கவிதை
கசிவு
நீல பத்மநாபன்
உணர்ச்சிகள்
குமுறிக் கொந்தளித்துக்
கொண்டிருந்த
காலத்திலெல்லாம்
நேரம் காலமில்லாது
உணர்ந்தும் உணராமலும்
அதன்போக்கில்
வெளியேறிக்கொண்டிருந்த
படைப்பின்
விந்துத்துளிகள்....
இப்போதும்
உணர்ச்சிகள் குமுறிக்கொண்டுதானிருக்கின்றன...
கொந்தளித்துக்கொண்டுதானிருக்கின்றன....
ஆனால்......
அமித ஆவேசத்தின் அலைவீச்சில்லை
வெளியேற்ற, சுயப்பிரக்ஞையுடன்.
மீறி, வெகுண்டெழுந்துவிடமுனைந்தால்
பின்னின்றுப்பிடித்திழுத்து
முடக்கிவிடும்
ஒழுக்கு, ஒழுக்க நிவாரணிகள்.....
இருந்தும், மூளையின் இசைவின்றியே
யாருக்காகவோ கசிந்துகொண்டிருக்கும்
செயல்வலு குன்றாத
சிருஷ்டியின் கருத்துளிகள்.....