கள் அதிகமாய் எட்டாது
                         நிம்மதியாய் இளைப்பாற
                           பின்பக்கம் ஒதுக்குப்புறமாய்
                          அவுட்ஹௌஸ்போல் அமைந்திருந்த
                         ஒற்றை தனியறையில்
             தென்பட்டது தேன்கூடு ஒன்று....
                          சுற்றி வட்டமிடும் ஒன்றிரண்டு தேனீக்கள்...
                          கொட்டிவிடப்போகிறது எனப் பயன்று
             திறக்காமல் கிடந்த் அறைக்கதவு..
                         மனசு கேட்காமல் அடிக்கடி போய்
                        திறந்து பார்க்கும் போதெல்லாம்
                         பெரிசாகிக்கொண்டிருந்த கூடு..
                            பக்கத்தில் நிற்கும் தென்னையிலேறி
                    தேங்காய் வெட்ட வருகிறவனிடமும்
                     தெரிந்த மற்ற வேலையாட்களிடமும்
                  தேனை முடிந்தால் எடுத்துக்கொண்டு
                  கூட்டை அங்கிருந்து அப்புறப்படுத்த
                  வேண்டியபோது, ஏமாற்றம்.......
       ‘                  ”கொஞ்சம் மண்ணெண்ணை வாங்கித்தந்தால்
                   கொளுத்திவிடலாம்என்றார்கள்...
                          சோகத்தில் கலங்கிய நெஞ்சம்;
                        எத்த்னை நாள் விடாமுயற்சி,,.
                  அதற்கு இப்படியொரு சித்திர வதையும்
                           மரண தண்டனையுமா…… 
                         தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டுப்பார்த்தும்
                  கொளுத்திவிடத்தான் ஆலோசனை வழங்கினார்கள்....
                    விவசாய இலாகா காரியாலயம்,
                               தேன் கண்காட்சி இடம்  எல்லாம் விசாரித்துப் பார்த்தும்
                நடக்கவில்லை, “சுத்தமான தேனிருக்குது ,
                               வேணுமுன்னா வாங்கிகிட்டுப்போங்கோ,
                              நீங்க என்னதான் பைசா கொடுக்கலாமுண்ணு
                              சொன்னாலும் யாரும் வேலை மெனக்கெட்டு
                               வரமாட்டாங்க”    கடைசியில்...................
                              ஒருவன் மண்ணெண்ணை இறைக்க,
              இனியொருவன், மின் வொயறிலும், அறையிலும்
              தீ பரவாதிருக்க நீர் தெளிக்க..,வேலையெல்லாம் முடித்து
               இரட்டைக் கூலி வாங்கி சென்றிட.....

                                                                  *     *      *
                                கொலைகாரா என கூவியவாறு மரணப் பதட்டத்துடன்
                              கூட்டம் கூட்டமாய்ப் பாய்ந்து பறந்து வந்து   
                            இன்றும் தன்னை  கொட்டிக்கொண்டிருக்கும் தேனீக்கள்          
                    
                                                                                              நீல பத்மநாபன்
 

      


      

Saturday, October 29, 2016

நவயுக யயாதிகள்


                                            நவயுக யயாதிகள்

                      வம்பு தும்புகளுகளில் மாட்டிக்கொள்ளாமல்
                     தெரிந்து பிறருக்கு கெடுதல்
                     நினைக்காமல், விளைவிக்காமல்
                     கரடுமுரடான யந்திர வாழ்வின்
                       சோதனை கட்டங்களில்
                    நிறைய உணர்ச்சிகளை
                      விரையம் செய்ய வேண்டியிருந்தும் கூட,
                    கடவுள் அருளால் எப்படியோ கடந்து வந்ததினால்
            தானோ என்னமோ, வயோதிகத்திலும்
                   மிஞ்சியிருக்கும் அற்பச்சொற்பம்
         க்ரியா சக்தி......,ஆத்ம பலம்......!.
         அதையும், ஆர்ப்பாட்டமான உலகியல் வாழ்வை
                 மேலும் நீடித்து அனுபவிக்க தமக்குள் கூடுபாய்ச்ச
                  வழி நாடி வரம் தேடி நடக்கும்
                 நவயுக பிள்ளையாண்டர்கள்.......

                               நீல பத்மநாபன்


Saturday, October 1, 2016

எதிர்பார்ப்பு



            
                           எதிர்பார்ப்பு

                                          “Grow old with me
                                           the best is yet to be
                                          the last of life
                                         for which the first was made”
                                                          -Robert Browning

