Sunday, January 19, 2014

வெட்கமில்லை

     கவிதை                      
 
வெட்கமில்லை
 நீல பத்மநாபன்
            கடல் கடந்த ராவண தேசத்தில்
            இப்போதும் சிறார்கள் கல்வி
            பயின்றுகொண்டிருக்கும்
            பழம்பெரும் கல்விக்கூடமொன்றை
          இடித்து படையாளிகளின் பாசறையாக்கிய
            கொடுமையை உலகச் செய்தி ஊடகங்கள்
            பாரெல்லாம் பறைச்சாற்றி பகிரங்கப்படுத்தின...
            ராம ராஜ்யத்தில் பரசுராமன் கடலிலிருந்து
            கவர்ந்தெடுத்து  தானம் தந்த தெற்கு தெற்கொரு
            தேசத்தின் தலைநகர் மத்தியில்
            வரலாற்றுப்புகழ் வாய்ந்த, பொன்விழா கண்ட
            பழம்பெரும் அரசு பள்ளி ஒன்றுண்டு கேளீர்....
            இப்போதும் ஏழைப்பாழைகளுக்கு
            இலவசக் கல்வி அளிக்கும் உயர்நிலைப்பள்ளி..
          யாவரையும்  வரவேற்கும், கிளை பரப்பி உயர்ந்தோங்கி நிற்கும்
            மருத்துவ மகத்துவம் கொண்ட நொச்சி மரம்....,
              மணலில் காலூன்றி காலங்காலமாய்
            தவம் செய்யும் பூவரசு விருட்சங்கள்.......,
            வேறெங்கும் தென்படாத அரிதிலும் அரிதான
        சுவையான கனி தரும் பசக்க மரம், அழின்னி மரம்....
           பள்ளிக்குள் மட்டுமா, சுற்றுப்புற மாசுக்களை அகற்றி
            பசுமையாய் நிழல் விரித்து நிற்கும்
            இயற்கையின் வரப்பிரசாதம்......          
            வெட்டிமுறித்தகோட்டை பக்கம் அமைந்த
            பள்ளியை இடித்து தரைமட்டமாக்க தீர்மானமான
            கையோடு, மரங்களையும் வெட்டிமுறிக்கப்
            போகிறார்களாம்...,வேரோடுச்சாய்க்கப்போகிறார்கள்...
            பஸ்நிலையம் கட்டுவதா....?
            கடைக் கண்ணிகள் செய்வதா...??.
            இல்லே.......,குப்பைகொட்டிக் குவிப்பதா......???
            முடிவெடுக்க, சம்பந்தப்பட்ட மெத்தப்படித்த
            வித்தகர்களின் கலந்தாலோசனை மும்முரம்.....

            யாருக்கும் வெட்கமில்லை என சங்கநாதமாய்
            கவிபாடி உணர்வூட்ட புரட்சிக்கவியில்லை
            அங்கின்று......! இருப்பதெல்லாம் குரல்வளமில்லா
            வெறும் ஒரு “பாட்டாளி”...........
           
                          
           




                        
    


No comments: