Friday, July 5, 2013

முறையீடு

     கவிதை
                   முறையீடு
                               நீல பத்மநாபன்
         மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே..
         அரசு தந்த வாக்குறுதியை மீறியதினால்
         அதோகதியான ஒரு சாதாரண் குடிமகனின்
         கண்ணீரில் குதிர்ந்த முறையீடு இது....
         “பள்ளித்தலமெல்லாம் கோயில் செய்வோம்
         என்று தேசீய மாகவிஞர் பாடியிருப்பது
         தங்களுக்குத் தெரியாதிருக்குமோ.... தெரியல்லே
                    கல்வி கற்பிக்கும் பள்ளித்தலம்
        வாக்தேவதை குடியிருக்கும் கோயிலன்றோ
        அதை கோயிலாய் பராமரிக்கவேண்டாமோ...
        நகரமத்தியில் வேருறைத்த இப்பழம்பெரும்
         கல்விகூடத்தை ஈவிரக்கமில்லாது அழித்துத்தான்
         நவீன பஸ் நிலையம் கட்டவேண்டுமா..?
                  எத்தனை எத்தனை புகழ் வாய்ந்த மகான்கள்
        குருபூதர்களாய் இங்கு கல்வி புகட்டினார்கள்..!
        எத்தனை எத்தனைபேர்களின் அறிவுக்கண்ணை
        அகலத்திறக்கவைத்து அறிவுமதிகளாகக்
        காரணமாக இருந்த கல்விச்சாலை!!
                  பெற்ற தாய் ஹத்யைப்போல் பாபமல்லவா
        எண்ணும் எழுத்தும் போதித்த இறைவிடமென
        போற்றும் பள்ளிக்கூடத்தை அழிப்பது!
        என்னைப்போல் எத்தனை ஏழைப்பாழைகளுக்கு
        இலவசக்கல்வி அளித்துக்கொண்டிருக்கும்
        அரசு உயர்நிலைப்பள்ளி.......!
        பஸ்நிலையத்திற்கென ஆர்ஜிதம் பண்ணிவிட்டு
        குப்பை கொட்டமாட்டீர்களென்பதற்கு
        என்ன உத்தரவாதம், நவீனக் கடைக்கண்ணிக்கென்று
        இடம் ஆர்ஜிதம் பண்ணிவிட்டு இப்பொ
        குப்பைமேடாக்கி அதை பதப்படுத்தும்
        தொழிற்சாலை துவங்கப்போவதைப்போல்!
                      *   *    *
                  அன்று யாருக்கும் வேண்டாத எருமைக்குழியருகில்
       குடும்பசொத்து-மூணு சென்ட் பூமியில் குடிசைகட்டி, குடும்பம்,
       அங்கேயே சின்ன பெட்டிக்கடை,சுற்றி தென்னை,வாழைகள்
       என்று எப்படியோ வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தோம்...
       அப்போதான் எங்க இடத்தையும் சுற்றுவட்ட
     தென்னந்தோப்பையும் எல்லாம் அரசாங்க ஆளுங்க
     வந்து அளந்தாங்க....படம் வரச்சாங்க.....
     என்னா ஏதூன்னு விசாரிச்சப்பொ தெரிஞ்சுது,
     புதிசா கடைக்கண்ணி கட்டப்போறாங்க,
     இந்த இடத்தையெல்லாம் ஆர்ஜிதம் செய்யப்போறாங்க...
     அப்படின்னால் எங்களையெல்லாம் தெருவில்
     தூக்கியெறியப்போறாங்களா.......?பெரிய முதலாளிகளுக்கு
     ஒண்ணுமில்லை....என்னைப்போன்ற சிறிய வியாபாரிகள்
     என்னசெய்வோம், எப்படிப்பிழைப்போம்...
     -அப்படித்தான், எங்கள் வார்ட் கௌன்ஸிலர்,
      தொகுதி எம்.எல்.எ.-இப்படி மக்கள் பிரதிநிதிகள் உங்களை
      எல்லாம் நாடிவந்தோம்.. நீங்க எல்லோரும் சொன்னீங்க;        
      “சாலை பஜார் இப்ப மூச்சுத்திணறுது,
      யாருக்கும் நடந்தோ வாகனத்திலோ வந்து நிம்மதியா
      எதுவும் வாங்க முடிவதில்லே, நடக்க இடமில்லே,
      வண்டிபோட இடமில்லே...கடைக்காரங்க மொத்தமாய்
      கொள்முதல் செய்துகொண்டு வரும் சரக்கு லாரிகள்,
      ட்ரக்குகள் கடைவீதிக்குள்ளே புகமுடியாத நெருக்கடி.....