            கடிகார முள்ளை முன்நிறுத்தி
                பள்ளி கல்லூரி படிப்பு, பரீட்சைகள்,
                       உத்தியோக காண்ட கெடுபிடிகள்,
                    பண வரவு செலவு அப்பியாசங்கள்
                     குடும்பத்தை கட்டிக்காத்து கரையேற்றும்
               சாகச கைங்கரியங்கள்...........,
              இன்னுமின்னும் எத்தனையெத்தனையோ
              பிச்சுப் பிடுங்கல்களுக்கெல்லாம் 
                 விடைசொல்லல்………  குட்பை !
                           காத்திருந்த ஆயுளின்  கடைசி அத்தியாயம்
             கைகூடிவிட்டது  ……      இதோ……
                   ஆனால்......என்னதான் முழுமூச்சாய்
                       உதற முனைந்தாலும்   பழசும் புதுசுமான
                      பிச்சுப்பிடுங்கல்கள்
                             தாங்கும் உள்ள, உடல் வலிமையெல்லாம்
                   வழியில் இழந்துபோன இந்நாட்களிலும்........!
                            கூடவே, சோக வெறுமையில்
                             மழைகால மேகங்களாய் தாறுமாறாய்
               புள்ளிக்கு வெளியே போய்விடும்
              அகக் கோலங்கள்... அலங்கோலங்கள்….
                            சிறப்புமிக்க அந்த இறுதி கணத்தை
             இப்போதும் எதிர்நோக்கித் தொடரும்
                            பயணத்தில் இடையிடை
                 வெள்ளிவீச்சுக்களாய் மின்னி மறையும்
            ஒளிக்கோடுகள் நம்பிக்கை நட்சத்திரமாயிருந்தும்                                                   அக்கரைப் பச்சையோ  கானல் நீரோ
                            தெரியலையே மூட மனமே
                                                             நீல பத்மநாபன்


                                                               








Thursday, September 8, 2016



                          வேட்டை

                             கொன்று தின்றும் வேட்டைக்காரன்
                        புத்திதான் உள்ளுக்குள் எல்லோருக்கும்..
                         சுயம்புவான கண்ணப்பர்கள்
             ஒருசிலர் இருக்கக்கூடும்
                           “ நீ செய்யும் கொலை கொள்ளைகள்,
              பாதகங்கள் குடும்பத்தை போற்றதானாயினும்
                           பாவச்சுமை உனக்கு மட்டுமே,
                          பாவசெயலால் கிடைக்கும் லௌகீக
                       சொத்து சுகங்கள் அனுபவிப்பவர்களாக
                         இருப்பினும் குடும்பத்த்னருக்கு
                            பாவச்சுமையில் பங்கில்லை..”
                             - இந்த, மகானின் போதனைக்கு செவிசாய்த்து
                           புண்ணிய காவியமொன்றும் படைக்கவிடிலும்
                          வாழ்வைச் சீராக்க, முனைகிறவர்கள்
                           எத்தனைபேர்கள்  இன்று  பூவுலகில்?
                                                            
                                                                நீல பத்மநாபன்
     
                                                                            
                            .

                                                         






                                சபதம்

                     கரடுமுரடான பாதைகள்
                     வெளிச்சமில்லா வீதிகள்
                      இதுவா அதுவா என தத்தளிக்க வைத்த
                       தசா சந்திகள்...
                        ஜன்மாந்திர துயரங்களிலிருந்து விமுக்தி பெற
                        போதுமென்ற நிறைவில் நெஞ்சை
                        பக்குவப்படுத்த முயற்சி..
                        நோக்கமில்லா வாழ்வு சுமையாகி கனத்தபோது
                        மானிடசேவையில் ஈடுபட முனைகையில்
                         ஒத்துழைக்காமல் சண்டித்தனம் பண்ணும்
                         உறுப்புக்கள்...
                       தீரா வியாதிகள்... ஓயா துன்பங்கள்..
                        நாளாக நாளாக எதையும் தாங்க இயலாமல்
                         நைந்துபோய்கொண்டிருக்கும்
                         கோழை மனம்..
                         கணத்திற்கு கணம்
                         செத்துச் செத்துப் பிழைப்பு...
                        இவ்வாறெல்லாமாயினும்
                         தன்னை தானே அழித்துக்கொள்ளல் இல்லை
                       இறுதி அழைப்பு கிடைப்பதுவரை
                     வாழ்ந்தேத் தீருவது.....

                                                                  நீல பத்மநாபன்





                                        பிரிவுத்துயர்

                                   ஒரு நாள் ஒரு பொழுதாயினும்
                                 உனை வந்து  பாராதிருந்தால்
                                   நெடுநாள் பிரிந்திருந்த
                                 பிரிவுத் துயரின் அவசம்.....
                                எங்கெங்கும் என்றென்றும்
                                நீக்கமற நிறைந்திருக்கும்
                               பரம் பொருள் நீயென்று
                                தெரிந்திருந்தும்
                                ஏன் இந்த மௌட்டியம்?
                              தெரிவிக்காமல் ஊர்ந்திறங்கி
                                வந்துவிடும் வைகறையும்
                             சொல்லாமல் கொள்ளாமல்
                              போய்விடும் அந்தியுமாய்
                              காலனின் கால ஏட்டில்
                               மிஞ்சியிருக்கும் ஒருசில தாட்களில்
                                ஒன்று சூன்யமாய் அநியாயமாய்
                                கிழிபட போகிறதே
                               என்ற ஏக்கமா?

                                                            நீல பத்மநாபன்