Monday, January 27, 2014

ஒரு பூங்காவின் புலம்பல்

கவிதை

                    ஒரு பூங்காவின் புலம்பல்
                                             நீல பத்மநாபன்

அந்நாளிலிருந்தே, ஆனந்தசயனம் கொள்ளும்
ஆதிபகவனின் அருட்காட்சியை கண்டுகளித்தவாறு
அனந்தன் காட்டின் துளியாய் கிடந்திருந்தேன் நானிங்கு...
காலக்காற்றில் விருட்சங்கள் வீழ்ந்தன. புத்தலைகள்
எழுந்தன....சுற்றிலும் வாகனங்கள் விரையும் வீதிகள்
பஸ் நிலையங்கள்.,திரை அரங்குகள் அமர்க்களப்பட்டும்
இங்குள்ளவர்க்கு, யந்திரவாழ்வில் சற்றேனும் ஓய்ந்திருந்து
காற்றுவாங்க  என்னை மட்டும் விட்டு வைத்திருந்தனர்......
அந்நியர் ஆட்சியை முறியடிக்க வந்துதித்த
தேச பிதா கூட அவர் நெடும்பயண பாதையில்
என் மண்ணில் கால் பதித்து மக்களை
ஆயுத்தமாக்கியிருக்கிறார் ஓர் நாள்......
மன்னராட்சியும் அந்நியராட்சியும் மடிந்து
எல்லோரும் இந்நாட்டு மைந்தராயினர்...
அம்மைந்தரில் ஒருவனே செய்நன்றி மறந்து
களபலி செய்த பிதாமஹனின் சிதை பஸ்மம் கூட
இங்கே அவர் கால் பதித்த என் மண்ணில் கொணர்ந்து
வைத்து மரியாதை செய்தனர் இங்கு வாழ் மக்கள்..
அவர் திருஉருவச்சிலை வைத்தனர்.,பெயர் சூட்டினர்,
நிலத்தில் பச்சிளம் புல்மெத்தை, பசுமை மரங்கள்...
.குழந்தைகள் ஓடிவிளையாடலாம்...,பெரியவர்கள்
ஓய்ந்திருக்கலாம்..,வாழ்க்கைச் சுமையை
இறக்கி வைக்கலாம், பரஸ்பரம் பங்கு வைக்கலாம்..,
மந்திரி மாளிகைகள், பணம் படைத்தோர்
குடியிருப்புக்கள் இருக்கும் பகுதிகளில் மட்டும்தான்
இதுக்கெல்லாம் பணம் செலவிடுறாங்க,
கடைத்தெரு பக்கம் நாதியற்று கிடந்த
இந்த பூங்காவை, போனாபோகட்டுமுண்ணு
நம்மைப்போன்ற சாதாரண குடிமக்களுக்காகவும்
இத்தனைக்கு அழகுபடுத்தினாங்களே...” -இவ்வாறு
சுற்றியுள்ள ஆரவாரத்தினிடையிலும் அமைதித்தீவென
கிட்க்கும் என்னைப்பற்றி இங்கு வருகிறவர்கள்
பேசுவதைக் கேட்டு பெருமை கொண்டேன்.....
ஆண்டாண்டு பிதாமஹனின் ஜயந்தி நாளன்று
பூமாலை கொடிதோரணங்களென்று களை கட்டும்..
யார் கண் பட்டதோ, இதொன்றும் அதிகம் நாள்
நீடிக்க வில்லை....சோர்வில்லா சொல் வல்லவர்கள்,
சாதி,மத,அரசியல் பிர்சாரகர்கள், பாட்டுக்காரர்கள்,
ஆட்டகாரர்கள் சதஸினர் இங்கே இலவசமாய்
கிடைத்ததில் அகம் குளிர்ந்து ஒலி பெருக்கித்
துணையோடு தம் கைவரிசையை
அமர்க்களப்படுத்தத் துவங்கினர்.....
அமைதியை நாடி வந்தவர்கள் மிரண்டோடினர்...
அது போதாதென்று ஆட்சியின் தலை மையமான
செயலக வாசலில் எப்போதும் நடைபெற்றுவரும்
மறியல், ஆர்ப்பாட்டங்களால் நெடுஞ்சாலை
போக்குவரத்து பாதிக்கப்பட்டு அவதிப்படும்
பொதுமக்களுக்கிரங்கிய ஒரு அரசியல் பிரமுகர்
செயலக வாசலை ஆர்ப்பாட்டங்களிலிருந்து
விமுக்தியுறச்செய்து போராட்டக்களம்
அங்கிருந்து அப்புறப்படுத்த பிதாமஹன்
காட்டிய அறப்போர் பாணியில் உண்ணாநோன்புக்கு
இவ்விடத்தில் வந்து சேர.......
வாழ்த்த வந்த அரசியல்வாதிகள், அமைச்சர்கள்
ஒலிபெருக்கி முன்நின்று ஓவென்ற உரிமை முழக்கம்.
அவர் பாணியை பின்பற்றி இனி எல்லோரும்
போராட்டக்களம் செயலக வாசலிலிருந்து
இங்கே மாற்றி விடுவார்களோ என எங்கள் வயற்றில்
நெருப்பு..... ஒலிமாசின் கோர தாக்கலில்
இங்கிருந்து தப்பித்துக்கொண்டு என்னைப்போல்
ஓட முடியாத பிதாமஹன் என்னிடம் கேட்கிறார்;
என் அடிச்சுவட்டில் வந்ததாய் சொல்லிக்கொள்ளும்
இவர்களுக்கு உள்ளையும் புறத்தையும்
தூய்மைப்படுத்தி சாந்தி நிலவிட மௌனவிரதத்தையும்
போதித்தேனே....,அதை ஏன் மறந்தனர்.......?     