      நூறாண்டுகளுக்கு முன்னால் மன்னர் காலத்தில்
      செய்யப்பட்ட அகலம் குறைந்த அங்காடி...
      சாலை பஜாருக்கு சமாந்தரமாக தெற்கில் கிடக்கும்
      உங்க குறுகிய தெருவை அகலப்படுத்தப்போகிறோம்..
      எருமைக்குழியைச்சுற்றியுள்ள இடத்தையெல்லாம்
      ஆர்ஜிதம் பண்ணி அரசின் நகர அபிவிருத்தக்குழு
      நவீன அங்காடி வரிசை அங்கெ கட்டி
      கடைகளை உங்களைப்போன்ற தேவையான                           
      வியாபாரிகளுக்குத் தரப்போகிறது...
.      ஜனங்களுக்கு வசதியாக நடந்தோ, வாகனங்களிலோ
      வந்து சகல விதமான சாமான்களும் வாங்கலாம்.
      வேலை முடியட்டும், அங்கே உங்களுக்கும் கடைநடத்த
      இடம் தரச்செய்ய வேண்டியது எங்கள் பொறுப்பு...
     அதுவரை எப்படியாவது சமாளியுங்க......
 -இப்படிநீங்க வாக்குறுதித் தந்து பத்து பதினஞ்சு
 வருசத்துக்கும் மேலிருக்காதா.....! இடைக்காலத்தில்
 நீங்க எல்லா கட்சிக்காரங்களும் மாறி மாறி
 ஆட்சிபீடம் ஏறி இறங்கீட்டீங்க..
     உங்க ஆசைவார்த்தைகளை நம்பி
     குடியிருந்த பூமியை விட்டு தந்தோம்...
     வசதி படைச்சவங்களுக்கு ஒண்ணும் இல்லை..
     எத்தனை காலம் பட்டினிகிடப்பதென்று, என்னைப்போன்ற
     மற்றவங்க கிடைச்ச அற்பப் பணத்தை வாங்கிகிட்டு
    ஊரை விட்டே போயிட்டாங்க...
    நான் எங்கே போவேன்...என்ன செய்வேன்....
    உங்களை எல்லாம் எத்தனையெத்தனை வாட்டி
    வந்து பார்த்திருப்பேன்...!நீங்க சொன்னவாறு
    எத்தனையெத்தனை கருணை மனுக்கள்.....!
    சும்மா கிடந்த இடத்தில் குப்பை கொட்டி கொட்டி....
    இப்ப வெறும் குப்பைமேடு....
    இப்ப நகர அபிவிருத்திக்குழுவே மனமுவந்து
    குப்பைக்கூளத்தை பதனிடும் தொழிற்சாலைக்கு
    கொடுத்துவிட்டாங்களாம்...நகரசபைக்கும் சம்மதம்...
    தேசீய நெடுஞ்சாலை...பள்ளிக்கூடம், பெருமாள், கண்ணகிக்
    கோயில்கள், மசூதி இவற்றின் பக்கத்தில் கிடக்கும் இடம்..
    எங்களைப் போன்ற வியாபாரிகளுக்காக ஆர்ஜிதம் செய்த இடம்...
    உங்க எல்லோரையும், அரசில் சம்பந்தப்பட்டவங்களையும் எல்லாம்
    வந்து பார்த்தோமே...எல்லோருமா உண்ணாநோன்பு போராட்டம்
    கூட நடத்திப்பார்த்தோமே..  உங்க யாருக்கும்
    மனம் கனியவில்லையே...எங்க வாழ்வு மண்ணானது மட்டுமா..
    சுற்றுப்புற மாசின் நஞ்சால் எங்களுக்கெல்லாம் தீராத அவதி..
                             * * *
    அடுத்ததாக இப்ப என்னைப்போன்ற ஏழைப்பாழைகள்
    எழுத்தை கூட்டி வாசிக்கவாவது படித்த இந்த
    அரசுப்பள்ளியை பஸ்நிலையம் எனச்சொல்லி
    கைவைத்திருக்கீங்களே....நவீன அங்காடி காம்ப்ளக்ஸ்
    குப்பைக்கூள பாக்டரி ஆனதுபோல்
    இந்த பள்ளித்தலமும் ஆகிவிடாது
    என்பதுகென்ன உத்தரவாதம்.......?