நடை
சின்னாட்க்களிலிருந்தே எந்த மழையிலும் வெயிலிலும,
கைநழுவிப்போய்விடாமல்
கூடவே வந்துகொண்டிருக்கும் பழக்கம்…
எப்படி வந்தது என்றுத் தெரியவில்லை,
ஏன் வந்தது என்றும் புரியவில்லை….,
முன் மாதுரியும் ஞாபகத்தில் இல்லை…
வெயிலின் வெப்பம் தணிந்துகொண்டிருக்கும்
மாலைப்பொழுதுகளில் வீட்டில் நாலு சுவர்களுக்குள்
அடைந்துக்கிடக்கவிடாது வெளியில் குதிக்க
வெம்பும் மனம்…..
பால பருவத்தில், கூட்டாளிகளுடன்
தெருவில், பக்கத்துக் கோயில்
குளங்களைச்
சுற்றியுள்ள காலி இடங்களில் மட்டுமல்ல சற்று தொலைவிலிருந்த
விளையாட்டுப்பூங்காக்களீலும் ஆடிக்களித்த,
தெரியாத சந்துபொந்துக்களைத் தெரிந்துகொள்ள
நடமாடித்திரிந்த, சதா துறு
துறுவென்றிருந்த கை கால்கள்,
தற்போது காலத்தின் கோலத்தில் களைத்துத் துவண்டுவிட்டிருந்தும்,
மாலை நேரங்களில் எந்த இடி, மின்னல், மழையிலும்
வெளியேறி, நடந்து செல்ல வெம்பும்
மனம்…..
வாகனங்களை நாடுவதில் நாட்டமில்லை………,
தெருநடையில் நின்றவாறு இரு பக்கங்களிலும்
பார்வைசெலுத்த
தலைத்திருப்புகையில்…..
கிர்ரென்று தலைக்குள் கிறுக்கம்,…கண்ணீர்
திரையில்..
மங்கிய பார்வையிலும் நடைப்பாதையில்
கட்டிநிற்கும் முந்திய நாள் பெய்த மழைநீர் குட்டைகள்…,
அடுத்து, குவிந்து கிடக்கும், சின்ன பெரிய
மூட்டைகளுக்கு
உள்ளையும் வெளியிலுமாக குப்பைக்கூளங்கள்…..,
அவற்றிலிருந்து ஒழுகி இறங்கி
பாதையில் படரும் கழிவுநீர்…..துர்நாற்றம்…
கழிவு நீரில் கால்படாமல் காலடி வைக்கும் அப்பியாசத்தின் போது,
மேலே,தலையிலும் கண்ணிலும் மோதும்
பக்கவாட்டு பாழிட மரத்து கிளைகள், இலைகள்…
எங்கே கால்தடுமாறி விழுந்துவிடப்போகிறோமோ…,
செருப்பிலிருந்து வெளியில் நழுவும் பாதங்கள்… …
சற்று நடந்ததும், நடைப்பாதையை
கார் பார்க்காக்கி ‘
கார்களின் வரிசை, இடையிடையே
முச்சக்கிர, இருச்சக்கிர வாகனங்கள்…
சற்று நீங்கி, சென்ற மாத அடைமழையில், காற்றில்
ஒடிந்து விழுந்து அலங்கோலமாய் கிடக்கும்
மரக்கிளைகள் நடைப்பாதை முழுதும்…
கால் வைக்க இடமில்லையென வீதியில் இறங்கும் முன்,
கண்ணை குருடாக்கும், வாகனங்களின்
ஹெட் லைட் ஒளிவீச்சுக்கள்..
சில அடிகள் நடந்து வீதியை கடக்கும் ஸீப்ரா கோடுகளில்
ஓரம் சேர்ந்து, காத்து நின்று பச்சை
விளக்கு வந்ததும்
வீதியை கடக்க முனைகையில், போக்குவரத்து
சட்டங்களை
காற்றில் பறத்தி விரைந்து வந்துகொண்டிருக்கும் வாகனங்கள்..
எதிர் முனையில், தனக்கு
சம்பந்தமில்லாதது என்ற தோரணையில்
பார்த்து நிற்கும் ட்ராபிக் போலீஸ்……
இதைப்பற்றியொன்றும் அலட்டிக்கொள்ளாமல்
அங்குமிங்கும் விரைந்து கொண்டிருக்கும் ஜனங்கள்…
நெஞ்சை சுட்டெரிக்கும் கனல் பொறிகள் சற்றேனும் ஆறாத
என வெளியே விச்ராந்தியாய் நடக்க வந்தால்……
கனலை கொழுந்து விட்டெரிய செய்யும்
எண்ணைதுளிகளாய் இந்த வழியோரக் காட்சிகள்……!
..
நீல பத்மநாபன்
.