நூறு
நீல பத்மநாபன்
மீண்டும்
வெறிச்சோடிப்போய்விட்ட
அகமும் புறமும்…..
சத்தங்கள் சந்தடிகள்
அதிகமாய் காதுக்குள்
எட்டுவதில்லை
நெருங்கி வந்து குரலைக் கூட்டியும்
அங்கசேஷ்டைகள் செய்தும்
புரியவைக்க முயற்சி.....,
நெற்றியிலும் சிரஸிலும் விபூதி
இடவைத்து
பாதம் தொட்டு நமஸ்கரித்து ஆசி பேறு....,
மாறி மாறி மைக் முன்னாடி போய்
நின்று
வாய் கைகள் ஆட்டி அசைத்து பல்வேறு
முக பாவங்களுடன் நீளமாய் சொற்களின் பொழிவுகள்...,
முன்னால் சிரித்து கையடித்து
ரஸிக்கும் முகங்கள்..,
கண்ணைக் குருடாக்கும் காமறா, வீடியோ வெளிச்ச வீச்சுக்கள்
சாப்பாட்டுப் பந்திகள்...! அரட்டை அளவளால்கள்...
தாம்பூல, இனிப்புப்
பைகள் பெற்று விடைபெற்றுக்கொண்டு
அவரவர் இடங்களுக்கு திரும்பிச்
சென்றுவிட்ட
பிள்ளைகள், பேரர்கள்,
கொள்ளுப் பேரர்கள்,
உற்றம் சுற்றம், தெரிந்தவர்,
தெரியாதவர்கள்,
பக்கத்தில் உள்ளவர், தூர தொலைவு
வாசிகள்...,.
எல்லோரும் எல்லோரும்.....!
விட்டுச்சென்ற பூமாலைகள்...,பொன்னாடைகள்...,
பழ வகையறாக்கள்..,இனிப்புப்
பண்டங்கள்...,
பரிசுப் பொருட்களின் வண்ணக்கலவைப்
பொட்டலக் குவியல்கள்.........
எல்லாம் எல்லாம் சுபமாய்முடிந்து
மண்டபத்திலிருந்து பழையபடி
இந்த இரண்டறை கூட்டுக்குள்
மீண்டும் வெறிச்சோடிப் போய்விட்ட
அகமும் புறமும்...........