Tuesday, July 28, 2015

மின்னல் இடி மழை



                           மின்னல் இடி மழை
             நீல பத்மநாபன்

             பளிச் பளிச்சென்று மின்னல்
            விழிகளைக் கூசசெய்யும் போதே
            கேட்கப்போகும் பேரிடிச் சத்தத்தில்
             திகில் கொண்டு அஞ்சும் நெஞ்சம
             சோவென்ற மழையில்
             சோகம் கொண்டாலும்
             உள்ளுக்குள் ஒவ்வொன்றாய்
              மடல் விரியும் ஒராயிரம்
              உவகை மலர்கள்........
              இடி மின்னல் தாக்கல்களை தவிர்க்கவும்
              தப்பிக்கவும் வழிகள் பற்றி
              அடிப்பிரக்ஞை பிராண்டிக்கொண்டிருக்க,
               காற்றில் கம்பிப்பிடிப்புக்கு மேலே
               உயர்ந்து மடங்கி மழைநீரை நிரப்பி
               பொங்கி வழியச்செய்யும்
               துணி தாங்கி நிலைகுலையச்செய்யும்
               குடையும் கையுமாய்
               மழைநீரும் சாக்கடைவெள்ளமும்
               சங்கமித்து நதியாய் ஓடும்
               வீதிகளில் நகர்வலம்......
                                                   
                வைகாசி வரை காத்திராமல்
                காலத்திற்கு முந்தி சித்திரையில்
                தன் பிறவி தருணத்திலேயே வந்து
                ஆரம்பமானதா இந்த இடி மின்னல் மழை
   உறவுப்பிணைப்பு-அன்பு வெறுப்பு சிநேகப்பிடிப்பு......! 
                                            
                 இதோ மீண்டும் பளிச் பளிச்சென்ற மின்னல்
                பட படவென்ற பேரிடிச் சத்தம்..
                மழை மட்டும் பெய்யவில்லை
                சிலரின் ஆர்ப்பாட்ட ஆரவார மிக்க
                பயனற்ற பாழ்ச் சொற்களைப்போல்....

                          26-7-2015