Tuesday, February 26, 2013


நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா.....
26 ஏப்ரல் 2013நீல பத்மநாபனின் 75 வயது நிறைவு நாள்......

சென்ற ஆண்டுக்கான நீலபத்மம் தலைமுறைகள் விருதுகள்
வழங்கும் விழா 26 ஏப்ரல் 2013 வெள்ளிக்கிழமையன்று மாலை 5.30க்கு தமிழ்ச்சங்கம் பி.ஆர்.எஸ் அரங்கில்
நடைபெறவிருக்கிறது.அவ்வமயம் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் மா திருமலை ,மலையாள மொழி இயல் துறைத் தலைவர் முனைவர் எம்.ஆர். தம்பான், நவீன விருட்சம் ஆசிரியர் திரு. அழகிய சிங்கர், கவிதாயினி திருமதி திலகபாமா, திரு குளச்சல் யூசப் -இன்னும் பல தமிழ், மலையாள அறிஞர்கள் பங்கெடுக்கிறார்கள்.பரிசுபெற்ற கவிதையும் , கதையும் அவற்றின் ஆசிரியர்களே வாசிக்கிறார்கள்.தவிர விழாவில் வெளியிடவிருக்கும் நீல பத்மநாபனின் கவிதைத் தொகுப்பிலிருந்து ஒருசில கவிதைகள் வாசிக்கபடவிருக்கிறது. .சங்கச்செயலாளர் க.வானமாமலையின் ந்கைச்சுவை நிகழ்ச்சி கூத்தரங்கின் சார்பில் மேடையேறுகிறது.  நீலபத்மநாபனின் சில தமிழ், மலையாள  நூல்கள்   வெளியிடப்படுகின்றன.   அனைவரும் வருக. 
                                                                           செயலாளர்
                                                         திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்



Wednesday, February 20, 2013

கவிதை


மனமாசுக்கள் அகன்றிட.....

நீல பத்மநாபன்

பொங்கலோ பொங்கல்

ஆற்றுகால் அம்மைக்கு பொங்கல்

காடும் மலையும் தாண்டி

அனந்த சயனத்தில் அனுக்கிரகம் பொழியும்

புண்ணிய புராதன பூமியில்

வந்து வாழ்ந்தருளும் குடமலைத் தெய்வமே

ஆற்றுகால் அம்மையே

உனக்கு பொங்கலிட்டு வழிபட

குடும்ப கெடுபிடிகளையெல்லாம் மீறி

கூட்டம் கூட்டமாய் ஓடோடி வந்த

உள்ளூர் வெளியூர் மங்கைகள் நாங்கள்

பொங்கல் போடும் உன் திருமுற்றம் இந்நகரம்

எங்கெங்கும் குவிந்து உயரமாய் எழுந்துநிற்பது

குப்பைக்கூளங்களின் மாசுமலையன்றோ....

அவை எரிந்துயரும் நச்சுப்புகையில்

கறுத்திருண்ட ஆகாயமதில்

இப்போதெல்லாம் கருடனல்ல கரும்சிறகுகள்

வீசி,கூர்மையான நகங்கள் நீட்டி பொங்கல்

பானைகளை பறித்திட வட்டமிடும் பருந்துகள்..

“தெரியாதாடீ உனக்கு, இந்த காந்தளூர்’சாலை’

இப்ப இந்த பட்டணத்தின் விளப்பில்சாலையாம்

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வரும்போது

இங்கெல்லாம் குப்பைக்கூளங்களை கொணர்ந்து

இறக்கும் லாரிகள் வரிசையாக இருக்குமாம்

அப்பொ அவங்கவங்க வீட்டில்தான் பொங்கல்”



குப்பைக்கூளங்களின் இடையில்

ஆயிரமாயிரம் அடுப்புக்களில்,

கோயில் பண்டார அடுப்பிலிருந்து பகர்ந்து

வந்த அக்கினி ஜ்வாலையில்

பொங்கி வழியும் பொங்கலோ பொங்கல்...

ஆற்றுகால் அம்மைக்கு பொங்கல்

எங்களையும் உன்னையும் இந்த துர்கதிக்கு

ஆளாக்கியவர்களின் மனமாசுக்கள் அகன்றிட

பொங்கலோ பொங்கல்.....



விளப்பில் சாலை= புறநகர் பகுதியில் நகர குப்பைக்கூளங்களைக் கொணர்ந்து இயற்கை உரம் தயாரிக்க ஆர்ஜிதம் செய்யப்பட்ட இடம். பத்து அண்டுகளாய் உரத்தொழிற்சாலைத் தொடங்ப்படாமல் குப்பைக்கூளங்களை குவித்துக்கொண்டிருந்ததால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்ட அப்பகுதி வாழ் மக்களின் எழுச்சிக் காரணமாய் கடந்த ஒராண்டு காலமாய் இந்நகர குப்பைக்கூளங்கள் அங்கு கொண்டுப்போகப்படுவதில்லை.

. 2013



Tuesday, February 19, 2013

நேற்று இன்று


        கவிதை


                                                  நேற்று
                         இன்று
                                 நீல பத்மநாபன்
                தன் காரிய சித்திக்காக
                பரஸ்பரம் சிரம் கொய்து
                பொன் தாம்பாளத்தில் வைத்து
                ஐயனே உம் பாதாரவிந்தத்தில்
                சுயம் சமர்ப்பித்து
                சிந்தை குளிர்ந்திருந்தோம் நாங்கள்..........
                உம்மை தூக்கியெறிந்த பின்னர்
                சாட்டைவார் வீசி
                                    இட்டுச்செல்ல நாதனின்றி
                பரஸ்பரம் பழி கூறி
                தந்த கோபுரத்தில்
                தம் போக்கில் ஆடிக்களிக்கிறோம்......