விவேகானந்தம்
நீல பத்மநாபன்
பிறரின் தீவினையால்
சுயவதைப்புள்ளாகலாமா?
திடமாய் நில்
தீரமாய் எதிர்கொள்
தீவீரமாய் சுயகர்ம மார்க்கத்தில்
பயணித்திடுவாய்…..
திருப்பிறவி தினத்தில் ஒரு தீனக்குரல்
நீல பத்மநாபன்
பார்வை செல்லும் இடங்களிலெல்லாம்
முழுமையில்லா
பிம்பங்கள்
அரைக்குறை காட்சிகள், கர்மங்கள்..
குறையான நிறைகள்
கோடுக்கு வெளியிலாகிவிட்ட
கோலப்புள்ளிகள்....
பார்வையைத்
தீட்டித்தீட்டி
பழுதாகிப்போன விழிகள்.
அகக்காம்பில் அறைகள் விழுந்தபோது
பகைவனுக்கு அருள்வாய் எனவோ
என்னசெய்கிறோமென செய்யும்
அவர்களை மன்னிப்பாயாக என்றோ
வேண்டத்தெரியாது
இன்னாசெய்தார்க்கு
இனியவை, நல்லவை
அவர்
நாணுமாறு செய்யவும் இயலாது
பரிபூரணன்
பாதத்தில் சரணடைய
சாந்தியும்
சமாதானமும் இல்லாது
நைந்துபோன
உள்ளமுடன்
வெந்துவிட்ட
உறுப்புக்களுடன்
காத்துக்கிடக்கிறான் ஒரு பாவி
25 டிசம்பர் 2014
25 டிசம்பர் 2014