Saturday, February 25, 2012

நினைவஞ்சலி-எ.ஆர்.ராஜாமணி

நினைவஞ்சலி

ஏ. ஆர்.ராஜாமணி(1931-2012)


நீல பத்மநாபன்

“நமஸ்காரம்.தஙகள் அன்பான கடிதம் இன்று வந்தது.அளப்பரிய சந்தோஷம்+ நன்றி.நல்லது.
தில்லியில் கோடைவெய்யலுடன் உயிரை வதைக்கும்
இமாலயப்பனிக்காற்று, நாள் முழுவதும்-நாள் தோறும்!
நீஙகள் சொன்னபடி, ‘ஏதோ, எப்படியோ இறையருளால், இதுபோன்ற- இயற்கையின் அளவில்லாத் திருவிளையாடல்கள் அனைத்தையும்,எதிர்கொண்டும்-சமாளித்துக்கொண்டும் மிக நலமாகவே வாழ்கிறோம்’ என்பதும் உண்மை! இறைவன் கருணையும் திருவருளும் வாழ்க! நல்லது.பிறவிவரம் பின்னர்.”

இந்த ராஜாமணியின் 2-2-2012 தேதி கடிதம்(கார்டு) 8-ம் தேதி எனக்கு கிடைத்து ஒருவாரம் திகையவில்லை.நேற்றுமுன் தினம்(14-2-2012) அவர் காலமான செய்தி எட்டியது. அந்த பிறபின்னர் இனி இல்லை.

எழுபதுகளில் ”ஆதேர்ஸ்கில்ட் ஆப் இந்தியா” கூட்டங்களுக்கு டில்லி வரும்போது கநாசு வீட்டில் வைத்துத்தான் ராஜாமணியுமாக என் பழக்கவும் நட்பும் துவங்கி தொடர்ந்தன. பிறகு பல ஆண்டுகளுக்குப்பிறகு சாகித்ய அக்காதமி கூட்டங்களுக்காக நான் டில்லி வரும்போதெல்லாம்என்னதான் சுகசௌகரியங்கள் இருந்தாலும் கரோல்பாக் ராமானுஜம் லாட்ஜ் தவிர வேறெங்கும் தங்குவதுபற்றி நான் யோசித்ததே இல்லை. முக்கிய காரணம்ஒரு மூத்த சகோதரனைப்போன்ற ராஜாமணியின் நெருக்கமான பாச உணரவும் ஆத்மார்ந்தமான நட்பும்தான். (என்னை விட ஏழு வயதுக்கு மூத்தவர் அவர்)
டில்லிச் செல்லும்போதெல்லாம் முன்கூட்டி அறைக்கு ரவிக்கு தகவல் தெரிவிக்கையில் மறக்காமல் ராஜாமணியையும் தெரிவித்துவிடுவேன். பிறகு டில்லியில் நான் தங்கியிருக்கும் இரண்டொரொரு நாட்கள் அதிகாலைப்பொழுதுகள் மட்டுமல்ல, மாலையில் நான் அறையில் திரும்பிய நேரத்திலிருந்து தூங்கச்செல்வதுவரையிலும் எந்த அலுப்புமின்றி என் கூடவே இருந்து டில்லிச்செய்திகளுடன் ஆகாயத்தின் கீழுள்ள சகலமான விஷயங்களையும்- குறிப்பாக பிரபலங்களைப்பற்றியும் எந்த தணிக்கௌயுமின்றி மனம் விட்டுபேசுவார். அவருடைய தனித்தன்மையே இந்த பாவனைப்பாசாங்கில்லாகுழந்தையைப்போன்ற வெகுளிகுணமே.இதை சரிவர புரிந்துகொள்ளாமல் அவரிடம் சண்டைபோட்டுகொண்டவர்களைப்பற்றியும்அவர் பேச்சிலிருந்தே புரிந்துகொள்ளலாம் .இவர் அடிப்படை தனிப்பட்ட குணவிசேஷங்கள்,இவரைப்போலவே என்னைவிட மூத்தவர்களான நண்பர்கள் நகுலன், ஷ்ண்முக சுப்பைய்யா போன்றவர்களுடனுமாக ஒற்றுமை இருந்ததினால் எனக்கு ராஜாமணியின்கூட ஒத்துப்போகவும் நட்பின் சுகந்தம் கடைசிவரை அனுபவிக்கவும் பெரிய சிரமம் ஏற்படவில்லை.

அவர் சம்பந்தப்பட்ட எத்தனையோநிகழ்ச்சிகளைப்பற்றிய
நினைவலைகள் மனதை நெகிழச்செய்கிறதேயாயினும் அவை
யாவற்றையும்விரிவாக சொல்லும் தருணமல்ல இது. என்பினும்ஒன்றிரண்டை மட்டும் தற்போது இங்கே சுருக்கமாய் குறிப்பிடலாமென்று எண்ணுகிறேன்.

