சத்தங்கள்
அறிவு வந்த நாளிலிருந்தே அல்லும் பகலும்
சதா காதில் அலையடித்துக்கொண்டிருக்கும்
சத்தங்கள்...சத்தங்கள்....சத்தங்கள்...,
அகத்திலிருந்தும் புறத்திலிருந்தும்.
பாத்திரம் பண்டங்களின் உரசல்கள் வீழ்ச்சிகள்..
சம்பாஷணைகள், வாக்குவாத்ங்கள்
கொல்லையிலிருந்து குறித்த நேரத்திலும் அல்லாமலும்
கீச்சு கீச்சுவென்றும் கா கா வென்றுமெல்லாம்
பறவைகள் தம் இருத்தலை பதிவுசெய்யல்கள்..
சமையலறை சுற்றி வரும் பூனையின் மியாவ், மியாவ்
தெரு நாய்களின் வெற்றிமுழக்கம்..
தெருவாசிகளின் உரத்த பேச்சுக்குரல்கள்
உபச்சார நல விசாரணைகள், செய்தி பரிமாற்றங்கள், அலசல்கள்,
பிறர் தூஷணை, வல்லடி வழக்குகள்....
பள்ளியில், கல்லூரியில் பாடஙளின்
புகட்டல் போதனைகளின் விரிவுரைகள்
பணியிடத்தில் மேலதிகாரிகளின் அதட்டல்க்ள்..
எங்கெங்கு திரும்பினாலும் பெருக்கமான ஒலிகள்..
பாட்டுகள் பஜனைகள் சவால்கள் எதிர் சவால்கள்
வாகனங்களின் இரைச்சல்கள், ஹாரன் அலறல்கள்..
கடைக் கம்போளங்கள், கொண்டோடி வியாபாரிகளிடமிருந்தெல்லாம்
வரும் வியாபாரச் சந்தடி ஆர்ப்பாட்டங்கள், அமர்க்களங்கள்
சத்தமே இல்லாத இடத்தைத்தேடிதேடிக் களைத்து
கடைசியில் வந்துசேர்ந்த இறுதி புகலிடத்திலோ.......
இவ்வாறு வந்துசேர்ந்தவர்களின்
சலபிலா கலபிலா......
இந்நாள் வரை புறத்தில் ஒலித்தவை
இப்போது அகத்தில் எதிரொலி செய்கிறதா ?
நீல பத்மநாபன்