Tuesday, March 20, 2012

வார பலன்

கவிதை

வார பலன்

நீல பத்மநாபன்

சின்ன நாளிலிருந்தே துவங்கிய
தின வார மாத இதழ்களில் வரும்
சோதிட பலன்கள் பார்க்கும் வழக்கம்
நிறுத்தமுடியாமல்இன்றும் தொடரும் பலகீனம்
பகுத்தறிவுக் கட்சிகளின் தாக்கத்தால்
மூடநம்பிக்கையெனசிலகாலம் தலைதாழ்த்தியிருந்தும்
மீண்டும் தொத்திக்கொண்ட கொடுமை
பார்ப்பதால்மட்டும் நம்புவதாய் கொள்ளமுடியாதே
-தனக்குத்தானே சமாதானம் சமாளிப்பு
சில இதழ்களில் ராசி-கும்பம்
சிலவற்றில் நட்சத்திரம்-பூருருட்டாதி
ஆங்கிலமாததேதியும் சிலதில்
ஒன்றில் பொருள் வருகை ,
வேறொன்றில் பெரும் நஷ்டம் ,
ஒன்றில் சகோதரர்களின் உதவி ,
இனியொன்றில் அவர்களுடன் சணடை.
முரணானவை ஒன்றுக்கொன்று;மட்டுமல்ல, வாகனவிபத்து கவனமென வாசித்தும்
தடுக்கத்தெரியாது பைக் மோதி
ஆஸ்பத்திரியில் கிடந்த அனுபவம் .
மனைவிமக்களிடம் சண்டை.
நண்பர் பகைவராகலாம் .
வேலையில் இடமாற்றம்.
வெளிநாட்டு பயண வாய்ப்பு.
கலைத்துறையில் புகழ் ,
அவமதிப்பு,
இத்யாதி இத்யாதி
நடந்தவை சில் நடக்காத்வை பல
இருந்தும் விடமுடியாத
தேவைத்தீமையாய்த் தொடரும் போதை .
திடுக்கிடவைத்து கூடவே ரகசியமாய்
கொஞ்சம் தெம்பும் அளித்த இவ்வாரபலன் ;
-பெண் சுக யோகம்
பெண்டாட்டியிடமிருந்து கிடைக்க வாய்ப்பே இல்லை
தூரத்தொலைவிலிருந்து எப்போதாவது வரும்
புத்திரிகள்பேத்திகள் தொலைபேசி அழைப்பு மூலம்?
தொலைவிலிருந்து எப்போதாவது வரும் சோதரிகள்?
மாணவ பருவத்தில்,வேலைபார்க்கையில்,யாராரும் அறியாது உள்ளுக்குள் ஆராதித்த ஏதாவது மங்கைநல்லாள்?
வாரம் முடிந்து கொண்டிருந்தது,
நாளை அடுத்த இதழில், எதிபார்த்து ஏமாற்றம் என
பலன் வரப்போகிறதோ-எண்ணியவாறு நடக்கையில்
வழி மறிக்கும் வீடு திரும்பும் பள்ளிச்சிறுமி,
தோளில் தொங்கும் புத்தகப்பையிலிருந்து
அவசர அவசரமாய் ஒரு நோட்டுபுத்தகத்தை உருவி
வெற்று பக்கமொன்றை விரித்து நீட்டி
’அங்கிள் ஒரு ஆட்டோகிராப்’
கள்ளம் கபடமறியா முகம்
‘என்னைத்தெரியுமா’
‘ஓ தெரியுமே ஒங்க கவிதை படிச்சிருக்கேனே’