எத்தனையோ தட்வை அறையில் வந்து என்னை சந்தித்திருக்கிறார். ஒருதடவையேனும் அவர் இருப்பிடம் செல்லவேண்டுமென ஆசைப்பட்டேன். ஆனால் அவர் அதை கூடியமட்டும் தவிர்த்தார்.ஆனால் மீண்டும்மீண்டும் நான் கட்டாயப்படுத்திக்கொண்டிருந்ததால் ஒரு தடவை இணங்கினார். உண்மையில் என்னால் மறக்கமுடியாத, மனதில் சோகத்தழும்புகளை ஏற்படுத்திய அனுபவம்அதுஎனறுதான் சொல்லவேண்டும்.

அவர் கூடநடந்தேதான் சென்றேன்.அது ஒரு மாலை நேரம்.சமீபவாசிகள் அனேகமாக தமிழரல்லாதவர் அவரிடம் காட்டிய பாசம், அவர்களிடம் அவர் காட்டிய நெருக்கம், குறிப்பாக குழந்தைகளுக்காக அவர் ஜேபியில் கொணர்ந்து கொடுத்த இனிப்புவகைகள்...ஆனால் மிகவும் குறுகிய ஒழுங்குமுறையில்லாத மாடிப்படிகள் ஏறி மேலேமூன்றாவது மாடியா நாலாவதா சரியாக ஞாபகம் இல்லை,மொட்டைமாடியைத்தொட்டிருந்த எலிவளையைப்போன்ற அந்தசின்னஞ்சிறு அறையைப்பார்த்தபோதுதான் நான் அதிர்ந்துபோனேன்.படுப்பது இருக்கட்டும் உட்காரகூட இடவசதியில்லாத அந்த அறைக்குள் தரையிலும் நாற்காலியிலும்(கட்டில் பார்த்ததாய் ஞாகம் இல்லை)
நிறைந்துவழிந்த புத்தகங்கள்,பழைய சஞ்சிகைகள், பத்திரிகைகள்,சுவரிலும் தரையிலும் எல்லாம் ஈரக்கசிவின் அடையாளங்கள்....”ஆளைக்கொல்லாமல் கொல்லும்” டில்லிக்குளிரில் இந்த வயசிலும் இத்தனைக்கு சுறுசுறுப்புடன் இயங்கும் இவர் இங்கேதான் வாழ்கிறார் என்பது என் மனதில் ஏற்படுத்திய ரணம் ....ஒருநாள் எத்தனைத்தடவை இந்த படிகளை பாவம்,இவருக்கு ஏறி இறங்கவேண்டும், அகோரப்பனி,அடைமழைக்காலங்களில்- குறிப்பாக இராப்பொழுதுகளில்இங்கே வெடவெடத்தவாறு எப்படி உயிர் வாழ்கிறார்-என்றெல்லாம் நினைந்து என் மனம் பரிதவித்தது.(வெளிநாட்டில்தனியாக வாழவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்ட ராஜாமணியின் வயதுவரும் முதிர்ந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரின் தனியறைக்குச் சென்றது ஞாபகத்தில் இருக்கிறது.ஐந்து நட்சத்திர சுக வசதிகள் இல்லாவிடிலும் இத்தனை ஆண்டுகாலம் பூவுலகில் வாழ்ந்ததற்கு நன்றிக்கடனாக அந்த மூத்த குடிமகனுக்கு அடிப்ப்டைத்தேவைகள்-குடியிருக்கும் வசதி-கட்டில்,மேஜை,நாற்காலிகள், சுத்தமான கழிப்பறை, குளிர்காலத்தைச் சமாளிக்க ஹீட்டர்,உண்ண உண வு,உடுக்க உடை, மருத்துவ உதவி -இவற்றை கடமையாக மனிதாபிமானத்துடன் அரசே அளித்துக்கொண்டிருக்கிறது.)

பயணம் செய்வதிலும் புதிய புதிய இடங்களை,மனிதர்களைத் தெரிந்துகொள்வதிலும் ராஜாமணியிடமிருந்த தணியாத ஆர்வத்திற்கும் ஆவேசத்திற்கும் தள்ளாமையோ வியாதிபயமோ குறுக்கே நிற்கவில்லை. திருவனந்தபுரம் வரவேண்டுமென்ற ஆசையை நேரிலும் கடிதத்திலும் பலமுறை வெளியிட்டிருக்கிறார்.அப்படித்தான் இருதடவை-2007,2010 ஆண்டுகளில் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம், தமிழ்எழுத்தாளர் சங்க கூட்டங்களுக்காக வந்திருக்கிறார்.முதலில் வரும்போது சாகித்ய அக்காதமி ராமலிங்கமும்,இரண்டாவது தடவை டில்லி வானொலி தென்கிழக்காசியத் தமிழ் ஒலிபரப்பு குருமூர்த்தியும் உடன் வந்திருந்தார்கள்.

இருநாள் பகலிரவு நீளும் ரயில் பயணக் களைப்பில் சரியாக ஓய்வெடுக்காமல் வேறொன்றும் செய்யமுடியாது,இளைஞர்களாக இருந்தால் கூட.! ராஜாமணியானால் வந்து சேர்ந்த உடனையே பத்மநாபசுவாமி கோயிலுக்குப் போவதற்கான ஆயுத்தங்களில் முழுகலானார்.மாலையில் அவரும்ராமலிங்கமும் என்கூட இரண்டொரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோயிலுக்கு நடந்தே வந்தார்கள் காலில் செருப்பில்லாமல்.

