Monday, May 28, 2012

ஆளுக்கொரு சாமி

கவிதை

ஆளுக்கொரு சாமி

நீல பத்மநாபன்

குடும்ப வீட்டில் தனியாய் இல்லை பூஜையறை; காலைப்பொழுதுகளில் அப்பா கடைக்குப்போகும் அவசரத்தில் சாமி கும்பிடுவதை சின்னநாட்களில் பார்த்த நினைவில்லை. செவிவளையங்கள் ஒடிந்தும் ஒடியாமலும் தொங்கும் மூக்குக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு பாட்டி தனியாய் ராமாயணம் வாசிப்பாள், மாலைக்கருக்கலில் அம்மா வெளிநடையும் உள்நடையும் அலம்பிவிட்டு நடுக்கூடத்தில் கிழக்குபார்த்திருக்கும்,நெல் உமியால் அழுத்தித்தேய்த்து பளபளவென மின்னும் பித்தளை குத்துவிளக்கில் செம்பரத்திப்பூவோ முற்றத்து முல்லை அரும்புச்சரமோ சூடி குங்குமப்பொட்டிட்டு துடையில் திரித்த வெள்ளைத்திரியிட்டு எண்ணையூற்றி ஏற்றும் தீபச்சுடரில் சீதேவியே ஒளியாய் வீடெங்கெணும் நீக்கமற நிறைவதாய் உணர்வு. இரவு எத்தனை மணியாயினும் அப்பா வீடுதிரும்பியதும் குளித்து சுத்தமாகி விபூதி தரித்து அவர் அறையில்மாட்டியிருந்தபுன்முறுவல்பூக்கும் பாலமுருகன் படத்தின் முன் கண்மூடிகைகூப்பி வணங்கி நின்று சற்று நேரம் மவுனபிரார்த்தனை செய்யாமல் உணவு புசித்து பார்த்ததேயில்லை. அவன் வீடுகட்டும்போது அலைக்கழிக்கும் மனதை நிம்மதியாய் இறைநினைவில் சிலகணநேரமேனும் மூழ்கச்செய்திட சாமிப்படங்களைவைத்திடபீடமும் விளக்கேற்றிட முன்னால் வசதியும் உள்ள சின்னஒருபூஜைஅறையையும் கட்டிடமறக்கவில்லை அந்நாளிலிருந்து பாட்டி அப்பா அம்மா யாவரும் காலபாசம் வசம் சென்றுவிட்ட இந்நாள்வரை மனைவிமக்கள்,ஏனைய உற்றம்சுற்றம் உடல்நலம் குழந்தைகள் படிப்பு வேலை திருமணம் மேலும் வாழ்வில் இதுவா அதுவா என்று தத்தளிக்கும் இக்கட்டான கட்டங்களிலெல்லாம் வீட்டில் அனைவருக்கும் பூஜைஅறைஅடைக்கலம் வைகறைகளில் முதல்வேலையாய் முந்தையநாள் உலர்ந்த மலர்களை சாமிபடங்களிலிருந்துஅப்புறப்படுத்தல், சிறுகும்பாவில் சுத்தநீர் சமர்ப்பித்தல் முற்றத்து விரிந்தும் விரியாத பூக்கள் சூடல் வீட்டில் எல்லோரும் ஒத்துழைத்தார்கள் குழந்தைகள் இறக்கைமுளைத்து வெளியூர் பறந்துசென்றபின இல்லக்கிழவிக்கு குனிந்துநிமிர கூடவில்லை;அவள் அறையிலேயே குனியாமல் நிமிர்ந்து நின்று பூசூட,தீபமேற்றி தொழுதுநிற்க சின்னபீரோவின் மேலே அவள் சாமிகள்..... பூஜைஅறை சாமிகள்முன் புலர்காலைஉலர்ந்த் பூக்கள் அகற்றுவதிலிருந்துத்தவங்கி பூசூடல், காலைமாலை தீபமேற்றல் எல்லாம் அவன் மட்டும்... எப்போதாவது வீடுவரும் புதல்வர்புதல்விகள், பெயரன் பெயரத்திகள் வீட்டுக்காரிவழியே பிந்தொடர வீடும்நாடும் நலம்பெற வீட்டிலிருப்பவர்கள் எல்லாம் ஒன்றுகூடி ஒரேஇட சாமியைத் தொழுவதின் மகிமைப்பற்றி எண்ணிக்குமைந்துகொண்டிருந்த அவனுக்கு ஆறுதல் அளித்தது அருவிப்புறம் பிரதிஷ்டை.