Sunday, January 19, 2014

வெட்கமில்லை

     கவிதை                      
 
வெட்கமில்லை
 நீல பத்மநாபன்
            கடல் கடந்த ராவண தேசத்தில்
            இப்போதும் சிறார்கள் கல்வி
            பயின்றுகொண்டிருக்கும்
            பழம்பெரும் கல்விக்கூடமொன்றை
          இடித்து படையாளிகளின் பாசறையாக்கிய
            கொடுமையை உலகச் செய்தி ஊடகங்கள்
            பாரெல்லாம் பறைச்சாற்றி பகிரங்கப்படுத்தின...
            ராம ராஜ்யத்தில் பரசுராமன் கடலிலிருந்து
            கவர்ந்தெடுத்து  தானம் தந்த தெற்கு தெற்கொரு
            தேசத்தின் தலைநகர் மத்தியில்
            வரலாற்றுப்புகழ் வாய்ந்த, பொன்விழா கண்ட
            பழம்பெரும் அரசு பள்ளி ஒன்றுண்டு கேளீர்....
            இப்போதும் ஏழைப்பாழைகளுக்கு
            இலவசக் கல்வி அளிக்கும் உயர்நிலைப்பள்ளி..
          யாவரையும்  வரவேற்கும், கிளை பரப்பி உயர்ந்தோங்கி நிற்கும்
            மருத்துவ மகத்துவம் கொண்ட நொச்சி மரம்....,
              மணலில் காலூன்றி காலங்காலமாய்
            தவம் செய்யும் பூவரசு விருட்சங்கள்.......,
            வேறெங்கும் தென்படாத அரிதிலும் அரிதான
        சுவையான கனி தரும் பசக்க மரம், அழின்னி மரம்....
           பள்ளிக்குள் மட்டுமா, சுற்றுப்புற மாசுக்களை அகற்றி
            பசுமையாய் நிழல் விரித்து நிற்கும்
            இயற்கையின் வரப்பிரசாதம்......          
            வெட்டிமுறித்தகோட்டை பக்கம் அமைந்த
            பள்ளியை இடித்து தரைமட்டமாக்க தீர்மானமான
            கையோடு, மரங்களையும் வெட்டிமுறிக்கப்
            போகிறார்களாம்...,வேரோடுச்சாய்க்கப்போகிறார்கள்...
            பஸ்நிலையம் கட்டுவதா....?
            கடைக் கண்ணிகள் செய்வதா...??.
            இல்லே.......,குப்பைகொட்டிக் குவிப்பதா......???
            முடிவெடுக்க, சம்பந்தப்பட்ட மெத்தப்படித்த
            வித்தகர்களின் கலந்தாலோசனை மும்முரம்.....

            யாருக்கும் வெட்கமில்லை என சங்கநாதமாய்
            கவிபாடி உணர்வூட்ட புரட்சிக்கவியில்லை
            அங்கின்று......! இருப்பதெல்லாம் குரல்வளமில்லா
            வெறும் ஒரு “பாட்டாளி”...........