அடுத்தநாள் தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் ராஜாமணியின் ஆணித்தரமான கருத்துரை எல்லோருக்கும் அவர் மீது ஒரு தனி பாச உணர்வையும் மதிப்பையும் ஏற்படுத்தியது என்பது மிகையல்ல. என்வேதான் மீண்டும் அவரும் ஆசைப்பட்ட்தற்கிணங்கி சங்கம் அவரை அழைத்தது.அப்போதுதான் குருமூர்த்தியும் உடன் வந்திருந்தார்.அப்போது அவர் கூடவும் முன்னால் போலவே ஆலய தரிசனம் செய்வதில் அவர் மிகவும் கரிசனமாகவே இருந்தார். சங்க மேடையில் அவர் கூட வீற்றிருந்த ஏனைய சொற்பொழிவாளர்களுடன் இருந்த தலைமுறைகள் நாவலுக்கு திரைவடிவம் கொடுத்துக்கொண்டிருந்த இளம் இயக்குநர் வ.கௌதமனிடமும் தயாரிப்பாளர் மணிவண்ணனிடமும் தன் உரையில் படம் முடிந்ததும் டில்லியில் திரையிடவேண்டுமென்று வேண்டுகோளும் விடுவித்தார்.அதை கண்டிப்பாகச் செய்வோம் என்று கௌதமனும் கூட்டத்தில் ஒப்புக்கொண்டார்.

ராஜாமணியின் எழுத்திலும் பேச்சிலும் இருந்த தெளிவும் அழுத்தமும் அவருக்கென்று ஒரு தனிபாணியை
நிலைநாட்டியுள்ளது..அவரை ,அவர் கருத்துக்களை மறக்கமுடியாமல் நம்மிடம் சுழலவைப்ப்தின் முழுமுக்கிய காரணம் அவர் ஆத்மார்த்தத்தன்மைதான்.தவிர ,அவருடைய குரலின் ஏற்ற இறக்கம், அவருடைய இயல்பான மெய்மொழி என்று மேலும் காரணங்களைச் சொல்லிக்கொண்டேபோகலாம் என்று தோன்றுகிறது.

அவர் விட்டுச்சென்ற எழுத்தாக்கங்களை கோர்வைப்படுத்தி நுல்வடிவம் செய்வது அவர் தமிழ் இலக்கியத்திற்கு செய்த சேவையை வருங்கால சந்ததியனருக்கு எடுத்துச் செல்லும் ஆக்கபூர்வமான கைமாறாக இருக்கும் என்றி குறிப்பிட்டு என் எளிய நினைவஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.

Monday, February 13, 2012

நகரம் நரகம்

கவிதை

நகரம் நரகம்

நீல பத்மநாபன்

புறநகர் பகுதியில் பரந்த நிலப்பரப்பில்
பலநாள் ஆய்வுகள் ஆயுத்தங்கள்
உள்நாட்டு வெளிநாட்டுதொழில்நுட்பக்கூறுகள்
ரஸாயன உள்ளமைப்பு தயாரிப்புக்களுடன்
கோடிகள் செலவிட்ட தளவாடங்கள்
கொட்டுமேளம் குரவைகோரஸ்
ஆரவாரமாய் நிறுவப்பட்ட
நகர குப்பைக்கூளங்கள் பதப்படுத்தி
உரம் செய்யும் தொழிற்சாலை
நகரையும் நாட்டையும் ஆளவந்தவர்களின்
ஆண்டாண்டுகால போட்டாபோட்டி
நிர்வாகத்திறமையின் அறுவடை
நகர் முழுதும் அங்கிங்கினாதபடி
எங்கெங்கும் குப்பைக்கூளக்குவித்தல்கள்
தகனங்கள் புதைத்தல்கள்
சதா நீக்கமற நிறையும்
பிளாஸ்டிக் விஷ புகைச்சுருள்கள்
துர்நாற்ற வாயுமண்டலம்
சுற்றுப்புறச்சூழல்நச்சு
கூட்டம்கூட்டமாய் கொசுக்கள் ஈக்கள்
எலிகள் நாய்கள்
டெங்கிக்காய்ச்சல் பறவைஜுரம்
மலேரியா டைபாய்ட் ஜுரங்கள்
மஞ்சள்காமாலை இன்னும் என்னென்னமோ ஜுரங்கள்
வெறிநாய்க்கடியால் குரைத்துச் சாக்காடுகள்
இத்தனைக்குப்பிறகும்
நீயா நானா

Thursday, February 9, 2012

அகவிதை

அகவிதை

நீல பத்மநாபன்

உணர்ச்சிச் சாற்றை
உறிஞ்சிக்குடித்துவிட்டு
வெளியில் உமிழும்
உப்புச்சப்பில்லா
வெறும் குப்பையா