பம்ப் ஹௌஸ்
எஙகளூரிலும் ஒரு
பம்ப் ஹௌஸுண்டு
பம்பிங்கில்லா ப்ம்ப் ஹவுஸ்..
மன்னராண்ட காலத்தில் திவானின்
கூர்மதியில்
சீமைபொறிநுட்பத்தில் விளைந்த நற்பணி
ஜனப்பெருக்கமிக்கத் தெருக்களின்
இடவசதியில்லா புறாக்கூட்டுவாசிகளின்
கழிவுநீர் கழிவுகள் பாதாளச்சாக்கடை வழி
பம்ப் ஹௌஸ் வந்துசேரும், உயரத்தில் பெரிய
டாங்குகளில்-தொட்டிகளில்
பம்ப்செய்யப்பட்டு
சுத்திகரிப்பு...பின் பக்கத்து நீர்தடத்தில் நிரப்பப்பட்டு...
அங்கிருந்து கடலோர பண்ணைக்கு....
சுற்றுப்புறவாசிகளுக்கு சுற்றுச்சூழல் பிரச்னையின்றி
இராப்பகல் கேட்டுக்கொண்டிருந்த ஹுங்கார நாதம்..
எல்லோரும் இந்நாட்டு மன்னரானதும்.......
பயனாளிகள் பெருகினார்கள்....நீர்த்தடமிருந்த
இடத்தில் இப்போது அடுக்குமாடிவீடுக்ள்...
காலமாற்றத்திற்கேற்ப அபிவிருத்திப்பண்ண
கோடிகள் புரண்டதாய்ச் செய்திகள்....
எங்கே போச்சோ.....என்னவாச்சோ...
இப்பொ உள்ளதும் போச்சு
வீட்டில், வெளியில் கழிவுநீர்
பொங்கிப்பிரவிக்கும் கோரம்....
தெருக்களில், வீதிகளில் பாதாளச்சாக்கடை
பூமிமேல் கழிவுநீர் ஆறாய்
ஓடிடும் கண்கொள்ளா காட்சி....
மழைக்காலத்தில் ஆஹா ஓஹோ....
கண்களும் நாசிகளும் கால்களும் மரத்துப்போய்
நெடுநாளாச்சு ஊர்வாசிகள் எங்களுக்கு.....
வரலாற்று நினைவுச்சின்னமாய்
எங்களூர் பம்ப் ஹௌஸ்....
பம்பிங்கில்லா பம்ப் ஹைஸ்....
நீல
பத்மநாபன்