நேற்று
அவன் பிறந்து வளர்ந்த வீட்டில்
தனியாக பூஜை அறை இல்லை…..
ஆனால் எந்த இடி மின்னல் மழையாக இருந்தாலும்
ஒளியும் இருளும் சங்கமிக்கும் மூவந்திப்பொழுதில்
அம்மா தெருநடையைப் பெருக்கி,
தண்ணீர் தெளித்து அலம்பிவிட்டு
வீட்டு வாசல்படியையும் நீரால் கழுவியபின்
நடுக்கூடத்தில் சுவரோரத்தில் கிழக்குப்பார்த்து
தேய்த்து மினுக்கி வைத்திருக்கும் குத்துவிளக்கில்
திரியிட்டு எண்ணை விட்டு குங்கும பொட்டிட்டு
நெற்றியில் குங்குமமோ, திருநீறோ துலங்க
நாம ஜெபம் செய்தவாறு விளக்கேற்றுவாள்…
கொல்லையிலிருந்து செக்கச்சிவந்த செம்பருத்திப்பூவொன்றை
பறித்து வந்து விளக்குக்கு கிரீடமாகச் சூடுவதற்கும்
ஒரு நாள்கூட அம்மா மறந்ததாக கண்டதில்லை…
குத்துவிளக்கின் இதமான மஞ்சள் நிற மங்களப்
பிரகாசம்
ஒளி பரப்பும் முன் கண்கூசும் மின் விளக்குகளை
வீட்டில் யாரும் போடுவதில்லை….
அந்நேரத்தில் பாட்டியும், வீட்டில் எங்கிருந்தாலும்
கை கால் முகம் அலம்பி நெற்றியில் விபூதியுடன்
திருவிளக்கை வழிபட வந்துவிடத் தவறுவதில்லை…
வீட்டில் விளக்கு வைக்கும் அந்திப்பொழுதில்
யாரும் முடங்கி கிடப்பதில்லை…..
தெருவில் மூவந்திப்பொழுதில் விளக்கேற்றாமல்
இருள் படர விட்டிருக்கும் வீடுகளைப்பற்றி
“அங்கே மூதெவிதான் குடியிருப்பாள்,
சீதேவி இறங்கிப்போயிருப்பாள்…”
சந்தேகமின்றி திடமாக சொல்லுவாள் பாட்டி……
இன்று
பூஜை அறை குத்துவிளக்கைக் குனிந்து
நிவர்ந்து
ஏற்ற இயலாதென்று அவள் படுக்கை அறையில்
மேஜைமீது சாமிப் படங்கள், விக்கிரகம்..
மின்னும் வெள்ளி விளக்கு..
காலையில் அவள் தன் வெள்ளி விளக்கை
ஏற்றி வழிபடுவதோடு சரி….,
காலையிலிருந்து வீட்டுவேலைகள் செய்த
களைப்பு,
ஓய்வுக்கு இதுதான் தக்க நேரமென்று
மாலைப்பொழுதுகளில் படுக்கையில் சரணடையும்
அவள்…
துணைக்கு, தொலைக்காட்சி மெகா சீரியல், ஸ்மார்ட் போன்…
காலையில், குளியலுக்குப்பின், பூஜைஅறை குத்துவிளக்கை ஏற்றி
அதன் முன் பீடத்தில் அமர்ந்து சற்று
நேரம் வழிபடாமல்
உணவு புசிப்பதில்லை அவன்…..
இருள் படரும் அந்திப்பொழுதுகளிலும், அவனே, நாள் தவறாமல்
பூஜை அறை குத்துவிளக்கை ஏற்றிக்கொண்டிருந்தான்……
கண் மூடி எங்கும் நிறைந்த பரம்பொருளை
தியானிக்கையில்
சில வேளைகளில், “இன்று”க்கு வர வழித்தெரியாமல்,
“நேற்றி”லேயே வீற்றிருக்கிறாயா….—அந்தரங்கத்தின் கேள்வி….
கூடவே, அம்மா விளக்கேற்றும் காட்சி
பாட்டி சொல்லும் சொற்களும்..…….
நீல பத்மநாபன்
8—3—2020 (மகளிர் தினம்); 10—5—2020 (அன்னையர் நாள்)