கவிதை
இப்படியும் சில
நாட்கள்
நீல
பத்மநாபன்
சில நாட்கள் இப்படித்தான்
விடிகின்றன ஏனோ.......
எதையெதையெல்லாமோ செய்து தீர்க்க
வெம்பும் மனமுடன் தீவிர சித்தமுடன்
முழுமுனைப்பில் களத்தில் இறங்கினால்
எதிர்பாராமல் குறுக்கே வந்து
விழுந்து
கதிகலங்கச் செய்துவிடும் ‘சகுனம்
முடக்கிகள்’.....
கூடவே வாழ்கிறவர் கூர் சொல்லாக
இருக்கலாம்…,
தொலைதூரத்திலிருந்து செவிவழி புகும்
தொலைபேசி குரல்...,. மின் தடை..,.கணினிக் கோளாறு..,
முன் அறிவிப்பின்றி வரும் விருந்துகள்…
இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ…!
இவற்றிலிருந்தெல்லாம் மீண்டு
வருகையில்
மரத்துப்போய்விடும் உள்ளம்...,உறுப்புக்கள்....
அன்றைய தினமும் வெறுமனெ
பாழாய் முடிந்துவிடப்போகிறதே......,
மீதியிருக்கும் அற்பசொற்பம் ஆயுள்
ஏட்டில்
ஒரு தாள் கூட அநியாயமாய்
காலகாற்றில் பறந்து
மறைந்துபோகவேண்டியதுதானா?
அயர்ச்சி..., ஆதங்கம்....முடியப்போகும் நாளின்
அந்திம யாமத்தில் மனம் குமைந்து
தலைச்சாய்க்க எண்ணுகையில்...
எங்கிருந்து, எப்படியென்றுத் தெரியவில்லை
ஜில்லென்று, உள்ளுக்குள்ளே
பாலாழியாய்
நுரை ததும்பி பொங்கும்
உன்மத்தம் கொள்ளவைக்கும் உற்சாக
போதை.....,ஊக்கம்........
அதில் மீண்டும் உருத்தெரியும் கர்ம
மார்க்கம்...,சுதர்மம்...,
விக்கினங்கள் எல்லாம்
கரைந்துருகி....!
விஜய தசமி
24-10-2012.