Monday, February 24, 2014

பழுது

                                                பழுது
                                   நீல பத்மநாபன்
         குழாயில் தண்ணீர் இல்லை.....
           வாஷர் தேய்ந்து நீர் வடிந்து
           வீணாகிக்கொண்டிருக்கிறது...
           ‘லைட் ஸ்விச்சில் கோளாறு
           ஷாக் அடிக்குது   பியூஸ் போகுது
           உடனடி மாற்றியாகணும்..
           ட்ரிய்னேஜில் கழிவுநீர்
           ஓடிப்போகமாட்டேங்குது...
           மாடியிலிருந்து வரும் சிமண்ட்
           குழாயில் விள்ளல்கள்.....
           குழாயடியில் சிமண்ட் விலகி
           பாசி படர்ந்துவிட்டது...
           அறைக்கதவு அடையமாட்டேங்குது...
            அலமாரி பூட்டில் கோளாறு.....
            கூட வாழவந்தவளிடமிருந்து
            மாறிமாறி வந்துகொண்டிருந்த                         
            புகார்களைத் தீர்க்க ஒழுங்காய்
            ஓடியாடிக்கொண்டிருந்தவன்
            காலக் கொடுங்காற்றில் அடிபட்டு
            இனி பழுது பார்க்கவும் பாங்கில்லாது
            நம்பிக்கையிழந்து பழுதுக்கு அப்பாற்பட்டதை
            நாடியிருப்பதைத் தெரிந்தும் தெரியாது
            சரமாரியாய் எய்யப்பட்டுக்கொண்டிருக்கும்
            புதிதுபுதிதான புகார்கள் குற்றச்சாட்டல்கள்......
             .