கவிதை
செய்வதறியா...........
நீல பத்மநாபன்
பார்க்கலாகாது என
நினைந்தாலும்
பார்த்துவிடும் விழிகள்......
கேட்கக்கூடாதவைகளையும்
கேட்டுவிடும் காதுகள்.....
நஞ்சு
கலந்ததெனத் தெரிந்தும்
சுவைத்துண்ணத் தயங்காத,
கேட்போரை
முள்ளாய் குத்திவிடும்
கூர்
நாக்கு....
இசைவின்றி நாற்றம், மணம், சுற்றுப்புற மாசுக்கள்
பேதமின்றி உள் இழுத்துக்கொண்டிருக்கும்
நாசித்
துவாரம்....
வீடு
வெளி வாயுமண்டலம் நீர் திடப்பொருள்
எங்கெங்கும்
நீக்கமற நிறைந்திருப்பவை
விஷம்,
அல்லாதவை வேறுபாடின்றி
தன்போக்கில் வந்து படிவதையெல்லாம்
ஏற்றுக்கொள்ளும் உடம்பின் தோல் பரப்பு.....
ஐம்பொறிகளே
சுயக்கட்டுப்பாட்டில்
இல்லையென்ற ஞானம் வந்ததும்
பிறரிடம்
குறை காண்பதை நிறுத்தப் பழகலானான்....
அதை
அடைவது முந்திய ஐந்தைவிடகடினமெனக்
கண்டுணர்ந்து இனி செய்வதறியா மூடனானான்...
வால் துண்டு
விநாயகரை பூஜித்தான் ஆஞ்சனேயரை பஜித்தான்
பிரம்மசரியம் கைகூடுவதாய் போக்குக்காட்டியது
காண்பவை
கேட்பவை சுவைப்பவை முகர்பவை
தீண்டுபவைகளால்
பொசுபொசுத்துப்போய்விடுமோவென
அஞ்சி
செயவதறியா.......