காலம்
அதன் பாட்டுக்கு
தொடரும் பயணத்தில்
சமய சந்தர்ப்பம் தெரியாமல் இன்றய தினத்தில்
வந்துவிட்ட
பிறந்த நாள்……...
நரனாய் இப்புவியில் பிறவியெடுத்து
எண்பத்திரண்டு ஆண்டுகளா…..?
ஏழெட்டு
ஆண்டுக்கள் முன்னாடியே
இளம் காலைப்பொழுதுகளில் படுக்கையிலிருந்து
எழுந்த
நேரத்தில் காலைகடன்களை
துவங்குவதிலிருந்து, இரவு நேரம் சென்று,
மீண்டும் படுக்கையை சரணடைவது
வரையிலும்
அன்றாடக் கடமைகளைச் செய்ய
வயோதிக சகஜ, உள்ள உடல் உபாதைகளுடன்
மல்லிடவேண்டிய நிலைமை….
போதுமின்ற அவனி வாழ்வு என்ற
விளிம்பை எட்டிவிட்டிருந்த தினங்கள்……..…..…..
காய்ச்சிக் கலக்கி தீவனம் போடுபவளுக்கும்
சுமையாய்ப்
போனோமே என்று தெரியத் தெளிய
உள்ளுக்குள் உருகி, செய்வதறியாது திக்கித் திணறி
நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கையில்
இந்த
கோவிட்19-ன்- கொண்டாட்டம் வேறா…..!……..
தேசம்
நாடு பேதமின்றி
கொத்துக் கொத்தாய்
மனித உயிர்களை காவு கொள்ளும் செய்திகள்……
வானொலியில், தினத் தாட்களில், தொலைக்காட்சியில்
இன்று சாவு ஒரு லட்சத்தி அறுபதாயிரத்தை
தாண்டிக்கொண்டிருக்கிறதாம் உலகில்….….
நோய்க்கொடுமையில் அவதியுறுவோர்
இருபத்திமூன்று லட்சத்துக்கும் மேலே….
நமது இந்நிய நாட்டில் ஐந்நூறைத் தாண்டிவிட்ட இறப்புகள்… …
பாதிக்கப்பட்டோர் பதினாறாயிரத்துக்கும் மேலே..
இன்னுமின்னும் மேலே மேலே
வளர்ந்துகொண்டிருக்கும் பயமுறுத்தும்
புள்ளிவிவரக் கணக்குகள்……
யாரும் வெளியே போகாதீர்-குறிப்பாய் வயோதிகர்கள்…அறிவிப்புக்கள்
இங்கே வீட்டில் கிழவனும் கிழவியும் மட்டும்…
குழந்தைகள் எல்லாம் வெளியூர்களில்….
வீட்டு வேலைக்கு உதவிசெய்ய
வந்துகொண்டிருந்த வேலைக்காரியும்
அவள் வீட்டைவிட்டு வெளியே
வரமுடியாமல் நின்றுவிட்டாள்…
கொரோணா காலத்திற்கு முன்னாடி
ஆட்டோவில் சில நாட்களுக்கொருமுறையாவது
மாலை நேரங்களில் வெளியேபோய்
மருந்து, பழம் என்றெல்லாம் வாங்குவது இப்போ அசாத்தியம்……..…
காய்கறிகள் வாங்க வெளியே போகும் வீட்டுக்காரிக்கும் தடை….
அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்புகொள்ள
பத்திரைகளில் வந்திருந்த தொலைபேசி எண்களை
மாறி மாறி தொடர்புகொண்டபோது……சிலர் உதவினார்கள்…
உதவி செய்ய வந்துகொண்டிருந்தவனின் ஸ்கூட்டர் பறிமுதல்..
அதைத் திரும்பப் பெற பெரும் பாடாகிவிட்ட பின்
யாரையும் மீண்டும் தொந்தரவு செய்யத் தோன்றவில்லை…….
நாகம் தீண்டியவன் தலையில் இடியும் வீழ்ந்ததுபோல்
பழுது பார்க்க எடுத்துச் சென்ற வாஷிங் யந்திரத்தை
சரி பண்ணிய பின் திரும்ப வீட்டுக்குக் கொண்டுவர
போலீஸ் அனுமதி வழங்காததால்
குனிந்து நிமிர்ந்து துணி துவைக்கும் வேலை வேறு புதுசாய்…! .
நீண்டுகொண்டிருக்கும் லாக் அவுட் காலம்…
தனித்திருக்கவும் விழித்திருக்கவும் மெனக்கெடாத
ஆயுள் ஆரோக்கியத்தைவிடவும்
பொருளீட்டல், உட்பட்ட லௌகீக ஆசை அபிலாஷைகளுக்கு
முக்கியத்துவம் கொடுப்பவர்களின் நாடுகளில்
ஏறுமுகமாயிருக்கும் கொரோணா சாவுகள், நோயாளிகள்….
இந்த லட்சணத்தில் நாடகத்தின்
உத்வேகமான உச்சகட்டக் காட்சியின்போது
பொருத்தமில்லா அசட்டுப் பாத்திரமாய் காட்சி உணர்வின்றி
மேடைக்கு வந்துவிட்ட பிறந்த தினம்--
மகிழ்ச்சியில்லா திரும்பி வருகை …!..
சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டு…..
விடைபெறாமல் திரும்பிச் செல்லும்
உனக்கு வாழ்த்துக்கள்……
நீல பத்மநாபன் ஏப்ரல் 19 2020—சித்திரை மாதம், பூரட்டாதி நட்சத்திரம்