Monday, September 24, 2012


 கவிதை
                விலாபம்  
    சாலையும், ஆரியசாலையும்,
    பழையசாலையும், புத்தன்சாலையும்,
    வலியசாலையும்.....
    ஏன், பழம் பெரும் புகழ் வாய்ந்த
    இந்த வரலாற்று மகிமை கொண்ட
    காந்தளூர் சாலையையே
    விளப்பில் சாலையாக்கிவிட்டார்களே
    இன்று உன் நாட்டை ஆளவந்தவர்கள்...
    கொடிபிடிக்கவும் கோஷம் போடவும்
    பொலீஸ், பட்டாள சேனையை எதிரிடவும்
    நேரமில்லாது அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு 
    அல்லல்பட்டு ஓடி நடக்கும் பாமர மக்கள் நாங்கள்
    நரர்களாய் இங்ஙனம் பிறந்தோம் பூமியில்
    இந்நகர வாரியின் நடுவில் 
    இந்நரகத்திலிருந்து கரையேற்றுங்கள்
    திருவனந்தை வாழும் பெருமாளே...

                 கொலைவெறி
    கை வெட்டுவோம், கால் வெட்டுவோம்
    குலம் குத்துவோம், சவம் குத்துவோம்
     மந்தபுத்திகள், மனநோயாளிகளை
     வெறிநாய்களைப்போல் அறைந்து கொல்வோம்
     நோய்ப்படுக்கையில் கைகால் மரத்துப்போய்க் கிடக்கும்
     வயசாளி பெண்ணாக இருந்தாலும்
     காம பூர்த்திக்கு இரையாக்குவோம்
     தந்தையை ஹத்திசெய்யும் தனையர்கள்.....
     குழந்தைகளை கொன்றிடும் தாய்த் தந்தையர்
     இன்னும், இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்
     -இதுதான் இன்றைய எங்கள் புண்ணிய புராதன பூமி....

                                      நீல பத்மநாபன்