வானப்பிரஸ்தம்
நீல பத்மநாபன்
ஒரின சேர்க்கைக்கு
சமூக அங்கீகாரம் ஒரளவுக்கு
வந்துவிட்டதினால்
நட்பெனும் போர்வையில்
ஊரார் பயமின்றி
அடுத்த ஆசிரமம் வரை காத்திராமல்
உடைபடும் முதல் ஆசிரமம்........
மூன்றாவது ஆசிரமத்துக்கானால்
இன்று போக காடில்லைதான்....
நாட்டிலே, வீட்டிலே பயிலலாம்.....
காம உணர்வுகள் அற்றுப்போன
வாழ்க்கைப் பங்காளி பற்றி
இவ்விஷயத்தில் பயமில்லாவிடிலும்
வேறு பல லௌகிகத்தேவைகளுக்காக
வந்துகொண்டிருக்கும் சீண்டல்களை
மறிகடக்கத் தெரியவேண்டும்....
“பட்டறிந்த தேக சுகம் விட்டுப்போகாமல்”
வேறிடங்களுக்கு தலைகாட்டித்
தாவினால்
சீ சீ புளிக்குமென ஒதுக்கிவிடமுயலவேண்டும்...
ஸ்தூலமான லௌகீக வாசனைகளை
ஒரளவுக்கேனும் கட்டுப்பாட்டுக்குள்
நிறுத்த முடிந்தாலும்
உள்ளுக்குள்ளே
புதைந்து கிடக்கும்
சூக்குமமான பிறவி வாசனைகளை
அடக்கி ஆளாவிட்டால்
அனர்த்தங்களை பாரெங்கும்
பறைசாத்த காத்திருக்கும்
ஊடகங்கள்.... கவனம்.....
அடக்கியாளல் அப்பியாசம்
தொடரட்டும் கடைசிவரை.....