நினைத்தால் நெஞ்சில் நிறையும் வியப்பு
எண்பது ஆண்டுகளாகிவிட்டனவா
நேற்றுபோலிருக்கிறது, பாட்டியின்
ஆறுதல் தேறுதலுக்கொன்றும்
செவிச்சாய்க்காமல் அழுது வழிந்துகொண்டிருந்த- அப்போ, .
மூன்று வயதிருக்குமா, சிறுவனாய்
அடுத்தத்தெரு
குடிப் பள்ளிக்கூடத்திற்கு எண்ணும் எழுத்தும் கற்க
போன தினங்கள்…பிறகு, பக்கத்து
ஆரம்பப் பள்ளியிலும்,
சற்றுத் தொலைவில் ஆற்றங்கரையிலிருந்த
உயர்நிலைப்பள்ளியிலுமாக, பதினைந்தாவது
வயதில் பத்தாவது தேறுவதுவரையுள்ள
ஒன்பதாண்டுகால பள்ளிவாழ்க்கையில்தான்
எத்தனை எத்தனை நிகழ்வுகள் நினைவுகள்
எல்லாமே நேற்றுபோல்…..
அடுத்து, நான்கு உள்ளூர்
கல்லூரிகளில் ஒன்பதாண்டு காலம்..…
மறதியில் மறைந்திடாத நண்பர்கள், ஆசிரியர்கள்…
கட்டுப்பாட்டை மீறத்துடித்த இளமை சகஜ-
புள்ளிக்கு வெளியே மீள முனைந்த கோலக்கோடுகள்….
உத்தியோக காண்டம்…., இல்வாழ்வு…..
மனைவி மக்களென்ற சம்சார சாகரத்தில் முழுகி
என்னதான் முயன்றும் கரையேறத் தெரியாது, இயலாது
குழைந்து துவண்டு ஒய்வை நாடும் தேடும்
கைகள் கால்கள்
ஒவ்வொரு உறுப்புக்களும்…….….
பிறவிக்கடனை யாவும் செய்துவிட்டோமென
“வெளி”யில் ஏற-வெளியேற உள்ளையும்
உடலையும்
பாகப்படுத்த
கட்டுக்களையெல்லாம் உதற முனைகையில்
நங்கூரமாய் பிடித்து நிறுத்துவது எதுவெனத்தெரியாத மாயை……….
சின்னாட்களிலேயே ஒழியாத ஆவியாய் ஊனில் உயிரில்
குடியேறி கண நேர ஆனந்தம் அளிப்பதாய் பிரமை காட்டி அல்லும்
பகலும் அனவரதமும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும் ஏடும் எழுத்தும்………
அவை தானோ ,சுயத்தை கண்டுணரும்
ஸ்வதர்மம்-சொந்தக்கடன்?
அவற்றையும் உதறிவிட முனைந்தபோதெல்லாம்
பிஞ்சு பருவத்திலிருந்தே அருகிலும் அகலத்திலும்
நேரடியாய் கண்டுணர்ந்த இறுதி நொடியின் காட்சிகள்….நினைவுகள்….
ஒருவேளை, இதை அடையத்தானே..,பிறகு, ஏனிந்த
தத்தளிப்பு………பயமா…அனாயாசமாய் நிகழாதா என்ற எதிர்பார்ப்பா….…?
நீல பத்மநாபன்.
,