Monday, November 25, 2013

துளஸி


கவிதை       
                                    துளஸி
                               நீல பத்மநாபன்
     புதுவீடு கட்டி மனைவி மக்களுடன்
     குடிவந்து சில நாட்களில்
     முற்றத்து சிமண்ட் தரையில்
     பூ ஜாடியொன்று வாங்கி வந்து
     உன்னை நட்டு நீர் வார்த்து ஆசையுடன்
     வளர்த்தத் துவங்கினாள் வீட்டுக்காரி.
     பெரிய ஈடுபாடில்லாதிருந்தும்
     கொண்டவள் ஆசைக்கு குறுக்கே நிற்கவில்லை,,,
           காலைக் குளியலின் புத்துணர்ச்சியில்
     பக்திப்பரவசத்துடன் முற்றத்தில் வந்து
     நீயிருக்கும் ஜாடியிலும் உன் இலைகளிலும்
     குங்கும பொட்டிட்டு இறை துதிகள்
     ஜபித்தவாறு கண்மூடி நின்று உனையும்
     எதிர் திசையிலிருந்து உன் மீது இளம் கதிர்களை
     வாரி இறைக்கும் பால சூரியனையும்
           நமஸ்கரிக்கும்    பொழுதுகள்.....
     விசேஷ தினங்களில் ஊதுவத்திப்புகையாலும்
     கற்பூர ஆரவத்தியாலும் சேவை...
          இப்பொ சில நாட்களாக மேல் சன் ஷேடில்
     குடியேறிய புறாக்களின் கும்மாளம்..
    கும்பிட்டு நிற்பவள் மீது அடிக்கடி நிகழ்ந்த
    எச்சாபிஷேகத்தில் வெகுண்டு
    கிழக்கில் உதிக்கும் சூரியன் மீதா தலைக்கு மேலே
    தருணம் பார்த்து நிற்கும் புறாக்களின் மீதா
    கவனம் செலுத்துவது என தத்தளிக்கும் மனதில்
    உன்னை பிரதிஷ்டிக்கும் அப்பியாசம் தெரியாது
    உனை சேவிப்பதலிருந்த பழைய வேகம்
    மெல்ல குறைவது தெரிந்தது....
    அதோடு குழந்தைகள் கூட கொஞ்ச நாட்கள்
    இருந்துவிட்டு வர அவள் வெளியூர் பயணம்...
        முதலில் சில நாட்கள் அலட்டிக்கொள்ளாத நெஞ்சம்..
    நாள் செல்லச்செல்ல தன் தனிமையுடன்
    உன் தனிமையும் சேர்ந்துகொண்டபோது..
    உள்ளுக்குள் என்னமோ ஒரு .......
    சொல்லத்தெரியவில்லை....
    வெயிலில் நீ வாடி வதங்கி நிற்பதைக் காணும்போது...
    சகிக்கமுடியா மன அவசம்.....
    இப்போதெல்லாம் காலை மாலை வேளைகளில்
    பூஜை அறை புகும் முன்
    ஒரு குவளை நீர் உனக்கு வார்க்கும் போது
    இந்நாள் வரை வெறு யாரிடமிருந்தும்
    கிடைத்தறியா  ஒட்டுணர்வு......